Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.
என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும், (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!
என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.
என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.
அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: முஸ்லிம்
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer