Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான்.
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer