ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.
உமர் (ரழி) அவர்கள் தனது விதவை மகளான ஹஃப்ஸா (ரழி) அவர்களை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரிடத்தில் கேட்டுக்கொண்டபோது அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணியது, அவர்கள் ரகசியம் பேணுவதில் எத்தகு சிறப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதற்குச் சான்றாகும்.
அப்துல்லாஹ இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) அவர்கள், தனது மகள் ஹஃப்ஸா (ரழி) விதவையானபோது கூறுகிறார்கள்: நான் உஸ்மான் (ரழி) அவர்களைச் சந்தித்து அவரிடம், ''நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை மணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். உஸ்மான் (ரழி) ''என் விஷயத்தில் நான் யோசனை செய்து கொள்கிறேன்'' என்றார். சில நாட்கள்வரை நான் எதிர்பார்த்திருந்த பின், உஸ்மான் (ரழி) என்னைச் சந்தித்து, ''இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கமில்லை'' என்று கூறிவிட்டார். பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களை சந்தித்து, ''நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரழி) எதுவும் பதில் கூறாமல் மெளனமாக இருந்தார். அப்போது நான் உஸ்மான் (ரழி) மீது கோபம் கொண்டதைவிட அதிகமாகக் கோபமடைந்தேன்.
சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள்; மணமுடித்துக் கொடுத்தேன். அப்போது அபூபக்கர் (ரழி) என்னைச் சந்தித்து, ''நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்பதற்காக என் மீது கோபமடைந்தீர்கள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நான் ''ஆம்'' என்றேன். ''நீங்கள் என்னிடம் கூறியபோது என்னை பதில்கூறத் தடுத்த காரணம் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பற்றி (விசாரித்ததை) நினைவு கூர்ந்ததை நான் அறிந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நான் ஹஃப்ஸாவை ஏற்றுக் கொண்டிருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ரகசியம் பேணுவது, நமது முன்னோர்களான ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என அனைவரிடமும் இருந்தது.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். என்னை அழைத்து ஒரு வேலைக்காக அனுப்பி வைத்தார்கள். என் தாயிடம் நான் தாமதமாகச் சென்றபோது, ''ஏன் தாமதம்?'' என்று என் தாய் கேட்டார். நான், ''நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வேலையாக அனுப்பி வைத்தார்கள்'' என்றேன். என் தாயார், ''என்ன வேலை?'' என்று கேட்டார். நான் ''அது ரகசியம்'' என்றேன். தாயார், ''நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பற்றி எவரிடமும் சொல்லிவிடாதே...'' என்று கூறினார்.
அனஸ் (ரழி) அவர்களின் மாணவர் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், ''ஸாபித்தே! அல்லாஹவின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தை யாரிடமாவது நான் சொல்வதாயிருந்தால் அதை உம்மிடம் சொல்லி இருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அனஸ் (ரழி) அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணுவதில் தனது மகன் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்த்து அதற்கு மதிப்பளிக்கிறார்கள். அவர் யாரிடமும் சொல்லிவிடாதே என்று கூறியதால் அந்த ஹதீஸை அறிவிக்கும் ஸாபித்துல் புனானி (ரஹ்) அவர்களிடமும் கூறவில்லை. அந்தத் தாய் தனது சிறிய மகன் தன்னிடம் மறைக்கும் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதுதான் இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சியாகும். அது ஆண், பெண், சிறுவர் என அனைவரையும் உயர்வை நோக்கி இட்டுச் செல்வதற்கான வழிமுறையாகும்.
