Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)
இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள் காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று சொல்லிக்காட்டுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.
ஸம் ஸம் நீரால் கழுவப்பட்ட இதயம்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது.பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்.
முதல் வானத்தில்:
'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள்.இரண்டாவது வானத்தில்:
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள்.
மூன்றாவது வானத்தில்:
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
நான்காவது வானத்தில்:
பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
ஐந்தாவது வானத்தில்:
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்.
ஆறாவது வானத்தில்:
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஏழாவது வானத்தில்:
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள்.
''அல் பைத்துல் மஃமூர்''
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார்.''சித்ரத்துல் முன்தஹா''
பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
ஐந்து வேலைத்தொழுகை கடமையாக்கப்பட்டது
பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. (நூல்: புகாரி, எண் 3207)
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக) வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத் தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல் கூறினார். (நூல்: முஸ்லிம்)
இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்:
ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை (வானவர்களை) அல்லாஹ் நியமித்துள்ளான்.
அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
அல்-பைத்துல் மஃமூர் (பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்) வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள். ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
ஒரு முறை தொழும் வானவர் 70,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
படிப்பினைகள்:
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை கடமையாக்கினான். பின்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவுரையின் பேரில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும், சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரி, எண் 3241)
படிப்பினைகள்:
எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது; அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு தெளிவாக்குகிறது.'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர்.
'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி, எண் 304)
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற முன்வரவேண்டும்.
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861)
படிப்பினைகள :
புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில் விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில் வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். நூல்;புஹாரி ]
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும். (நூல்: புகாரி, எண் 7048)
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல. மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும் உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர்.
அதோடு இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம். இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் எவர் எதை சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer