Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
‘ உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்” (1: 4).
அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மற்றுமொரு ஆதரம்:
இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”(காஃபிர் 40: 60).
நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் ‘பிரார்த்தனை அது தான் வணக்கமாகும் எனக் கூறிவிட்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (திர்மிதி).
“(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” (என்று கூறுவீராக.) (2: 186).
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும்! அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக்கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக்கூடியக் காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”
.
‘அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.” (7: 197).
‘மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது: எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்;லாஹ்;வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது, இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது, தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.” (அல்ஹஜ் 22: 73).
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள், அவர்(களால் பிரார்த்திக்கப் படுபவர்)களும் படைக்கப்பட்டவர்கள் ஆவார்கள் அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர், மேலும், எப்பொழுது எழுப்பப் படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான், எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன – மேலும் அவர்கள் (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (16: 20-22).
இதே கருத்தில் வரும் இந்த வசனங்களையும் பார்வையிடவும்:
(மர்யம் 19: 48), (அல் அஹ்காஃப் 46: 4). (ஆஃபிர் 40: 66). (அஸ்ஸூமர் 39: 38). (பாஃதிர் 35: 40).
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர், ஆனால், அவன் அவர்களை(ப் பத்திரமாக)க் கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணை வைக்கின்றனர். (அல் அன்கபூத் 29: 65).
‘எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி). (திர்மிதி, ஸஹீஹூல் ஜாமிஃ).
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer
வட்டி ஒரு பெரும் பாவம்
1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!