ரகசியத்தை வெளியிடுவது மனிதனை பெரிதும் பாதிக்கும் இழிவான செயலாகும். வாழ்வில் தானறிந்த அனைத்தையும் வெளியிடுவது என்பது முறையற்ற செயலாகும். பல விஷயங்களை மறைப்பதில் மனிதனின் ஆண்மை, கம்பீரம், கெளரவம், கண்ணியம் போன்றவை காக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இல்லறம் சம்பந்தமான விஷயங்களில் ரகசியம் பெரிதும் பேணப்பட வேண்டும். அறியாமையும் மூடத்தனமும் நிறைந்த பைத்தியக்காரனே அதை வெளிப்படுத்துவான். அவன் அல்லாஹவிடம் இழி மக்களில் ஒருவனாக கருதப்படுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''மறுமைநாளில் அல்லாஹவிடம் மனிதர்களில் மிகக் கீழ்த்தரமானவன் யாரெனில் அவன் தனது மனைவியை நெருங்குகிறான். அவளும் கணவனுடன் இணைகிறாள். பின்பு அவளது அந்தரங்கத்தை பிறரிடம் வெளிப்படுத்துகிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசுவது
மார்க்க சட்டங்களை நன்கறிந்த முஸ்லிம் நுண்ணறிவு மிக்கவராகவும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவும் அவர்களுக்கு தீமை செய்வதிலிருந்து விலகியுமிருப்பார். அவர் உரையாடும் கலையை நன்கறிவார். அதில் சிறந்த பண்பு, மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசாமல் இருப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உணர்வுள்ள முஸ்லிம் மேன்மையான அணுகுமுறையும், சிறந்த அறிவுடையவராகவும் இருப்பார். சபையில் மூன்று நபர் மட்டும் இருக்கும் நிலையில் ரகசியமாகவும் கிசுகிசுப்பாகவும் பேசுவது அவருக்குத் தகுதியல்ல. அதனால் அங்கு இருக்கும் மூன்றாம் நபரின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மனநெருக்கடியும் வெறுப்பும் தோன்றிவிடும். ஒருவரிடம் மட்டும் பேசியே தீரவேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த மூன்றாம் நபரிடம் அனுமதி பெற்று, அவரிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, சுருக்கமாகப் பேசிட வேண்டும்.
உள்ளங்களில் இஸ்லாம் ஊடுருவி, இஸ்லாமியப் பண்புகளும் போதனைகளும் உதிரத்தில் கலந்து நின்ற நபித்தோழர்கள் மக்களோடு பழகும் சூழ்நிலைகளில் அவர்களது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதிலிருந்து எப்போதும் பின்தங்கியதில்லை.
அவர்களது உன்னதமான சமூக வாழ்க்கையைப் பற்றியும், மனித உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பைப் பற்றியும் அறிவிக்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அப்துல்லாஹ இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக் கொண்டார்கள்.
இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ''நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்'' என்றார்கள். (அல் முவத்தா)
இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள்.
பெருமை கொள்ளாதவர்
உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும்
அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல்குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான். (அல்குர்ஆன் 28 : 83)
கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ விரும்ப மாட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 31: 18)
நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையை ஆராய்ச்சி செய்பவர் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெறிய வேண்டும். இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக அவர் திகைத்து விடுவார்.
நபி (ஸல்) அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவருடைய இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவனம் புகமாட்டார்.'' ஒரு மனிதர் கேட்டார், ஒருவர் தனது ஆடைகள், பாதணிகள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். (அது பெருமையடிப்பதாகுமா?) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ அழகானவன். அழகாக இருப்பதையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களை இழிவாக எண்ணுவதுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)
ஹாரிஸா இப்னு வஹப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் ''உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.'' (ஸஹீஹுல் புகாரி)
ஆணவம் கொண்டோரை அல்லாஹ மறுமைநாளில் பார்க்க மாட்டான் என்பதே அவர்களை இழிவுபடுத்தப் போதுமானதாகும். பூமியில் அவர்கள் பெருமையடித்துத் திரிந்து மக்களிடம் ஆணவமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர்களோடு பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இது மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கும் உணர்வுப் பூர்வமான இழிவாகும். இது நரகில் வீசி எறியப்பட்டு வேதனை செய்யப்படும் உடல் ரீதியான துன்பத்தைவிட சற்றும் குறைந்ததல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ மறுமை நாளில் பார்க்க மாட்டான்.'' (ஸஹீஹுல் புகாரி)
மேலும் கூறினார்கள்: ''மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஏனெனில், பெருமை என்பது அல்லாஹவின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹவின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர். மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்.
''கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்'' என அல்லாஹ கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இதனால்தான் நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையில் இதுகுறித்த எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. பலவீனமான மனித இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வினாடியில் கூட அகந்தை எனும் நோய் உள்ளத்திற்குள் புகுந்துவிடாமல் முஃமின்கள் காத்துக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
பணிவுடையவர்
பெருமையடிப்பவர்களைப் பற்றியும், அவர்கள் மறுமையில் அடையவிருக்கும் இழிவு, வேதனை குறித்த பல சான்றுகள் உள்ளன. அதுபோன்றே பணிவைப் பற்றி ஆர்வமூட்டும் சான்றுகளும் உள்ளன. பணிவுடையவர்கள் அல்லாஹவின் ஏவலை ஏற்று பணியும் போதெல்லாம் அவர்கள் அல்லாஹவிடத்தில் உயர்வும் மேன்மையும் அடைகிறார்கள்.
அதற்கான நபிமொழிகளில் சில:
''எவரேனும் அல்லாஹவிற்காகப் பணிந்தால் அவரது அந்தஸ்தை அல்லாஹ உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ முஸ்லிம்)
''பணிவாக இருங்கள். நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அகந்தை கொள்ள வேண்டாம், அநியாயம் செய்ய வேண்டாம்'' என அல்லாஹ எனக்கு வஹீ அறிவித்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை பணிவிலும், அடக்கத்திலும், மென்மையிலும், பரந்த மனப்பான்மையிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டால்கூட அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லி, அவர்களை மகிழ்வூட்டி, புன்னகை புரிவதற்கு அவர்களின் நபி என்ற அந்தஸ்து தடையாக அமையவில்லை.
அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் உரைப்பார்கள். மேலும் கூறினார்கள் ''நபி (ஸல்) அவர்களும் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் பணிவைப் பற்றி அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ''மதீனாவின் அடிமைப் பெண்களில் ஓர் அடிமைப் பெண் நபி (ஸல்) அவர்களின் கரம்பற்றி தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வாள். நபி (ஸல்) அவர்கள் அவளது தேவையை நிறைவேற்றித் தருவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)
இஸ்லாமிய சட்டங்களைக் கேட்டறிய தமீம் இப்னு உஸைத் (ரழி) மதீனாவுக்கு வருகிறார். அந்தப் புதியவர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவரான நபி (ஸல்) அவர்களுக்கும் தனக்குமிடையே தடையாக எவரும் இல்லாமல் மிம்பரில் நின்று நபி (ஸல்) மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே விளக்கம் கேட்கத் துணிந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பணிவோடும், அன்போடும் அவரை முன்னோக்கி அவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். அது குறித்து தமீமே கூறுகிறார் கேட்போம்:
''நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களைச் சென்றடைந்தேன். 'அல்லாஹவின் தூதரே! மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்த புதிய மனிதர் (நான்)' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் உடனே என் பக்கம் திரும்பினார்கள். தனது பிரசங்கத்தை விட்டுவிட்டு என்னருகே வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதன்மீது அமர்ந்தார்கள். அல்லாஹ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். பிறகு பிரசங்கம் செய்யத் தொடங்கி அதைப் பூர்த்தி செய்தார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு எளிமையும், பெருந்தன்மையும் கூடிய பணிவையும் கற்றுக் கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஓர் ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதியை விருந்தாக்கி அந்த விருந்துக்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.'' (ஸஹீஹுல் புகாரி)
என்னே அவர்களது பணிவு...! எளியோரையும் அவர்கள் மதித்த பாங்குதான் என்னே...!
பரிகாசம் செய்யமாட்டார் பணிவை விரும்பவேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறரை கேவலமாகக் கருதுவது, பரிகாசம் செய்வது என்பதெல்லாம் வெகுதூரமான விஷயமாகும். பணிவை விரும்ப வேண்டும், பெருமையடிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் பிறரைப் பரிகாசம் செய்யக் கூடாது, கேவலமாகக் கருதக் கூடாது என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹவினிடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்). அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறைகூற வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு (தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். விசுவாசம் கொண்டதன் பின்னர் கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அக்கிரமக்காரர்கள். (அல்குர்ஆன் 49:11)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவன் தனது முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)