ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
இஸ்லாம் மக்கள் மீது உள்ள ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை இந்த ரமலான் மாதத்தில் நினைவு கூரும்போது அத்துடன் நினைவுக்கு வரும் மற்றொரு கடமை ஸகாத்துல் பித்ராவாகும். புனித நோன்பை ஒட்டி விதியாக்கப்பட்ட கடமையாக ஸகாத்துல் பித்ரா விளங்குகிறது.
அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அதுபோன்றே ஒரு மனிதன், மற்ற மனிதனுக்கு செய்ய வேண்டியதும் முக்கியமான கடமையாக்கப்பட்டுள்ளது. இரண்டையும் ஒருங்கே நிறைவேற்றுவதுதான் இபாதத் வணக்கம் என்று இஸ்லாம் கருதுகிறது.
அல்லாஹ்வுடைய ஏவலுக்குக் கட்டுப்பட்டு ஒருமாதம் நோன்பு நோற்று விட்டு அடுத்த நாள் பெருநாள் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட தயாராகும் போது நாம் மட்டும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாடக் கூடாது. நம்முடன் நோன்பிருந்தவர்வகளும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாட வகை வேண்டும் என்பதற்காகத்தான் ஸகாதுல்பித்ராவை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹுதஆலாவின் திருப்பொருத்தத்தைப் பெறுவதும் அவனை வணங்கிட வழிபட்டு அவன் தயார்படுத்திவைத்துள்ள சுவனத்தை அடைவதுமே ஒரு முஸ்லிமின் இலட்சியமாகும்.
இதனை அடைந்து கொள்வதற்கான ஒரேவழிமுறை அல்லாஹ்வினால் தரப்பட்ட தீனுல் இஸ்லாத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கமைய பின்பற்றுவதாகும்.
இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டாயக்கடமைகள், விருப்பத்துக்குரிய செயற்பாடுகள் யாவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி தனிமனிதனும், சமூகமும் பயன்பெறும் விதத்திலேயே அமைந்துள்ளன. ஸதகதுல்பித்ரா என்ற இக்கைங்கரியமும் இதே வரையறைக்கு உட்பட்டதாகவேயுள்ளது.
ஸகாதுல் பித்ர் எனப்படுவது ரமழான் மாதத்துக்குரிய ரமழான் மாதத்திலேயே நிறைவேற்றப்படவேண்டிய வணக்கம் ஒன்றாகும். அல்-குர்ஆனிலும் ஹதீஸிலும் ஸகாத், ஸதகா என்ற பதங்கள் சமூகத்தில் நிலவும் வறுமையை அகற்றி மக்களிடையே பொருளாதார சுபீட்சமொன்றை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஸதகதுல் பித்ராவும் வறுமையை அகற்றும் நடவடிக்கையொன்றாக அமைந்திருப்பது அவதானிக்கத்தக்கதாகும். இக்கடமை ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டிலேயே விதியாக்கப்பட்டுள்ளது.
ஸதகதுல் பித்ரா தொடர்பான ஹதீஸ்களில் இமாம் இப்னு அப்பாஸ் (ரலி) இமாம் இப்னு உமர் (ரலி) இருவரும் கடமை என்பதைப் புலப்படுத்தும் “பரழ”, “அமர” என்ற பதங்களையே உபயோகித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். பித்ரா விடயத்தில் பின்வரும் இரண்டு ஹதீஸ்கள் பிரதானமாக அமைந்துள்ளன.
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களான சுதந்திர அடிமையான ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் அனைவர்மீதும் திராட்சை, கோதுமை என்பவற்றிலிருந்து ஒரு ஸாஉ அளவை ஸதகதுல் பித்ராவாக விதியாக்கியுள்ளார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் நோன்பாளி அர்த்தமற்ற மோசமான வார்த்தைகளைப் பேசியிருந்தால் அவ்வழுக்குகளிலிருந்து தூய்மை பெறவும், ஏழை எளியவர்களுக்கு (மிஸ்கீன்) உணவு கொடுக்கவும் வசதியாக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஸதகதுல் பித்ரை விதியாக்கியுள்ளார்கள். தொழுகைக்கு முன்னர் (பெருநாள் தொழுகை) இதனை நிறைவேற்றினால் அது அங்கீகரிக்கப்பட்ட ஸதகதுல் பித்ராவாக அமையும். தொழுகையின் பின்னர் நிறைவேற்றப்படின் அது சாதாரண தர்மம் (ஸதகா) ஒன்றாகவே கருதப்படும் (அபூதாவுத்)
பித்ராவின் நோக்கங்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஸகாதுல் பித்ரின் நோக்கங்களாக இரண்டு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1. நோன்பாளியைத் தூய்மைப்படுத்துதல்
2. ஏழை எளியவர்களுக்கு உணவளித்தல்
பித்ரா விதியாக்கப்பட்டவர்கள்:
பித்ரா என்ற இக்கடமை முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் அனைவர்மீதும் விதியாக்கப்பட்டுள்ளது என்பதை இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு உறுதிசெய்கிறது. பித்ராவை நிறைவேற்றுவதில் குடும்பத் தலைவனின் பொறுப்பு பாரியதாகும்.
அவன் தனது மனைவி மக்களுக்காகவும் வேலையாட்களுக்காகவும் பித்ராவை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாட்டுக்கு உள்ளாகின்றான்.
பித்ரா விதியாவதற்கான ஒரேயொரு நிபந்தனை பெருநாள் தினத்தில் தனதும் தனது பராமரிப்பில் உள்ளவர்களதும் பகல், இரவு உணவு உட்பட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தபின் எஞ்சியதாக பொருளாதார வசதியைப் பெற்றிருப்பது மட்டுமே. இவ்வசதியைப் பெறாதவர்கள் மீது கடமையாகமாட்டாது.
ஷாபிஈ இமாமின் கருத்துப்படி பால்குடி குழந்தைகளுக்காகவும் அக்குழந்தைகளின் பெற்றார் / பாதுகாவலர்கள் பித்ரா கொடுப்பது கடமையாகும். ஸகாதுல் பித்ர், பணக்காரர்களுக்கு மட்டுமன்றி ஏழை எளியவர்களுக்கும் தானதர்மம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது விசேட அம்சமொன்றாகும்.
பித்ராவின் அளவுத் தொகை
பித்ராவுக்குரிய தானியமாக நாட்டில் பிரதான உணவாகக் கொள்ளப்படும் தானியம் கருதப்படுகின்றது. இதனை ஷாபிஈ மத்ஹபும் அங்கீகரித்துள்ளது. பித்ராவின் அளவுத்தொகை யாது என்ற விடயத்தில் ஒரு ஸாஉ ஒரு ஸாஉ என்பது 5 1/3 இறாத்தலுக்கு சமமானது.
இதனை தற்காலத்தில் 2751 கிராம்களுக்கு சமப்படுத்தலாம். சுருங்கக்கூறின் ஒருவர் தனது இரு கைகளையும் சேர்த்து தானியத்தை நான்கு தடவைகள் அள்ளிப்போடுவதற்கு சமமானதாகும் எனலாம்.
சமகால இஸ்லாமிய அறிஞரான கலாநிதி யூஸ¤ப் அல்கர்ழாவி குறிப்பிடுகையில் குறிப்பிட்ட பொருளுக்குப் பகரமாக வேறு பொருட்களையோ, பணத்தையோ கொடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
பித்ரா நிறைவேற்றப்பட வேண்டிய காலம்
பித்ரா நிறைவேற்றப்படுவதற்கான குறித்தகாலம் பெருநாள் தொழுகைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என்பதையும் பெருநாள் தொழுகையின் பின் வழங்கப்படுவதை ஸதகாவாகவே கணிக்கப்படும் எனவும் ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.