Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
'முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)
''நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகை படைக்கும்போதே இறைவன் வரையறுத்துவிட்டான் என்பதையே மேற்படி இறைவசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்கு ஆரம்பகாலம் முதல் அரேபியர்கள் முஹர்ரம் மாதத்தை புனித மாதங்களில் ஒன்றாகவே கருதி வந்தனர். முஹர்ரம் என்ற சொல்லுக்கு ‘விலக்கப்பட்டது’ என்றொரு பொருளும் உண்டு.
ஆரம்பத்தில் கடமையாக இருந்தது:
குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷூரா தினம் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர், நபியவர்களும் அன் நாளில் நோன்பு நோற்றார்கள். நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்ததன் பின், தானும் அன் நாளில் நோன்பு நோற்றதோடு ஸஹாபாக்களையும் ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் பின் ஆஷூரா நோன்பை விட்டு விட்டார்கள். உங்களில் நாடியவர்கள் (ஆஷூரா) நோன்பை நோற்கலாம், நாடியவர்கள் விடலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).நபி யவர்கள் மதீனாவுக்கு வந்து போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பிருப்பதைப் பார்த்தார்கள். இது என்ன? என நபியவர்கள் யூதர்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்கள் இது ஒரு மகத்தான நாளாகும், இது போன்ற ஒரு நாளில் தான் அல்லாஹ் மூஸாவை பாதுகாத்தான், பிஃர்அவ்னின் கூட்டத்தாரை மூல்கடித்தான். மூஸா நன்றி செலுத்தும் விதமாக நோன்பு நோற்றார் என்றனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக நான் மூஸாவுக்கும், அந்த நோன்பிருப்பதற்கும் மிகத் தகுதியுடையவன் நபியவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் ஏவினார்கள்'' (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).
முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:
ரமழானுக்குப் பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்).
பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் வரை செய்வது காலம் முழுக்க நோன்பு நோற்பதைப் போன்றாகும். அரஃபா நாள் நோன்பு கழிந்த ஒரு வருடத்தின், வரும் ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என எண்ணுகிறேன். ஆஷூரா தின நோன்பு வரும் வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் என எண்ணுகின்றேன்'' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்).
யூதர்களுக்கு மாற்றம்:
''நீஙகள் ஆஷூரா தினத்தில் நோன்பிருங்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்னாலோ பின்னாலோ ஒரு நாள் நோன்பிருங்கள்.'' என் நபிகள் நாயகம் ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்).ஆஷூரா தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள், ஸஹாபாக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் புனிதப்படுத்துகின்ற ஒரு நாளாயிற்றே என்று கூறப்பட்ட போது நாம் வரக்கூடிய வருடம் பிறை ஒன்பதிலும் நோன்பிருப்போம் எனக்கூறினார்கள். ஆனால் நபியவர்கள் அதற்கு முன்னரே மரணித்துவிட்டார்கள்'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,அஹ்மத்).
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம்
''முஹர்ர்ரம்'' இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு''விலக்கப்பட்டது'' என்று பொருள். முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம, இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
(உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் ''தக்பீர் தஹ்ரீம்'' என்றும், உம்ரா, ஹஜ்ஜுக்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் ''இஹ்ராம்'' என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை-விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் ''ஹரம்''-புனித எல்லை- என்றும், ''மஸ்ஜிதுல்ஹராம்''- புனிதமான பள்ளி வாசல்-என்றும் சொல்லப்படுகிறது.)புனித மாதங்கள்-அஷ்ஹுருல் ஹுரும்
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். (அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.
இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்.
குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட ''முஹர்ரம்' என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.இந்த மாதத்தில் தான் ''ஆஷூரா'' என்னும் நாள் வருகிறது. இந்த ''ஆஷூரா'' என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது ''பத்தாவது நாள்'' என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் ''திஷ்ரி'' மாதமும் அரபிகளின்''முஹர்ரம்'' மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு ''நானே இறைவன்'' எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர்.
அதைக்கேட்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் , ''அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்'' என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர். அது மட்டுமன்றி ''வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு.ஆதாரம்: முஸ்லிம்)யூதர்களின் வழிமுறைக்கு மாற்றமாக ஆஷ§ரா நாளுக்கு முந்தைய தினமான 9ம் நாளும் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இனிவரும் காலங்களில் நான் உயிருடனிருந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் நான் நோன்பு நோற்பேன்’ என நபி(ஸல்) கூறினார்கள். நூற்கள்: புகாரி, முஸ்லிம்.
முஹர்ரம் மாதத்தில் ஹிஜ்ரத்தை நினைவு கூர்ந்து, 9 மற்றும் 10ம் நாட்களில் ஆஷுரா நோன்பை நோற்று பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்பாய் அதனை பயன்படுத்து கொள்வோமாக!
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
வட்டி ஒரு பெரும் பாவம்
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!