மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் "ரபீவுல் அவ்வல்" மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது. இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு நமது பிரதேசங்களில் "மௌலித், மற்றும் "திக்ர்" வைபங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக அரசியல் பிரமுகர்கள் முதல் சாதராண பிரஜை வரை அழைக்கப்பட்டு மிக விமர்சையாகக் கொண்டாடுவதை நாம் அறிவோம்.
எனவே இம்மாதத்தில் பக்திப்பரவசத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற, குறிப்பாக "மீலாத் விழா" விற்கும் நபிகள் நாயகம் அவர்களின் வழி முறைக்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி "காய்தல், உவர்தல் இன்றி" நடுநிலையுடன் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
மீலாத் கொண்டாட்டம் நபிவழியைச்சார்ந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்கு முன் அல்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் அவர்களின் பொன் மொழிகளிலிருந்தும் இஸ்லாத்தைக் கற்றறிந்த இமாம்களின் தீர்ப்பில் இருந்தும் அடிப்படையான சில விதிகளை முன்வைக் கின்றோம். அவைகளுக்கு அமைவாக மீலாத் கொண்டாட்டம் அமையப்பெற்றிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஒத்துப்பாருங்கள். குழப்பங்கள் அகன்று சத்தியம் மலரும் இன்ஷா அல்லாஹ்"
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இருபத்தி மூன்று வருட நபித்துவக் காலத்தில் கழிவறை ஒழுக்கங்கள் முதல் ஆட்சி முறை வரை தமது தோழர்களுக்கு கற்றுக்கொடுக்காது இந்த உலகைப் பிரியவில்லை என்பதை பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.
ஒருவர் ஸல்மான் (ஸல்) அவர்களிடம்: உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான காரிங்களைக் கூட உங்களுக்கு கற்றுத்தந்துள்ளார்களே! என (இழிவாக) க் கேட்ட போது ஆமாம் (உண்மைதான்) நாம் மல சலம் கழிக்கின்ற போது வலதை உபயோகிக்கக் கூடாது என்றும் மூன்று கற்களை விட குறைவானவற்றில் சுத்தம் செய்யக் கூடாது என்றும் மிருக விட்டையினாலோ, எலும்பினாலோ, சுத்தம் செய்யக் கூடாது என்றும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர். (அது பற்றி பெருமைப்படுகின்றோம்) என பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).
இஸ்லாத்தில் எவரும் தமது விருப்பு, வெறுப்புக்களை புகுத்தி விடாத வண்ணம் கழிவறை ஒழுக்கங்களையே கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள் மீலாத் விழா பற்றி தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்காது மௌனமாக இருந்திருப்பார்களா? அவ்வாறு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்குமாயின் மனிதர்களால் அசிங்கமாகக் கருதப்படும் கழிவறை ஒழுக்கங்கள் பற்றி அறிவித்த நபித்தோழர்கள் மீலாத் விழா பற்றி அறிவிக்காதிருந்திருப்பார்களா? என சிந்திக்க வேண்டும். அரஃபாத் திடலில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து உரையாற்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா? எனக் கேட்ட போது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே! என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர்" (புகாரி).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் உருவெடுக்கும் குழப்பங்கள், கொடியவன் தஜ்ஜால், மற்றும் மறுமை சார்ந்த பல அடையாளங்களை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் மீலாத் கொண்டாட்டம் பற்றி கூறாது விட்டிருப்பார்களா? என சிந்தித்தால் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும். மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டதற்கான சில சான்றுகள் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதை அல்லாஹ் தனது திருமறையில் உறுதி செய்கின்றான். அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இமாம்களும் உறுதி செய்துள்ளனர். அதனைப் பின்வருமாறு கவனிப்போம். அல்குர்ஆனிலிருந்து:
இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அத்:5. வச:3). - இந்த வசனத்தை அறிந்திருந்த ஒரு யூதர் உமர் (ரலி) அவர்களிடம் அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதி வருகின்றீர்கள். அது யூதர்களாகிய எம்மீது இறக்கப்பட்டிருக்குமானால் அந்த நாளை பெருநாள் தினமாக எடுத்திருப்போம் என்றார். அது என்ன வசனம் என உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது, இன்றைய தினம் உங்களது மார்க்கத்தைப்பூரணப்படுத்தி, எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி, இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். (5:3) என்ற பொருளுடைய வசனம் எனக் கூறினார். அதற்கு அந்த நாளையும், அது அருளப்படட்ட இடத்தையும் நாம் அறிவோம் எனக் கூறிய உமர் (ரலி) அவர்கள் "அரஃபாத் திடலில், ஒரு ஜும்ஆத்தினத்தில் அவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறங்கியது எனப்பதிலளித்தார்கள். ( புகாரி: ஹதீஸ் இல:45, 4407, 4606, 7268 ).
இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேசமான நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்கள் நடாத்துவது யூத, கிரிஸ்தவர்களின் நடைமுறையுடன் தொடர்புடைய பழக்கம் என்பதையும் சுன்னாவிலிருந்து விளங்க முடிகின்றது.
எவர் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697).
நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி ஹதீஸ் இல:7288).
மேற்படி ஹதீஸ்களின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நபிகள் நாயகத்தின் வழி முறையுடன் மாத்திரம் நின்று கொள்ளுமாறு பணிக்கின்றன.
இமாம்களின் கூற்றிலிருந்து: நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக்காத ஒன்றை மார்க்கமாக்கிச் செய்வோரைக் கண்டிக்கும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:
"எவன் ஒருவன் ஒரு (பித்ஆவை) புதிய வழிமுறையை உருவாக்குவதோடு, அதனை அழகியதாகவும் காணுகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியில் மோசடி செய்துவிட்டதாகவே எண்ணுகின்றான்" என குறிப்பிடுகின்றார்கள். இமாம் இப்னுல் காசிம் (ரஹ்) அவர்கள் நவீன வழிமுறைகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிக் கண்டிக்கின்ற போது பின்வருமாறு கூறினார்கள்.
பித்அத்வாதியாக இருக்கும் எவனும் நபிகள் நாயகத்தைக் குறைகண்டவனே. அவன் அந்த பித்அஃ (புதிய வழிமுறை) மூலம் அவர்களை கௌரவிப்பதாக மனப்பால் குடித்தாலும் சரியே! அந்த வழிமுறையை கண்மூடித்தனமாக, விபரமின்றிப் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் அதனை சுன்னத்தாக (நபிவழியாக) எண்ணிக் கொள்கின்றான். அதில் (நவீன வழிமுறைதான் என்பதில்) தெளிவுள்ளவனாக இருந்தால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நோவிக்கின்றான். எனக் கூறினார்கள். (ஆதார நூல்: ஷரஹுல் ஜாமியிஸ் ஸகீர்.பாகம்: 1.பக்:40).
மார்க்கத்தின் பெயரால் புதிய வழிமுறைகளை தோற்றுவிப்போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தூதுத்துவப்பணியில் குறைகாணுபவராகவே இருக்க முடியும். ஏனெனில் இது போன்ற புதிய வழி முறைகளை தோற்றுவிப்போர் மறுமையில் "ஹவ்ழுல் கவ்தர்" நீர்த்தடாகத்தை நோக்கி நீரருந்த வருகின்ற போது "வானவர்கள்" அவர்களை தடுத்து நிறுத்துவார்கள். அப்போது எனது "சமுதாயத்தவர்!! "எனது சமுதாயத்தவர்!" (அவர்களை விட்டு விடுங்கள்) எனக் குரல் கொடுப்பேன். அப்போது வானவர்கள்: "(முஹம்மதே!) உமது மரணத்திற்குப் பின் என்னென்ன புதிய வழிமுறைகளை அவர்கள் உருவாக்கினர்"! என்பதை நீர் அறியமாட்டீர் எனக் கூறுவர். அப்போது, எனக்குப்பின்னால் (மார்க்கத்தில்) மாற்றம் செய்தோர் இறையருளிலிருந்து தூரமாகட்டும்! தூரமாகட்டும்! என நான் கூறுவேன். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்).
இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரு பெருநாட்கள்:
வருடத்தில் இரு பெருநாட்களையே இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது. எனவே அதில் அனுமதிக்கப் படாத ஒரு நாளை விஷேசதினமாக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதும் கூட அங்கீகரிக்கவில்லை என்பதை பின்வரும் நபிமொழி உறுதி செய்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் இரு நாட்களை ஓதுக்கி விளையாடுவதைக் கண்டார்கள். இந்த இரு நாட்களும் என்ன (எதற்காக விiளாடுகின்றீர்கள்) என கேட்ட போது அதில் "ஜாஹிலிய்யா" அறியாமைக்காலத்தில் விளையாடும் வழக்கமுடையோரக இருந்தோம் எனக் கூறினர். அவ்விரு நாட்களைவிட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு பகரமாக தந்துள்ளான். (அவைதாம்) ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்பு பெருநாளும் எனக் கூறினார்கள். (அபூதாவூத். ஹதீஸ் இல: 1134).
வருடத்தில் இரண்டு நாட்களை தேர்வு செய்து அறியாமைக் காலத்தில் விளையாடி வந்த ஒரு பழக்கத்தின் அடிப்படையிலேயே நபித்தோழர்கள் விளையாடி வந்திருக்கின்றனர்.
அது மாற்று மதத்தவரின் செயலுக்கு ஒப்பாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. எனவே யூத கிரிஸ்தவர்கள் தமது நபிமார்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்று தனது (மீலாத்) பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அங்கீகரிப்பார்களா? என சிந்திக்க வேண்டும்.
நபியின் அங்கீகாரமற்ற செயல்கள் நிராகரிக்கப்படும்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வணக்கங்களை அதன் அமைப்பிற்கும், முறைக்கும் மாற்றமாகச் செய்வது மார்க்கம் அங்கீகரிக்காத செயலாகும். இதனை விளக்கும் பல நபி மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜும்ஆத் தினத்திற்கு முன்னுள்ள நாளில், அல்லது அதற்கு பின்னுள்ள நாளில் நோன்பு நோற்காது அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டாம். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்த தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 1985).
இதற்கு மாற்றமாக நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஜுவைரியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் அவர்களின் (வீட்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள். நேற்றய தினம் நோன்பு நோற்றிருந்தாயா? என்று கேட்க இல்லை. எனப்பதில் கூறினார்கள். நாளை நோன்பு நோற்பாயா? என்றதும் இல்லை. என்றார்கள். அப்படியானால் நோன்பை விட்டு விடு எனக் கூறினார்கள். (புகாரி. 1986). மற்றொரு அறிவிப்பில் "நோன்பை விட்டுவிடும்படி கூறவே அவர்கள் அதனை விட்டுவிட்டார்கள்" என இடம் பெற்றுள்ளது.
நோன்பு வணக்க வழிபாடுகளுடன் தொடர்புடைய கடமை என்பதை நாம் அறிவோம். வெள்ளிக்கிழமை தினத்தை விஷேச தினமாகக் கருதி நோற்கப்பட்ட காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லையெனில், நபியின் காலத்தில் இல்லாத ஒரு புதிய கொண்டாட்டத்திற்கு எந்த வகையில் அங்கீகாரம் கிடைக்கும் என சிந்திக்கக் வேண்டும்.
நபியை நேசிப்பதன் அளவுகோல்:
நபியை ஒருவர் நேசிப்பதற்கான அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே அல்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் எடுத்துக்கூறுகின்றன.
"நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என (முஹம்மதே) கூறுவீராக! (அத்:3.வச:31). என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றி நில்லுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி. ஹதீஸ் இல: 7288 மேற்படி ஹதீஸின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே வேண்டி நிற்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்த தினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள் அது பற்றி நபித்தோழர்கள் வினவிய போது:
அந்நாளில் நான் பிறந்தேன், அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது எனப்பதில் கூறினார்கள். (முஸ்லிம்) . முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் "அந்நாளில் நான் நபியாக அனுப்பப்பட்டேன் எனக் கூறியதாகவும், திர்மிதியில் இடம் பெறும் அறிவிப்பில் "பிரதி வியாழன், திங்கட் கிழமைகளில் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத் துக்காட்டப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அவனிடம் எடுத்துக்காட்டப்பட விரும்புகின்றேன் என மற்றொரு காரணம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்ததினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்ற காரணத்தாலும், மேலும் அத்தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளதாலும் நபியைப் போன்று நோன்பு நோற்பது அவர்களை நேசிப்பதற்கான அடையாளமாகும். அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதற்கு இந்த ஹதீஸை விட ஆணித்தரமான வேறு சான்று வேண்டியதில்லை. மீலாத் தினத்தை கொண்டாடும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?
உங்கள் ஒருவரின் பெற்றோர், அவரது குழந்தை, உலக மக்கள் அனைவரயும் விட உங்களுக்கு நான் நேசமுள்ளவனாக ஆகும்வரை உங்களில் ஒருவர் கூட பூரண விசுவாசியாக முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.)
நபியை உண்மையாக நேசிப்பதாக வாதிடுவோர் தாங்களே சுயமாக கண்டுபிடித்த புதியவழிகளை கடைப்பிடிப்பதை விட்டுவிட வேண்டுமல்லவா?
நபித்தோழர்களும் மீலாத் விழாவும்:
இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய ஆண்டை நபியின் பிறந்த நாளில் இருந்து கணிக்காது அவர்களின் "ஹிஜ்ரத்" பயணத்தை கவனத்தில் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை நிர்ணயம் செய்த நிகழ்வும், நபித்தோழர்களில் காலத்தில் மீலாத் தின கொண்டாட்டங்கள் இடம் பெறாததும், அவர்கள் மத்தியில் மீலாத் தினம் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமான சான்றாகும்.
ஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினரே மௌலிதுகளை உருவாக்கினர்:
மீலாத் தின கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்திருக்கவில்லை. ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.) என தமக்கு பொய் நாமம் சூட்டிக் கொண்ட "பனுஉபைத்" கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.
தமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும், தமதாட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக புரட்சியில் ஈடுபடாமலிருக்கவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும் "மவ்லிதுன் நபி" "மவ்லிது அலி" "மவ்லிது ஹஸன்" "மவ்லிது ஹுஸைன்" "மவ்லிது ஃபாத்திமா" "மவ்லிது கலீபதில் ஹாழிர்" (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி ஹிஜ்ரி 230 ற்குப் பின் பிறந்து 1200 ற்கும் மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹ்தி) என ஆறு மவ்லித்கள் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை அக்காலத்தில் கருவறுத்த "அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி" என்றழைக்கப்படும் ஆட்சியாளனால் ஹிஜ்ரி 362-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இவனே பாங்கின் அமைப்பில் "ஹய்ய அலாகைரில் அமல்" என முதல் முதலில் மாற்றம் செய்தவன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவனைத் தொடர்ந்து "அல்முயிஸ்" என அழைக்கப்படும் இவனது மகன் அதனைப் பேணி வந்தான். இவனது ஆதரவாளர்கள் இவனை பிற்காலத்தில் வெளிவரவிருந்த மஹ்தி என்றும் கூறிவந்தனர். இவர்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த "சுன்னத் வல்ஜமாஅத்" ஆதாரவாளரான "அல் அஃப்ழல் அமீருல்ஜுயூஷ் பின் பத்ர் அல்ஜமாலி" என்பவரால் நடை முறையில் இருந்து வந்த மவ்லித் ஹிஜ்ரி 448 ல் ஒழிக்கப்பட்டது.
பின்னர், "ஷீஆ" ஆதரவாளரான "அல்ஆமிர் பிஆஹ்காமில்லாஹ்" என்பவரால் ஹிஜ்ரி 524 ம் ஆண்டு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது. (இதுவே மவ்லிதின் சுருக்கமான வராலாறு).
மேற்படி தகவல்களை ஷாஃபி மத்ஹப் பேரறிஞர் இமாம் அபூஷாமா அல்மக்திஸி (ரஹ்) அவர்கள் தனது "அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன்" என்ற நூலில் பாகம்:1, பக்கம்: 201-ல் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.
மவ்லித் பற்றிய உண்மை நிலையை விளக்கும் இமாம் தாஜுத்தீன் அல்பாகிஹானி (ரஹ்) அவர்கள்:
இந்த மவ்லிதிற்கு அல்குர்ஆனிலோ, நபியின் வழிமுறையிலோ, எவ்வித அடிப்படையையும் நான் அறியேன். மேலும் முன்னோர்கள் வழி நடக்கும் மார்க்கத்தின் முன்மாதிரிகளான, இந்த சமூத்தின் அறிஞர்கள் அதைச் செய்ததற்கான எந்த ஒரு செய்தியும் இடம் பெறவில்லை. வீணர்களும், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி, கட்டிக் காத்தனர், எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க: அல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித். பக்: 20- 21). அல்லது(அல்ஹாவி: பாகம்:1, பக்கம்:189).
அரபுப் பாடல்கள் வணக்கமாகுமா?
மௌலித் ஓர் அரபுப்பாடலாகும். அதனை வணக்கமாகக்கருதிப் பாடுவதற்கு முன்னர் அரபுப்பாடல்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை ஒருவர் அறிந்து கொள்வதால் "மௌலித்" எந்த தரத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அல்குர்ஆன் கவிஞர்கள் பற்றிக்குறிப்பிடும் போது:
கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வோரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை (முஹம்மதே) நீர் பார்க்கவில்லiயா? மேலும் அவர்கள் செய்யாததையே சொல்கின்றனர். (அஷ்ஷுரா: வச: 224 -226) .
நாம் கவிதையை அவருக்குக் (முஹம்மதுக்கு) கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. (யாசீன்: 69) என்றும் குறிப்பிடுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் "அர்ஜ்" என்ற இடத்தில் நாம் இருந்து கொண்டிருந்த போது, ஒரு கவிஞர் கவிபாட ஆரம்பித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஷைய்த்தானைப் பிடித்து நிறுத்துங்கள். எனக் கூறி விட்டு, உங்களில் ஒருவரின் வயிறு கவியால் நிரம்பி இருப்பதை விட சீழால் நிரம்பிக்காணப்படுவது மேலானது எனக் கூறினார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்). இதன் மூலம் கவிதைக்கும் இஸ்லாமிய வணக்க முறைகளுக்கும் இடையில் காணப்படும் உறவைப்புரிந்து கொள்ளலாம்.
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer