இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13)
ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன் 4:48)
"ஷிர்க்'கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார். முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.
கப்ருகளை வணங்குவது "ஷிர்க்" அகும்
இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத் தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.
ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில் வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்... (அல்குர்அன் 17:23)
இறைத் தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.
... அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக் கூடும்?... (அல்குர்அன் 2:255)
(நபியே! நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும், எதேனும் திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: "யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன், (யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப் நவாஸ்') என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!..... (அல்குர்அன் 7:194)
கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக் கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன் நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக் கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்! என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)
நபி அவர்கள் கூறுகிறார்கள்: "யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்'' (ஸஹீஹுல் புகாரி)
சிலர் கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது....(அல்குர்அன் 10:107)
இவை போன்ற இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.