Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி.............
இடுகையிட்டது
நன்மையை நாடி
On வெள்ளி, 28 அக்டோபர், 2011
ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.
அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!"என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.
"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"
அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும்தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருக்கும் ஹாஜிகள்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.
அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.
அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.
"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.
"நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை"அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
மற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)
ஆகவே, நபிவழியின் அடிப்படையில் இந்த அரஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer