மனிதர்களை இழிவாகக் கருதாமல் அவர்களுக்கு கண்ணியம் அளிக்க வேண்டுமென்று இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. குறிப்பாக தகுதி உடையவர்களுக்கு கெளரவமளிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், கல்வியாளர்கள், சான்றோர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். இப்பண்புதான் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்கான அடையாளமாகும். இப்பண்பை இழந்தவர் இச்சமுதாய உறுப்பினர் என்று சொல்வதற்கே அருகதையற்றவர். இக்கருத்தைப் பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நம்மில் முதியவருக்கு மரியாதை செய்யாதவனும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், நமது (சமுதாய) அறிஞரின் உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சார்ந்தவன் அல்லன்.” (ஸுனன் அஹமத், முஃஜமுத் தப்ரானி)
முதியோர் மதிக்கப்படுவதும், சிறியவரைவிட அவரை முன்னிலைப் படுத்துவதும் இச்சமூக மேன்மையின் அடையாளமாகும். மேலும் அது இச்சமூகத்தவர்கள், மனிதநேயப் பண்புகள் குறித்து, அறிந்தவர்கள், ஒழுக்கசீலர்கள் என்பதற்கான ஆதாரமாகும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை முஸ்லிம்களின் உள்ளத்தில் உறுதிப்படுத்தி அப்பண்புகளின் அவசியத்தை உணர்த்தினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் சிலர் வந்திருந்தபோது அவர்களில் சிறிய வயதுடைய அப்துர் ரஹமான் இப்னு ஸஹல் (ரழி) பேச ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”பெரியவர்களுக்கு மரியாதை கொடு” என்றார்கள். அப்துர் ரஹமான் (ரழி) அவர்கள் மெªனமானார். பிறகு வயதில் மூத்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசினர்.
நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவர்களையும், சான்றோர்களையும் கண்ணியப்படுத்துவதை மிக அதிகமாக வலியுறுத்தி, அவ்வாறு கண்ணியப்படுத்துவது அல்லாஹவை கண்ணியப் படுத்துவதில் கட்டுப்பட்டது என்று விவரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமல், அதைப் புறக்கணிக்காமல் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாரியையும் கண்ணியப்படுத்துவது அல்லாஹவைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.” (ஸுனன் அபூதாவூத்)
இந்தப் போதனைகள் முஸ்லிம்களின் முந்திய தலைமுறைக்கு நற்பலன்களை அளித்தன; மேன்மைக்குரிய குணங்களை தங்களுக்குள் கொண்ட உயர்ந்த மனிதர்களை உருவாக்கின. முதியோரையும் சான்றோரையும் மதிப்பதில் அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். சில உதாரணங்களை நாம் இங்கு குறிப்பிடுகிறோம்:
ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) மனனமிட்டிருந்தேன். அதை நான் வெளியே சொல்லத் தடையாக இருந்ததெல்லாம் அங்கு என்னைவிட வயதில் மூத்த பெரியவர்கள் இருந்தார்கள் என்பதுதான்”. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இங்கு மற்றோர் அழகிய முன்மாதிரியைக் காண்போம்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தார்கள். அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்திருந்தும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக இப்னு உமர் (ரழி) மெªனமாக இருந்து விட்டார்கள்.
இது பற்றி இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”எனக்கு ஒரு மரத்தைப்பற்றி அறிவியுங்கள். அது முஸ்லிமுக்கு உதாரணமாகும். இரட்சகனின் உத்தரவுப்படி எல்லா நேரங்களிலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் இலைகள் உதிர்வதில்லை (அது என்ன மரம்)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். என் மனதில் அது ‘பேரீச்ச மரம்’ என்று தோன்றியது. அந்த இடத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்ததால் அதைக் கூறத் தயங்கினேன். அந்த இருவரும் பேசாமலிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ”அது பேரீச்ச மரம்” என்று கூறினார்கள். என் தந்தையுடன் வெளியே வந்தபோது ”எனது தந்தையே என் மனதில் ‘பேரீச்சமரம்’ என்று தோன்றியது” என்றேன். அவர்கள் ”அதைச் சொல்லாமல் உன்னைத் தடுத்தது எது?” அதை நீ கூறியிருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே” என்றார்கள். ”உங்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பேசாமலிருக்கக் கண்டேன். எனவே நான் அதைக் கூற விரும்பவில்லை என்று கூறினேன்” என இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இஸ்லாம், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமென தனித்தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை அவர்களுக்குரிய அந்தஸ்தில் வைக்குமாறு எங்களை ஏவினார்கள்.” இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார்கள்.
ஒருவரை அவரது அந்தஸ்துக்கேற்ப மதிக்க வேண்டுமெனில், அவர்களது அந்தஸ்தை அறிந்திருக்க வேண்டும். முதலில் மார்க்க அறிஞர்கள், குர்ஆனை இதயத்திலும் செயலிலும் சுமந்திருப்போர், மேதைகள் மற்றும் சான்றோர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.
அல்லாஹவின் மார்க்க நெறியில் நம்பிக்கையாளர்களாக இருந்து, சத்தியத்தை உரக்கச் சொல்லி, இஸ்லாமிய அடையாளங்களை பாதுகாப்பதை பணியாகக் கொண்டிருக்கும் அறிஞர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் பெரும் அந்தஸ்தும் உயர்வும் உண்டு.
…. (நபியே) நீர் கேளும்: கல்வி அறிவுடையோனும் கல்வி அறிவில்லா தோனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் எல்லாம் (கல்வி) அறிவுடையோர்தாம். (அல்குர்ஆன் 39:9)
இஸ்லாமிய சமூகத்தில் குர்ஆனை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கும் உயரிய அந்தஸ்து உண்டு. அவர்களை சபைகளிலும் தொழுகைக்கு இமாமாகவும் முன்னிலைப்படுத்த வேண்டுமென நபிமொழி வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு கூட்டத்தாருக்கு அல்லாஹவின் வேதத்தை அதிகம் ஓதத் தெரிந்தவர் இமாமாக நிற்கட்டும். அவர்கள் குர்ஆன் ஓதுவதில் சமமானவர்களாயிருந்தால் சுன்னத்தை நன்கறிந்தவரும், அவர்கள் சுன்னத்தை அறிவதில் சமமானவர்களாக இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவரும், ஹிஜ்ரத்தில் சமமானவர்களாக இருந்தால், வயதில் அதிகமானவரும் இமாமாக நிற்கட்டும். ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு உரிமையுள்ள இடத்தில் அவரது அனுமதியின்றி தொழவைக்க வேண்டாம். மற்றவருடைய வீட்டில் அனுமதி இல்லாமல் அவருக்குரிய இருக்கையில் அமர வேண்டாம்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
சற்று முன்சென்ற ஒரு நபிமொழியை நினைவு கூர்வோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமலும், அதைப் புறக்கணிக்காமலும் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாரியையும் கண்ணியப் படுத்துவது அல்லாஹவைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.” (ஸுனன் அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் உடல்களை இரண்டிரண்டாக கப்ரில் வைத்தபோது ”குர்ஆனை அதிகமாக மனனமிட்டவர் இந்த இருவரில் யார்?” என்று கேட்டார்கள். அப்போது எவரை சுட்டிக்காட்டப்பட்டதோ, அவரை முதலில் கப்ரின் பக்கவாட்டில் வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களின் அந்தஸ்திற்கேற்ப மதிப்பளிக்க வேண்டுமென்பதை தொழுகைக்கான அணிவகுப்பை சரி செய்தபோது அவர்கள் கூறியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”எனக்குப் பின் வரிசையில் உங்களிலுள்ள சான்றோர்களும் கல்விமான்களும் நிற்கட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட நபிமொழி, மனிதர்கள் அந்தஸ்த்துக்கேற்ப மதிக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கண்ணோட்டத்தை மிகத்தெளிவாக விவரிக்கிறது. அறிவுடையோர்களும், சான்றோர்களும் தங்களது அந்தஸ்த்திற்கேற்ப முஸ்லிம்களின் பல்வேறு காரியங்களுக்குப் பொறுப்பேற்பவர்கள் என்ற காரணத்தினால் நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தினார்கள். ”ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் சான்றோர்களுக்கு கண்ணியத்தில் முதலிடம் அளித்தார்கள். மார்க்கப் பற்றில் உள்ள அந்தஸ்த்திற்கேற்ப கண்ணியமளித்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சங்கைக் குரியவராக இருப்பவரை சங்கை செய்தார்கள், அவரையே அக்கூட்டத்தின் தலைவராகவும் ஆக்கினார்கள். அவர்களது சபை நேர்மையான நடத்தையுள்ள சிறந்த இறை விசுவாசிகளால் செழிப்படைந்து இருந்தது. அவர்களுக்கு மத்தியில் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்றத் தாழ்வு இருந்தது. நபித்தோழர்கள் முதியோர்களை கெªரவிப்பார்கள், சிறியோர்கள் மீது கருணை காட்டுவார்கள், தேவையுள்ளோரை தங்களின் உபகாரத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள், தங்களிடம் பயணித்து வந்தவர்களை பாதுகாப்பார்கள்” என ஹஸன் (ரழி) தனது தந்தை அலீ (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
முஸ்லிம் இந்த உண்மைகளை அறிந்து சமூகத்தின் அனைத்து மக்களுடனும் முன்மாதிரியாக நடந்து கொள்வதுடன் குறிப்பாக அறிஞர்கள் இறையச்சமுடையவர்கள் சான்றோர்களிடம் அவர்களது அந்தஸ்திற்கேற்ப நடந்துகொள்வார்.
நல்லோருடன் இணைந்திருப்பார்
முஸ்லிமின் பண்புகளில் ஒன்று நல்லோருடன் இணைந்திருப்பதாகும். அவர்களுடன் நெருங்கி அவர்களிடம் துஆவை கேட்டுப்பெற வேண்டும். அவர் எவ்வளவுதான் உயர் அந்தஸ்தில் இருந்தாலும் தயக்க மில்லாமல் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்து, தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி, அவனையே காலையிலும் மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்ளும். இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களைத் திருப்பிவிடாதீர். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய இருதயத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கும் நீர் வழிப்படாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது. (அல்குர்ஆன் 18:28)
நல்லோர்களுடன் சேர்ந்திருப்பது இறையச்சத்தையும், சத்தியத்தை அடைந்து கொள்வதற்குரிய தேட்டத்தையும், நற்பண்புகளையும், மார்க்க அறிவையும் வளரச் செய்யும். இந்த நற்பண்புகளைக் கொண்டே நாமும் நல்லவர்களாக முடியும். நபி மூஸா (அலை) அவர்கள் கல்வி கற்றுக் கொள்வதற்காக நல்லடியாரைத் தேடிச் சென்றபோது ஒழுக்கத்துடனும் பணிவுடனும் கூறுகிறார்கள்.
மூஸா அவரை நோக்கி, ”உமக்கு கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக் கூடியதை நீர் எனக்கு கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?” என்று கேட்டார். (அல்குர்ஆன் 18:66)
அதற்கு அந்த நல்லடியார் பதில் கூறுகிறார்:
அதற்கவர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர். (அல்குர்ஆன் 18:67)
அப்போது நபி மூஸா (அலை) அவர்கள் மிக பணிவோடும் அன்போடும் கூறுகிறார்கள்: ”அதற்கு மூஸா இறைவனருளால் (எவ்விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர்; எவ்விஷயத்திலும் நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் 18:69)
உண்மை முஸ்லிம் நல்லோர்களுடன் மட்டுமே இணைந்திருப்பார். ஏனெனில் மனிதர்கள் சுரங்கத்தைப் போன்றவர்கள். அதில் உயர்ந்ததும் இருக்கும், அற்ப்பமானதும் இருக்கும் என்பதை மார்க்க போதனையிலிருந்து அறிந்திருப்பார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதர்கள் தங்கம், வெள்ளி சுரங்கத்தைப் போன்ற சுரங்கமாவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் மார்க்க அறிவை அடைந்து கொண்டால் இஸ்லாமிலும் அவர்களே சிறந்தவர்கள். ஆன்மாக்கள் (ஆலமுல் அர்வாஹில்) ஒன்று திரட்டப்பட்டதாயிருக்கும். (அங்கு) அறிமுகமானது (இங்கு) நேசித்துக் கொள்கிறது. (அங்கு) அறிமுகமாகாதது (இங்கு) முரண்படுகிறது.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நண்பர்கள் இருவகையாவர். நல்ல நண்பர், கெட்ட நண்பர். நல்ல நண்பருக்கு உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவர் போல. அவருடன் அமர்வதால் நல்ல நறுமணத்தையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ளலாம். கெட்ட நண்பருக்கு உதாரணம் கொல்லனைப்போல. அவனிடம் அமர்வதால் நெருப்பின் ஜுவாலையையும், புகையையும், கரியையும்தான் அடைந்து கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பருக்கும் கெட்ட நண்பருக்கும் உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவனுக்கும் கொல்லனுக்கும் ஒத்ததாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன் உனக்கு தடவி விடலாம் அல்லது அதிலிருந்து கொஞ்சம் நீ வாங்கிக் கொள்ளலாம் அல்லது நறுமணத்தையாவது நீ நுகரலாம். கொல்லன் உனது ஆடையை எரித்துவிடுவான் அல்லது அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகர்வாய். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
கண்ணியமிகு நபித்தோழர்கள் நல்லோர்களை சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தனர். அந்நல்லோர்கள் அல்லாஹவை நினைவூட்டி, உள்ளங்களை மென்மையாக்கி, அல்லாஹவின் அச்சத்தால் கண்களை அழவைத்தனர்.
உம்மு அய்மன் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சிறு வயதில் வளர்த்தவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு மிக அதிகம் சங்கை செய்வார்கள். உம்மு அய்மன் எனது தாய் என்றும் கூறுவார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் ”உம்மு அய்மன் (ரழி) அவர்களை நபி (ஸல்)அவர்கள் சந்தித்து வந்ததுபோல் நாமும் சந்திக்கச் செல்வோம்” என்று கூறினார்கள். உம்மு அய்மன் (ரழி) அவர்களிடம் அவ்விருவரும் சென்றபோது அழுதார்கள். இருவரும் ”ஏன் அழுகின்றீர்கள்? அல்லாஹவிடத்தில் உள்ளது அல்லாஹ்வின் தூதருக்கு மிகச் சிறந்ததாகும்” என்றார்கள்.
அப்போது, உம்மு அய்மன் (ரழி) அவர்கள் ”நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹவிடமுள்ள (பாக்கியமான)து மிகச் சிறந்தது என்பதைப்பற்றி தெரியாமல் நான் அழவில்லை. என்றாலும், வானத்திலிருந்து வஹீ வருவது நின்றுவிட்டதே! என்பதற்காக அழுகின்றேன்” என்றார்கள். இந்த வார்த்தையின் மூலம் அவர்கள் அவ்விருவரையும் அழத்தூண்டி விட்டார்கள். அவருடன் சேர்ந்து அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அழ ஆரம்பித்து விட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இம்மாதிரியான சபைகளை மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள். அதை அல்லாஹ் தனது கருணையால் மூடிக்கொள்கிறான். ஈமான் உறுதி அடைகிறது. ஆன்மா தூய்மையடைந்து இதயம் பிரகாசிக்கிறது. எனவே அவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தான் சார்ந்துள்ள சமுதாயத்துக்கும் நன்மை பயப்பவராகிறார். இதுதான் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.