முஸ்லிம் உயரிய பண்புகளையுடைய சமூக சேவகராக இருப்பார். அவர் உயரிய மனிதநேய குணங்களைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் சமூகத்தோடு உறவாடும்போது அந்தக் குணங்களை வெளிப்படுத்த வேண்டுமெனவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
சமூக உணர்வுடைய முஸ்லிமின் பண்புகள், திருக்குர்அனின் ஒளிமயமான வழிகாட்டுதலையும், பரிசுத்தமான நபித்துவ நடைமுறைகளையும் கொண்ட தனித்தன்மை வாய்ந்த பண்புகளாகும். அவை மனித மூளைகளால் உருவாக்கப்பட்ட சமூகவியல் சட்டங்களுடன் ஒப்பிட முடியாதவை. சிந்தனையாளர்களாலும், தத்துவ மேதைகளாலும் மிகுந்த சிரமத்துடன் உருவாக்கப்பட்ட நெறிகளுடனும் ஒப்பிட முடியாதவையாகும்.
இஸ்லாம் வலியுறுத்தும் சமூக அமைப்பு மிகவும் உயர்வானதாகும். அது நற்பண்புகளின் ஒட்டுமொத்த இணைப்பாகும். அப்பண்புகளை கைக்கொள்பவர் நன்மையளிக்கப்படுவார்; அவைகளை விடுபவர் அல்லாஹ்வின் சமூகத்தில் குற்றவாளியாவார். எனவே, உண்மை முஸ்லிமின் நடத்தையில் மேம்பட்ட சமூக வாழ்வுக்கான முன்மாதிரியை மனிதகுலம் பெற்றுக்கொள்ள முடியும்.
திருக்குர்அன், நபிமொழிச் சான்றுகளை ஆழ்ந்து நோக்குபவர் அவைகளின் விசாலத்தையும் நுட்பத்தையும் கண்டு திகைத்துப்போவார். எனெனில் அச்சான்றுகள் சமூக வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் தொட்டு நிற்கின்றன. எல்லா விஷயங்களிலும் தனித் தன்மையான கருத்துகளைக் கொண்டுள்ளன. ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறதோ அத்தகைய பரிசுத்தமான உயர்வின்பால் வழிகாட்டுகின்றன. எவரது இதயத்தில் இஸ்லாமின் அடிப்படைகள் உறுதியாகிவிட்டனவோ அவர் நிச்சயமாக இந்த உயரிய நிலையை அடைந்தே தீருவார்.
இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பின் அடிப்படை என்னவென்றால் சமூக ரீதியான தொடர்புகளிலும், தனி மனித உறவுகளிலும் அல்லாஹ் எற்படுத்திய வரம்புகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இறையச்சமுள்ள முஸ்லிம் தனது வாழ்வில் சமூகத்துடன் இணைந்து வாழும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நன்கறிவார். வாய்மையாளரான முஸ்லிம் இந்த உறுதியான அடிப்படையின் மீதே தனது சமூக உறவை அமைத்துக் கொள்வார்.
வாய்மையாளர்
உண்மை முஸ்லிம் எல்லா மனிதர்களுக்கும் உண்மையானவராக இருப்பார். இஸ்லாம் உண்மை பேசுவது நற்குணங்களில் அடிப்படையானது எனக் கற்றுத் தருகிறது. “உண்மை’ அதன் சொந்தக் காரரை சுவனத்தின்பால் சேர்த்து வைக்கும் நன்மைகளைச் செய்யத் தூண்டுகிறது. அவ்வாறே “பொய்’ நரகத்தின்பால் சேர்த்து வைக்கும் பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உண்மை நற்செயலின்பால் வழிகாட்டும். நற்செயல் சுவனத்தில் சேர்த்துவிடும். நிச்சயமாக உண்மையே பேசுகிறவர் அல்லாஹ்விடம் அவர் உண்மையாளர் என எழுதப்படுகிறார். பொய் பாவங்களின்பால் வழிகாட்டும். ஒரு மனிதன் பொய்யுரைத்தால் இறுதியில் அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என எழுதப்படுகிறான்.” (ஸஹீஹுல் புகாரி)
இதனால் முஸ்லிம் வாய்மையாளராகத்தான் இருப்பார். தனது சொல், செயலில் உண்மையை மட்டுமே உரைப்பார். அம்மனிதர் அல்லாஹ்வின் சமூகத்தில் உண்மையாளர் என எழுதப்படுவது மிக உயரிய அந்தஸ்தாகும்.
எமாற்றுபவராக, நேர்மையற்றவராக, மோசடிக்காரராக இருக்கமாட்டார்
முஸ்லிம், நேர்மையற்றவராகவோ மோசடிக்காரராகவோ இருக்கமாட்டார். எனெனில் அவர் வாய்மையாளராக இருப்பதால் பிறர் நலம் நாடுவது, மனத்தூய்மை, நீதி, நேர்மை போன்ற நற்பண்புகளையே விரும்புவார். மோசடி, வஞ்சம், நேர்மையின்மை போன்ற குணங்களை விரும்பமாட்டார்.
உண்மை முஸ்லிமின் மனசாட்சி மோசடித்தனத்தைச் சகித்துக் கொள்ளாது. அதிலிருந்து விலகிச் செல்லவே அவரைத் தூண்டும். அக்காரியங்களை செய்தால் இஸ்லாமிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோம் என அவர் அஞ்சுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் நமக்கு எதிராக வாளை ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர். எவர் நம்மை மோசடி செய்கிறாரோ அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் மற்றொரு அறிவிப்பில் காணப்படுவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒர் உணவு தானியக் குவியலை கடந்து சென்றபோது தனது கரத்தை அதனுள் நுழைத்தார்கள். தனது விரல்களில் ஈரத்தைக் கண்டபோது “உணவு தானியத்தின் உரிமையாளரே! இது என்ன?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! மழைதான் காரணம்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அந்த ஈரமானதை மக்கள் பார்க்கும் வகையில் மேல் பகுதியில் வைத்திருக்க வேண்டாமா? மோசடித்தனம் செய்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
இஸ்லாமிய சமுதாயம் நேசம், பிறர் நலம் பேணுவது என்ற அடிப்படையின் மீது நிர்மாணிக்கப்பட்டதாகும். இஸ்லாம் நேர்மை, உண்மை மற்றும் உபகாரம் செய்வதை தனது உறுப்பினர் மீது விதியாக்கியுள்ளது. அதனால்தான் நன்றி மறப்பவன், எமாற்றுக்காரன், வஞ்சகன் போன்றவர்களுக்கு அதில் இடமில்லை.
நபி (ஸல்) அவர்கள் மோசடி செய்பவன் விஷயத்தில் மிகக்கடினமான நிலையைக் கொண்டிருந்தார்கள். அவனை சமுதாயத்திலிருந்து நீக்கிவைப்பதுடன், உலக முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். மேலும், அவன் மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் மறுமை நாளில் தனது மோசடித்தனத்திற்கு அடையாளமாக ஒரு கொடியை கரத்திலேந்தி வருவான். அவனது மோசடித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் மலக்குகள் சப்தமிட்டு அதைக் கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் ஒவ்வொரு மோசடிக்காரனிடமும் ஒரு கொடி இருக்கும், இது அவனது மோசடித்தனம் என அறிவிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அவன், தான் செய்த மோசடித்தனங்கள் கால ஒட்டத்தால் அழிந்திருக்கும் என்று எண்ணியிருக்க, படைப்பினங்கள் அனைவரின் முன்னிலையிலும் மோசடித்தனத்திற்குரிய என்ற கொடியை கையிலேந்தி வருவது எத்தகு அவமானம்?
மோசடிப் பேர்வழிகளின் துரதிஷ்டமும் கவலையும் மறுமை நாளில் அதிகரித்துக்கொண்டே செல்லும். நபி (ஸல்) அவர்கள் ஷஃபாஅத் செய்யும் அந்த அரிய சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்ு தஅலா அந்த மோசடிக்காரர்களுக்கு எதிராக வாதிடப்போகிறான்” என்று அறிவிக்கப்படும். ஏனெனில், அது அல்லாஹ்வின் அருளைத் தடுத்துவிடும் மாபெரும் குற்றச் செயலாகும். அதனால் மறுமை நாளில் கருணை நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் என்ற மகத்தான பாக்கியத்திலிருந்து அகற்றப்படுவார்கள்.
அல்லாஹ்ு தஅலா அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று நபர்களுடன் நான் மறுமை நாளில் வாதிடுவேன். 1.என் பெயரால் சத்தியம் செய்து பின்பு மோசடி செய்தவன் 2.சுதந்திரமான ஒருவரை அடிமையெனக் கூறி விற்று அவரின் கிரயத்தை சாப்பிட்டவன் 3. தனது வேலைக்கு கூலிக்காரரை அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலை வாங்கிக் கொண்டு அவருக்கு கூலி கொடுக்காதவன்.” (ஸஹீஹுல் புகாரி)
முஸ்லிமின் உணர்வுகளை இஸ்லாம் மதிக்கிறது. சிந்தித்து செயல்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்துள்ளது. அவர் பொருளீட்டும்போது பொய், மோசடி, அநீதம் போன்ற குணங்கள் தலைதூக்கிவிடாமல் கவனமாக இருப்பார். அதனால் அவருக்கு எவ்வளவு இழப்பு எற்பட்டாலும் சரியே. ஏனெனில் இந்த குணங்கள் உடையவனை இஸ்லாம் நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்க்கிறது. நயவஞ்சகர்களுக்கு மறுமையில் உதவுவார் ஒருவருமில்லை. அவனுக்கு நரகின் அடித்தளமே நிரந்தரமாக்கப்படும்.
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காண மாட்டீர் (அல்குர்அன் 4:145)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவனிடத்தில் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழுமையான நயவஞ்சகனாவான். எவனிடத்தில் அதில் எதேனும் ஒன்று இருக்கிறதோ அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒருகுணம் அவனிடத்தில் இருக்கும். 1. அவன்மீது நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான் 2. பேசினால் பொய்யுரைப்பான் 3. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் 4. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
பொறாமை கொள்ளமாட்டார்
பொறாமை கொள்வது இறையச்சமுடைய முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற குணமாகும். நபி (ஸல்) அவர்கள் பொறாமை என்ற இழிகுணத்தைப்பற்றி வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள்: “ஒர் அடியானின் இதயத்தில் இமானும் பொறாமையும் ஒன்று சேராது.” (ஸஹீஹ் இப்னு ஹ்ிப்பான்)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ழமுரா இப்னு ஸஃலபா (ரழி) அறிவிக்கிறார்கள்: “மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலமெல்லாம் நன்மையின் மீதே நிலைத்திருப்பார்கள்.” (முஃஜமுத் தப்ரானி)
உண்மை முஸ்லிமின் அடையாளம், அவரது இதயம் மோசடி, பொறாமை, வஞ்சம் போன்ற தீய குணங்களிலிருந்து பரிசுத்தமானதாக இருப்பதாகும். அந்த மனத்தூய்மையே அவரை சுவனத்தில் சேர்ப்பிக்கும். அவர் பகல் முழுவதும் நோன்பிருந்து இராக்காலங்களில் நின்று வணங்கவில்லை என்றாலும் சரியே.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் “இப்போது உங்களிடத்தில் ஒரு சுவனவாசி வருகை தருவார்” என்றார்கள். அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளுச்செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார். இடக்கரத்தில் செருப்பைப் பற்றியிருந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதர் அதே கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம்மனிதரை அப்துல்லாஹ்பின் அம்ரு இப்னு அஸ் (ரழி) பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் “நான் என் தந்தையிடம் வாக்குவாதம் செய்தேன். மூன்று நாட்களுக்கு அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். அந்தக்காலம் முடியும்வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா?” என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித்தோழர் “சரி’ என பதிலளித்தார்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை. ஆனாலும் தூக்கத்தில் விழிப்பேற்பட்டு படுக்கையில் புரண்டபோது அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத் தொழுகைக்கு எழுவார். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன். மூன்று இரவுகள் கடந்தபின் அவரது அமல்கள் மிகக் குறைவானது எனக்கருதி அவரிடம் நான் கூறினேன் “அல்லாஹ்வின் அடியாரே! எனக்கும் எனது தந்தைக்குமிடையே கோபமோ வெறுப்போ கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக “உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார்” என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள்தான் வந்தீர்கள். நான் உங்களது அமல்களை கவனித்து உம்மைப் பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன். ஆனால் உமது அமல்கள் பெரிதாகத் தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்?” என்று கேட்டேன். அவர் “நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை” என்றார். நான் திரும்பிச் செல்ல முயன்றபோது என்னை அழைத்து “நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை. எனினும் நான் எந்த முஸ்லிமையும் மோசடி செய்ய வேண்டும் என்று எண்ணியதில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை” எனக்கூறினார். அப்துல்லாஹ் (ரழி) “அதனால்தான் இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள். அதற்கு நாங்கள் சக்தி பெறவில்லை” என்று கூறினார்கள். (ஸன்னனுன் நஸயீ)
முஸ்லிம் தனது மறுமையை நோக்கிய பயணத்தில் போட்டி, பொறாமை, மோசடி போன்ற பாவச்சுமைகளுக்கு இதயத்தில் இடமளிக்காமல் தூய மனதுடன் இருந்தால், மிகக் குறைவான வணக்கமாக இருந்தாலும் அல்லாஹ் அதை அங்கீகரித்து உயர் அந்தஸ்தை வழங்குகிறான் என்பது இச்சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது. நபி (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட மனிதர் குறைவான வணக்கத்தையே கொண்டிருந்தாலும் பிறர் மனம் புண்படாதவகையில் மனதை செம்மைப் படுத்தியதால் சுவனம் செல்கிறார்.
ஒரு பெண் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் கண்டோம். அதாவது, அப்பெண் இரவு முழுவதும் நின்று வணங்கி பகல் காலங்களில் நோன்பு வைக்கிறாள். ஆனால் அண்டை வீட்டாருக்கு இடையூறு தருகிறாள் என்று கூறப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் “அவளிடத்தில் எந்த நன்மையும் கிடையாது; அவள் நரகவாசி” என்றார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
இஸ்லாமியத் தராசில் தன்னை எப்போதும் எடை போட்டுப் பார்ப்பவர் தனது வணக்கங்கள் குறைவாக இருப்பினும் தனது இதயம், பொறாமை, மோசடி போன்ற குணங்களிலிருந்து தூய்மையாக இருப்பது அவசியம் என்பதைப் புரிந்து கொள்வார். அவர் இஸ்லாமிய சமூகம் என்ற கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ள தூய்மையான கற்களைப் போன்றவர்.
பிற மனிதர்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு இடையூறளிப்பது, பொறாமை, கோபம் போன்ற இழி குணங்களால் இதயம் இருண்டுபோன மனிதர், பெரிய வணக்கசாலியாக இருப்பினும் இஸ்லாமின் தராசில் அவரது நன்மையின் தட்டு கனமற்றுப் போய்விடும். அவர் சமூகம் என்னும் மாளிகையில் பதிக்கப்பட்ட உடைந்துபோன செங்கலைப் போன்றவராவார்.
முன்மாதிரியான முஸ்லிம், சமூக நல்லிணக்கம் பேணி, தூய மனதையும், சிறந்த இறைவணக்கத்தையும் ஒருங்கே கொண்டிருப்பவராவார். அவரது உள்ளும் புறமும் சமமானதாகவும், அவரது சொல்லும் செயலும் உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இத்தகைய பண்புகளைக் கொண்ட முஸ்லிம்களால் சமூகக் கோட்டை உறுதியடையும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் கட்டிடத்தில் ஒன்றுக்கொன்று வலுசேர்க்கும் கற்களைப் போன்றவர்கள் எனக் கூறினார்கள்.
பிறர்நலம் விரும்புவார்
உண்மை முஸ்லிம் இத்தகைய இழிகுணங்களிலிருந்து விலகியிருப்பதுடன் சமூக மக்கள் அனைவரிடமும் நன்மையை நாடுவது போன்ற ஆக்கப்பூர்வமான பண்புகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வார். எனெனில் மார்க்கம் என்பதே பிறர் நலம் பேணுவதுதான். நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தையே வலியுறுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்” நாங்கள் கேட்டோம் “யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?” நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களின் பொதுமக்களுக்கும்” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
கண்ணியமிகு ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது ஜகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நலம் நாடுவது ஆகியவைகளுக்காக வாக்குப் பிரமாணம் செய்தார்கள்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் தொழுகையை நிலை நாட்டுவதற்கும், ஜகாத் கொடுப்பதற்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவதற்கும் நபி (ஸல்) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்தோம்.” (ஸஹீஹுல் புகாரி)
தொழுகை மற்றும் நோன்புடன் பிறருக்கு நன்மை நாடுவதையும் இணைத்ததன் மூலம் அதற்கு இஸ்லாமில் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மறுமை நாளில் நல்ல முடிவை விரும்பும் இறையச்சமுடைய முஸ்லிமின் பண்புகளில் இது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு முஸ்லிம் ஆனைய முஸ்லிம்களின் பொறுப்பை நிர்வகிக்கும்போது இந்த நற்குணம் அவரில் மிகைத்து நிற்கவேண்டும். இதுதான் அவரது மறுமையின் மீளுமிடத்தை உறுதி செய்கிறது. இதுதான் சுவனம் புகுவதற்கான திறவு கோலாகும். உலக வாழ்வில் இப்பண்பு களைப் பேணாதவர் மறுமையில் சுவனம் புகுவது தடையாகிவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு அடியானை அல்லாஹ் சிலருக்கு அதிகாரியாக ஆக்கியிருந்தான். அவன் தனது அதிகாரத்தின் கீழ் இருந்தவர்களுக்கு மோசடி செய்த நிலையில் மரணமடைந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில்: “தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் மீது முழுமையாக நன்மையை நாடாதவன் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டான்” என்று கூறப்பட்டுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: “முஸ்லிம்களின் காரியங்களுக்கு பொறுப்பேற்றுள்ள தலைவன் அவர்களுக்காக உழைக்காமலும், அவர்களுக்கு நலம் நாடாமலும் இருந்தால் அவன் அம்மக்களுடன் சுவனம் புகமாட்டான்.”
அதிகாரம் பெற்றவருக்கும், முஸ்லிம்களின் விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளவருக்கும் மகத்தான கடமையை இஸ்லாம் விதித்துள்ளது. “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்” என்ற நபிமொழி சமூகத்தில் ஒவ்வொரு மனிதரும் கடமையைக் கொண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறது.