அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

தொழுகை..
உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிமானதொரு மனிதன், தொழுகைக்கான குறித்த நேரம் வந்த பொழுது, அவன் முறையாக ஒளுச் செய்து, இறையச்சத்துடன் அவற்றைச் செய்து, (பள்ளியை நோக்கிச் சென்று தொழுது) இன்னும் சரியான முறையில் ருகூஉ செய்து இருப்பானேயானால், அது அவனது முந்தைய அனைத்துப் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும், எதுவரை எனில் அவன் மிகப் பெரும் பாவங்களைச் செய்யாத வரைக்கும், அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. (முஸ்லிம் 1-206 எண்.7-4-2)

மேலும் அவன் எந்தளவு உள்ளசத்துடன் தொழுதான் என்பதனைப் பொறுத்தே அவனது நன்மையின் அளவுகளும் அமையும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியான் தொழுது இன்னும் அவனது (கணக்கில்) அதனைப் பத்து மடங்காக, அல்லது ஒன்பது மடங்காக, அல்லது எட்டு மடங்காக, அல்லது ஏழாக அல்லது ஆறாக அல்லது ஐந்தாக அல்லது நான்கு பங்காக, அல்லது மூன்றாக அல்லது பாதியாக எழுதப்படாமல் இருப்பதில்லை''. (அஹ்மத், ஸஹீஹ் ஜாமிஇ 1626).

எங்கே அவர் தன்னை ஓர்நிலைப்படுத்தினாரோ இன்னும் தனது கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்திக் கொண்டாரோ அதற்குத் தகுந்த மாதிரி அவரது நன்மையின் பங்குகள் இருக்கும் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : ''நீங்கள் உ ங்களது தொழுகையில் எந்தளவு கவனம் செலுத்தினீர்களோ அந்தளவு (நன்மைகளைப்) பெற்றுக் கொள்வீர்கள்.''

நீங்கள் உங்களது கவனங்களை முறையாக தொழுகையின் மீது செலுத்தினீர்கள் என்றால் இன்னும் அதில் உள்ளச்சம் நிறைந்திருந்தது என்றால் உங்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ''(அல்லாஹ்வின்) அடியான் தொழுகைக்கான நின்று இன்னும் (அவன்) தொழுது கொண்டிருக்கும் பொழுது, அவனது அனைத்துப் பாவங்களும் அவனது தலைக்கும் இன்னும் தோள் புஜங்களுக்கும் கொண்டு வரப்படும். ஒவ்வொரு முறையும் அவன் குனியும் பொழுதும், இன்னும் சுஜுது செய்யும் பொழுதும், அதில் சில பாவங்கள் அவனிடமிருந்து (கீழே) விழுந்து கொண்டிருக்கும், (மன்னிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்)''. (பைஹகி - அல் சுனன் அல் குப்ரா, 3-10, இன்னும் ஸஹீஹ் அல் ஜாமிஇ லும் இது இடம் பெற்றுள்ளது பார்க்கவும்). அல் மனாவி என்பவர் கூறுகின்றார் : தொழுகையின் முக்கியத் தூண்களை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி முடிக்கும் பொழுது, பாவங்களின் சில பகுதிகள் அவற்றிலிருந்து வீழ்ந்து விடுகின்றன, எதுவரையெனில் அவன் தொழுகையை முடிக்கும் வரையிலும், அனைத்துப் பாவங்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. இது தொழுகைக்கான அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் பட்சத்தல், அதன் அடிப்படையான அம்சங்கள் முழுமைப்படு;தியிருக்கும்பட்சத்திலும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'அடியான்' மற்றும் 'நிற்பது' என்பது ஒரு மாபெரும் மன்னனின் (அல்லாஹ்வுக்கு) முன் அவனது அடிமை மிகவும் பணிவுடன் நிற்பதைக் குறிக்கும்''. (பைஹகி அல் சுனன் அல் குப்ரா, 3-10 : இன்னும் ஸஹீஹ் அல் ஜாமிஇ விலும் இடம் பெற்றுள்ளது பார்க்கவும்).

இறையச்சத்துடன் தொழக் கூடியவர், அவர் தனது தொழுகையை முடித்ததும் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் இறங்கி மிக இலேசாக இருப்பதாக உணர்வார், அவரிடமிருந்து அவரது கவலைகள் நீக்கப்பட்டும் விடும். பாரம் குறைந்ததன் காரணமாக, அவர் புத்துணர்வு பெற்றவராக ஆகி விடுவார், எனவே தொழுகையை நிறுத்தி விட அவர் மனது நாடாது, ஏனென்றால் தொழுகையில் தான் அவருக்கு சந்தோஷமும் இன்னும் இந்த உலகத்தின் சுகமும் அவருக்குக் கிடைக்கின்றது. இன்னும் அடுத்து அவர் தொழ ஆரம்பிக்கும் வரைக்கும் ஒரு குறுகிய சிறைச்சாலையில் இருந்து கொண்டிருப்பது போன்று அவர் உணர்வார். எவரொருவர் தொழுகையை உவப்பானதாகக் கருதுகின்றாரோ அவர், 'நாங்கள் தொழுகின்றோம், இன்னும் அதில் சுகத்தையும் பெற்றுக் கொள்கின்றோம்' என்று கூறுவார். உதாரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓ பிலால்..! தொழுகையில் நாம் சுகத்தைக் காண்போம்''. வாருங்கள் தொழுவோம், அதனை முடிப்போம்' என்று கூறாமல், தொழுகையில் சுகத்தைக் காண்போம் என்று கூறியிருப்பதிலிருந்து தொழுகையின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''என்னுடைய சந்தோஷம் தொழுகையில் ஆக்கப்பட்டிருக்கின்றது''. தொழுகையில் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய எவராவது, தொழுகையில் அல்லாமல் அவர் வேறு ஒரு இடத்தில் சந்தோஷத்தை அவர் தேடுவாரா?, அல்லது அதனை விட்டும் தூரமாகி விலகி (தொழாமல்) இருப்பதற்கு எப்படித் தான் முடிகின்றது? (Al-Waabil al-Sayib, 37).
தொழுகையில் துஆக் கேட்பதற்கான மிகச் சிறப்பு வாய்ந்த தருணங்கள், குறிப்பாக ஸுஜுதில்

அல்லாஹ்விடத்தில் உரையாடுவது (தொழுகை என்பது இறைவனிடம் நடத்தக் கூடிய உரையாடல்), யாரிடம் மட்டும் மனிதன் தன்னுடைய பணிவைக் காட்ட வேண்டுமோ அத்தகையவனிடத்தில், அவனிடத்தில் மட்டுமே தன்னுடைய தேவைகளைக் கேட்பது, இன்னும் அவன் கேட்கக் கூடிய அத்தனை உதவிகளும் வல்லோனின் நெருக்கத்தை அடியானுக்குபு; பெற்றுக் கொடுக்கும், இன்னும் அவனிடத்தில் அது குஷு என்ற உள்ளச்சத்தையும் ஏற்படுத்தும். துஆ - பிரார்த்தனை - தனக்குத் தேவையானவற்றை வேண்டிப் பெறுவது என்பதும் ஒரு இறைவணக்கமேயாகும், இன்னும் பிரார்த்தனைகளை அதிகமதிகம் கேட்கும்படி நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :

பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே.. (6:63)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவனொருவன் அல்லாஹ்வை (ப் பிரார்த்தித்து) அழைக்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்.'' (திர்மிதீ, கிதாப் அத் தாஃவாத், 1-426, ஸஹீஹ் திர்மிதீ, 2686)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் குறிப்பிட்ட நேரத்தில் அதிகமதிகம் துஆக் கேட்கக் கூடியவர்களாக இருப்பார்கள், அதாவது, ஸுஜுது செய்யும் பொழுது, இரண்டு ஸுஜுதுக்கும் மத்தியில், மற்றும் தஸஹ்ஹுத் (இருப்பில் அத்தஹிய்யாத் ஓதி அதனைத் தொடர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி முடித்ததன்) பின் உள்ள நேரத்தில்.

இவற்றில் மிகச் சிறந்தது ஸுஜுதின் பொழுது கேட்கும் துஆ தான், இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியான் தன்னுடைய எஜமானனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள நிலை எதுவென்றால் ஸுஜுது நிலையில் இருக்கும் பொழுது தான், எனவே நீங்கள் உங்களது துஆவை அப்பொழுது அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.'' (முஸ்லிம், கிதாப் அஸ் ஸலாத், பாப் மா யுகல்லுஃபில் ருகூஉ வல் ஸுஜுது, எண்.215) மேலும் கூறினார்கள் : ஸுஜுதைப் பொறுத்தவரையில், அதிகமதிகம் முயற்சி செய்து துஆச் செய்து கொள்ளுங்கள், அதில் (நீங்கள் கேட்கும் துஆக்களுக்கு) பதிலளிக்கப்படுகின்றீர்கள்.'' (முஸ்லிம், கிதாப் அஸ் ஸலாத், பாப் அல் நஹீ அன் கிராஅத் அல் குர்ஆன் ஃபில் ருகூஉ வல் ஸுஜுது, 207)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுஜுது நிலையில் இருக்கும் பொழுது வழக்கமாக இந்தத் துஆவை ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள் : ''அல்லாஹும்மஃ ஃபிர்லீ தன்பி திக்கஹுவ ஜில்லஹுவ அவ்வலஹு வ அகீரஹு வ அலானிய்யதஹு வ ஸிர்ரஹு'' 
("Allaahumma’ghfir li dhanbi diqqahu wa jillahu wa awwalahu wa aakhirahu wa ‘alaaniyatahu wa sirrahu) (யா அல்லாஹ், என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, சிறிய மற்றும், பெரிய, முதலும், இறுதியுமாகவும், இன்னும் வெளிப்படையாகவும் மறைவாகவும் (செய்த பாவங்களை மன்னிப்பாயாக..!) (முஸ்லிம், கிதாப் அல் ஸலாஹ், பாப் மா யுகாலு ஃபில் ருகூஉ வல் ஸுஜுத், 216) இன்னும் அவர்கள், அல்லாஹும்மஃ ஃபிர்லி மா அஸ்ரர்து வ மா அஃலன்து ("Allaahumma’ghfir li maa asrartu wa maa a’lantu) (யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக, நான் மறைவாகச் செய்தவைகளையும் இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும்) (அந் நஸஈ, அல் முஜ்தபா 2-569, ஸஹீஹ் அல் ஜாமிஇ 1067).

இன்னும் ஸஜ்தாக்களுக்கிடையில் ஓதக் கூடிய பல துஆக்கள் இருக்கின்றன. அவற்றை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு வழங்குவோம்.

தஸஹ்ஹுத் க்குப் பின்னால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதியிருக்கக் கூடிய துஆக்களை நாம் ஆய்வு செய்தோமென்றால் அவர்களின் துஆக்களிலிருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம் : உங்களில் ஒருவர் தஸஹுத்தை முடித்து விட்ட பின், அவர் அல்லாஹ்விடம் நான்கு வகைகளுக்காகப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளட்டும், நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், மண்ணறையின் வேதனைகளிலிருந்தும், வாழ்விலும், மரணத்திலும் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், இன்னும் மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட துஆவையும் அடிக்கடி ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள் :

''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்து வ மின் ஷர்ரி மாலம் அமல் 
("Allaahumma innee a’oodhu bika min sharri maa ‘amiltu wa min sharri maalam amal) (யா அல்லாஹ், தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன், இன்னும் நான் செய்தவற்றையும் இன்னும் நான் செய்யாதிருக்கின்ற தீமைகளிலிருந்தும் (பாதுகாப்புத் தேடிக் கொள்கின்றேன்)

''அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா'' 
("Allaahumma haasibni hisaaban yaseeran) ''(யா அல்லாஹ், என்னுடைய (மறுமைக்) கணக்குகளை எளிதாக்கி வைப்பாயாக)''

அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு இவ்வாறு கூறி வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹும்ம இன்னீ ழலம்து நஃப்ஸீ ழுல்மன் கதீரன், வ லா யஃக்ஃபிர் அத் துனூப இல்லா அன்த, ஃபஃக்பிர்லி மஃக்ஃபிரத்தன் மின் இன்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் ஃகஃபூருர் ரஹீம் 
("Allaahumma innee zalamtu nafsi zulman katheeran, wa la yaghfir al-dhunooba illa anta, faghfir li maghfiratan min ‘indaka warhamni innaka anta al-Ghafoor al-Raheem) ''(யா அல்லாஹ், எனக்கு நானே தவறிழைத்து விட்டேன், இன்னும் உன்னைத் தவிர வேறு யாரும் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியாது. எனக்கு மன்னிப்பளிப்பாயாக, இன்னும் என்மீது கருணை புரிவாயாக, நீயே மன்னிக்கக் கூடியவனாகவும், மிகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்)''
தஸஹ்ஹுத் - தில் ஒரு மனிதர் இவ்வாறு கூறக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் : ''அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க யா அல்லாஹ் அல் அஹத் அஸ் ஸமத் அல்லதீ லம் யலித் வ லம் யூலத் வ லம் யகுல் லஹு குஃபுவன் அஹத் அன் தஃக்ஃபிர்லீ துனூபி இன்னக்க அன்தல் ஃகஃபூர் அர் ரஹீம் (யா அல்லாஹ், யா அல்லாஹ் உன்னிடமே நான் கேட்கிறேன், அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை, (யா அல்லாஹ்) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, நீயே (பாவங்களை) மன்னிப்பவனாகவும், மிகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து, ''அவர் மன்னிக்கப்பட்டு விட்டார், அவர் மன்னிக்கப்பட்டு விட்டார்'' என்றார்கள்.

இன்னொரு தோழர் இவ்வாறு கூறுவதைக் கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க பி அன்ன லகல் ஹம்து, லா இலாஹ இல்லா அன்த வஹதுக லா ஷரீக லக் அல் மன்னான் யா பதீ அஸ் ஸமாவாதி வல் அர்ழ், யா தல் ஜலாலி வல் இக்ராம், யா ஹய்யு யா கய்யூம், இன்னீ அஸ்அலுக அல் ஜன்னா வ அஊதுபிக மினன் னார்'' (யா அல்லாஹ், உனக்கேயுரிய அனைத்துப் புகழைக் கொண்டு நான் கேட்கின்றேன், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறில்லை, உனக்கு துணை கிடையாது அல்லது இணையாளர்கள் கிடையாது, நீயே கொடையாளன், வானங்களையும், பூமியையும் படைத்தவனே, புகழுக்கும் கண்ணியத்திற்கும் உரித்தானவனே, நிலையானவனே, சுயம்புவானவனே, உன்னிடம் நான் சுவனத்தைக் கேட்கின்றேன், இன்னும் நரக நெருப்பிலிருந்தும் பாதுகாக்கும்படி வேண்டுகின்றேன்).'' (அப்பொழுது அங்கிருந்த) தன்னுடைய தோழர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''அவர் எதனைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? என்றார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று தோழர்கள் பதில் கூறினார்கள். அதற்கு, ''எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவனது மிக உயர்ந்த (கண்ணியமிக்க) பெயர்களைக் கொண்டு (அவனிடம் தனக்குத் தேவையானவைகள் குறித்துக்) கேட்கின்றார், அவ்வாறு அல்லாஹ்வினது தன்மைகளைக் கொண்டு அவனை அழைக்கப்படும் போது, அதற்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான், அவ்வாறு அல்லாஹ்வை (நீங்கள்) அழைத்தால், அவன் கொடுக்கக் கூடியவனாக இருக்கின்றான்'' என்றார்கள்.

இன்னும் தஸஹ்ஹுத் மற்றும் ஸலாத்துக்கு இடையே இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் : ''அல்லாஹும ஃக்ஃபிர்லி மா கத்தம்து வமா அக்கர்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்து வ மா அன்த அஃலம் பிஹி மின்னி அன்த அல் முகத்திம் வ அன்த அல் முஅக்கிர், லா இலாஹ இல்லா அன்த'' 
("Allaahumma’aghfir li maa qaddamtu wa ma akhkhartu wa maa asrartu wa maa a’lantu wa maa asraftu wa maa anta a’lam bihi minni anta’l-muqaddim wa anta’l-mu’akhkhir, laa ilaaha illa anta) (யா அல்லாஹ், கடந்த காலத்தில் நான் செய்தவைகளை மன்னித்தருள்வாயாக, இன்னும் நான் செய்ய இருப்பவைகளையும் மன்னித்தருள்வாயாக, இன்னும் நான் மறைத்தவைகளையும், இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும், இன்னும் வரம்பு மீறியவைகளையும், (மன்னித்தருள்வாயாக), என்னை விட நீயே மிகவும் அறிந்தவனாக இருக்கின்றாய். நீயே முற்படுத்துபவனாகவும், இன்னும் நீயே பிற்படுத்துபவனாகவும் இருக்கின்றாய், உன்னையன்றி வேறு ஒரு இறைவன் இல்லை.'' (These du’aa’s and others, along with their isnaads, are to be found in Sifat al-Salaahby al-‘Allaamah al-Albaani, p.163, 11th edn.)

மேற்கண்ட துஆக்களை மனனம் செய்து கொள்வது நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும், அதற்கான தீர்வுகளை வழங்கக் கூடியதாகவும் இருக்கும், ஆனால் இதனை மனனம் செய்யாமல் இருப்பதால், தஸஹுத்தின் பொழுது என்ன ஓதுவது என்பது தெரியாமல் இமாமிற்குப் பின்னால் மௌமான இருந்து விடக் கூடியவர்களாக நாம் இருந்து வருகின்றோம். இந்த நிலை இனிமேலாவது மாற வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு : மேற்கண்ட இறைமறை வசனங்கள் மற்றும் துஆக்களை அதனதன் அரபி உச்சரிப்பில் ஓதுவதுதான் மிகச் சிறந்தது. நம்மில் பலருக்கு திருமறைக் குர்ஆனை அதன் மூல மொழியாகிய அரபி மொழியில் ஓதத் தெரியாது. இந்த ரமளான் மாதத்திலாவது அதற்கான முயற்சியைச் செய்வோம். திருமறையை அது இறக்கப்பட்ட அரபி மொழியில் ஓதப் பழகுவோம். அதன் மூலம் அதன் வார்த்தைகள் மற்றும் அர்த்தம் சிதறாமல் உச்சரிக்கக் கற்றுக் கொள்வோம்.
தொழுகைக்குப் பின் ஓதக் கூடியவைகள்

தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய திக்ருகளும், இறையடியானின் மனதில் உள்ளச்சத்தையும், இன்னும் இறைவனது ஆசியையும், அவனது அருட்கொடைகளையும் பெற்றுக் கொடுக்கும்.

உங்களது நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வதற்கும், இன்னும் பொடுபோக்காக அதனை விட்டு விடாமல் இருப்பதற்கும் ஏதுவாக அந்த நற்செயல்களைத் தொடர்ந்தாற் போல் செய்து கொண்டிருப்பதேயாகும். தொழுகைக்குப் பின்னால் ஓதக் கூடிய திக்ருகளில், மூன்று முறை இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும், அவ்வாறு அவர் பாவ மன்னிப்புக் கோருவது, தொழுகையில் கவனக் குறைவாக விடுபட்ட அமல்களுக்கு அல்லது உள்ளச்சம் விடுப்பட்டுப் போனதற்கு அது பரிகாரமாக அமையும். இன்னும் பர்ளான - கடமையான தொழுகைகளுக்குப் பிறகு நபிலான தொழுகைகளைத் தொழுவதானது, கடமையான தொழுகைகளில் கவனக் குறைவாக விடுபட்டுப் போனவைகளும், இன்னும் தவறிப் போன உள்ளச்சத்திற்கும் அது ஈடு செய்யக் கூடியதாக இருக்கும்.

வணக்கசாலியின் கவனத்தைத் திசை திருப்பக் கூடியவைகள்

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆயிஷா (ரலி) அவர்கள் அவரது வீட்டின் ஒரு பகுதியில் வண்ணத்திரையை தொங்க விட்டு மறைத்து அழகுபடுத்தி இருந்தார்கள். (இதைக் கண்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அதை இங்கிருந்த அகற்றி விடுங்கள்' என்று கூறி விட்டு, ''இது நான் தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது'' என்று கூறினார்கள். (அல் புகாரீ, ஃபத்ஹ் அல் பாரி, 10-391)

அல் காஸிம் அவர்கள் அறிவிப்பதாவது, ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஒரு துணி இருந்தது, அதில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, அதனை வைத்து (தூங்குவதற்கு அல்லது பொருள்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கான) ஒரு மறைப்புப் பகுதியை ஏற்படுத்தி அதனைத் திரைத் துணி போல தொங்க விட்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனை நோக்கி தொழுது கொண்டிருந்தவர்கள், ''அதனை அகற்றி விடுங்கள், ஏனென்றால் அதில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள் தொழுகையில் எனது கவனத்தைத் திசை திருப்புகின்றன'' என்றார்கள். அதனை அகற்றி விட்டதோடு, அதனை தலையணை உரையாகச் செய்து கொண்டார்கள். (முஸ்லிம், 3-1668).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தந்த இன்னுமொரு குறிப்பைப் பார்ப்போம் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழ விரும்பி உள்ளே நுழைந்தார்கள், அங்கு ஆட்டின் இரண்டு கொம்புகள் இருக்கக் கண்டார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய பின், உதுமான் அல் ஹஜபி (ரலி) அவர்களைப் பார்த்து, இதனை மறைத்து வைக்கும்படி உங்களிடம் நான் கூற மறந்து விட்டேன், ஏனென்றால் தொழுகையாளிகளின் கவனத்தைத் திசை திருப்பக் கூடிய எதுவும் இங்கே இருக்கக் கூடாது என்றார்கள். (அபூதாவூது, 2030, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2504)

மக்கள் நடமாடக் கூடிய பகுதிகளில் தொழுவது அல்லது அதிக கூச்சல், சப்தம், மக்களின் பேச்சுக்கள் நிறைந்த இடங்களிலும் அல்லது மக்கள் கூடக் கூடிய இடங்களிலும், விவாதம் செய்யும் இடங்களிலும் இன்னும் இது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது எங்கெல்லாம் கவனத்தைத் திசை திருப்பி விடக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவோ அங்கும் கூட தொழுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

இன்னும் அதிகமான உஷ்ணம் அல்லது கடுமையாகக் குளிரக் கூடிய இடங்களிலும் முடிந்தவரை தொழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான உஷ்ணம் மிகுந்த பகல் பொழுதுகளில் வெப்பம் தணியும் வரை லுஹர் தொழுகையைப் பிற்படுத்துமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இப்னு அல் கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'கடுமையான வெப்பத்தில் நின்று கொண்டு தொழக் கூடியவர் தனது கவனத்தை ஒருநிலைப்படுத்தி உள்ளச்சத்துடன் தொழ இயலாது போய் விடும், அவர் அதனை விருப்பமற்ற முறையில் நிறைவேற்றக் கூடியவராக இருப்பார் என்பதே அதன் காரணமாகும்', எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெப்பம் தணியும் வரைக்கும் தொழுகையைப் பிற்படுத்துமாறு அறிவுரை பகர்ந்திருக்கின்றார்கள், இதன் மூலம் அவர் தனது மனதை ஒருநிலைப்படுத்தி, தொழுகையை எதற்காகத் தொழுகின்றோமோ அதன் பயன்களை அடைந்து கொள்வதற்கும், உள்ளச்சத்துடன் தொழுவதற்கும் இன்னும் தனது முழுக் கவனத்தையும் வல்ல அல்லாஹ்வின் பக்கம் திருப்பிக் கொள்ளவும் இயலும்', என்றார்கள். (அல் வாபில் அஸ்ஸயிப், தார் அல் பயான், பக்.22)

அழகுபடுத்தப்பட்ட, வரையப்பட்ட, கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட அல்லது படங்கள் கொண்ட கவனத்தைத் திசை திருப்பக் கூடிய தொழுகை விரிப்புகளில் தொழக் கூடாது


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தொழுகைக்காக நின்ற பொழுது கோடுகள் போட்ட சட்டையை அணிந்திருந்தார்கள், அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். தொழுகையை நிறைவு செய்த பின் அவர்கள் கூறினார்கள், ''இதனை அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா அவர்களிடத்தில் கொடுத்து விடுங்கள், எனக்கு கட்டங்கள் அல்லது அழகுபடுத்தப்படாத ஆடையான அன்பஜானி யைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள், ஏனென்றால் நான் தொழும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டது''. இன்னுமொரு அறிவிப்பின்படி, ''(இதில் வரையப்பட்டிருக்கும்) கோடுகள் எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டன'', என்றார்கள். இன்னுமொரு அறிவிப்பின்படி, ''(என்னிடம்) கோடுகள் போட்ட சட்டை இருந்தது, தொழுகையில் அதனை நான் அணியும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது.'' என்று கூறியிருக்கின்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், 556, பகுதி 3-391).

படங்கள் வரையப்பட்டிருக்கும் துணிகளிலும் தொழாமல் இருப்பது சிறந்தது, இன்னும் உருவப்படங்கள் வரையப்பட்டிருக்கும் விரிப்புகளை, இன்னும் அதனைப் போன்று இன்று விற்பனைக்குக் கிடைக்கும் விரிப்புகளைத் தொழுகைக்குப் பயன்படுத்தும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும், அவ்வாறான விரிப்புகளில் தொழவே கூடாது.
உண்பதற்கு உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள்''. (முஸ்லிம் - 560)

உணவு தயாரிக்கப்பட்டு இன்னும் பரிமாறுவதற்குத் தயாராகி இருக்கும் பொழுது அல்லது உண்ண அழைப்புக் கொடுக்கப்பட்டதன் பின்பு, அந்த மனிதர் உணவை முதலில் உண்ண வேண்டும், ஏனென்றால் தொழுகையில் அவர் கவனம் செலுத்த இயலாது என்பதும், அவர் உண்ண விரும்புகின்ற நேரத்தில் தொழுகைக்காக நின்றால் அங்கு உள்ளச்சம் விடை பெற்று விடும் என்பதும் காரணமாகும். இன்னும் அவர் விரைந்து உண்ண வேண்டியதும் அவசியமில்லை, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''(இரவு) உணவு பரிமாறப்பட்டிருக்கும் நிலையில், தொழுகைக்கான நேரம் வந்து விட்டால், மஃக்ரிப் தொழுகைக்கு முன்பதாக முதலில் (இரவு) உணவை உண்ணுங்கள், இன்னும் உணவை வேகமாகவும் உண்டு முடிக்க வேண்டாம்.'' இன்னுமொரு அறிவிப்பின்படி : ''(இரவு) உணவு பரிமாறப்பட்ட நிலையில், தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டு விட்டால், முதலில் (இரவு) உணவை உண்ணுங்கள், இன்னும் விரைந்து உண்டு முடிக்க அவசரப்பட வேண்டாம்.'' (புகாரீ, கிதாப் அல் அதான், பாப் இதா ஹழரல் தஆமு வ யுகீமத் அஸ் ஸலாத், முஸ்லிம் 557-559)

இயற்கை உந்துதல் (மலஜலம்) - அவரச நிலையில் தொழாதீர்கள்

ஒருவருக்கு அவசரமாக மலக் கூடத்திற்குப் போக வேண்டிய தேவை இருக்கும் நிலையில், தொழுகையில் நிற்பது அவரது உள்ளச்சத்தைப் பாதிக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டிய அவசர நிலையில் இருக்கும் பொழுது, தொழுவதைத் தடை செய்துள்ளார்கள். (இப்னு மாஜா, 617, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6832)

எவரொருவர் அவசர நிலையில் இருக்கின்றாரோ அவர் முதலில் கழிவறைக்குச் செல்லட்டும், அதன் தேவையை நிறைவு செய்யட்டும், கடமையான தொழுகையானதாக இருந்து அதில் அவர் தவறியதைத் தவறி விட்டாலும் சரியே, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''கழிவறை செல்வதற்கான தேவை இருந்தும், தொழுகையும் ஆரம்பமாகி விட்டால், அவர் முதலில் கழிவறைக்குச் செல்லட்டும்.'' (அபூதாவூத் - 88, ஸஹீஹ் ஜாமிஇ 299)

இன்னும் அவர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மல ஜலம் கழிப்பதற்கான தேவை வந்து விட்டால், அவர் தொழுகையை இடை நிறுத்தி விடட்டும், இயற்கையின் தேவையை நிறைவு செய்யட்டும், அவரைத் தூய்மைப்படுத்திக் கொண்டதன் பின் தொழட்டும், ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''உணவு தயாராகி விட்டதன் பின்பும், அல்லது ஒருவருக்கு மலஜலங்களை வெளியேற்ற வேண்டிய தேவை அதிகரிக்கும் பொழுதும் தொழுகை இல்லை.'' (முஸ்லிம், 560) சந்தேகமில்லாமல், இயற்கையின் தேவைகள் அதிகரிக்கும் பொழுது அதனை அடக்கிக் கொண்டிருப்பது உள்ளச்சத்தைப் பாதிக்கும். இந்தச் சட்டம் மலப் பாதை வழியே காற்றுப் பிரிய வேண்டிய தேவை இருக்கும் பொழுதும் பொருந்தும்.

தூக்க நிலையில் தொழாதீர்கள்

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறினார்கள், ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''தொழுது கொண்டிருக்கும் நிலையில் உங்களில் ஒருவருக்கு தூக்கம் வருமானால், அவர் (தொழுகையில்) என்ன ஓதுகின்றார் என்பதனை நினைவோடு ஓதும் வரைக்கும் (அவர் போதுமான அளவு ஓய்வெடுத்து) தூங்கிக் கொள்ளட்டும்,'' அதாவது, அவர் மயக்கத்தை உணராத அளவுக்கு சிறு துயில் கொள்ளட்டும். (புகாரீ, 210)

இது (கியாமுல் லைல்) இரவுத் தொழுகையைத் தொழக் கூடியவருக்கு இம்மாதிரியான தூக்க நிலைகள் ஏற்படும், அந்த நேரத்தில் (தொழக் கூடியவன் மற்றும் பிரார்த்திக்கக் கூடியவனின்) பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, இன்னும் அந்த நேரத்தில் தொழக் கூடிய ஒருவன் (தான் என்ன கேட்கின்றோம், பிரார்த்திக்கின்றோம் என்பதை) அறியாமல் கேட்டு, தனக்கு எதிராகவே பிரார்த்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம். இந்த மாதிரியான நிலைகள் கடமையான தொழுகைகளின் பொழுதும் ஏற்படலாம், இத்தகைய நிலையில் தொழுகைக்கான குறிப்பிட்ட நேரம் இன்னும் மீதமிருக்கின்றது (நேரங் கடந்து விடவில்லை) என்ற நிலை இருப்பின், அவர் சிறு துயில் கொண்டு விட்டு பின்பு தொழலாம். (ஃபத்ஹ் அல் பாரி, ஸர்ஹ் கிதாப் அல் உளு, பாப் அல் உளு மினன் னவ்ம்).
பேசிக் கொண்டிருக்கின்ற (அல்லது தூங்கிக் கொண்டிருப்ப)வருக்கு பின்புறமாக நின்று தொழாதீர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதனைத் தடை செய்துள்ளார்கள், அவர்கள் (ஸல்) கூறினார்கள் : ''தூங்கிக் கொண்டிருப்பவர் அல்லது பேசிக் கொண்டிருப்பவர் இவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழ வேண்டாம்.'' (அபூதாவூது, 694, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 375 - ஹஸன்)

- ஏனென்றால் பேசிக் கொண்டிருப்பவரின் பேச்சு தொழக் கூடியவரின் கவனத்தை சிதறடித்து விடும், இன்னும் தூங்கிக் கொண்டிருப்பவரிடமிருந்து வெளிப்படுகின்றவையும் தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு விடலாம்.

அல் கத்தாபி (ரஹ்) கூறினார்கள் : ''பேசிக் கொண்டிருப்பவருக்குப் பின்னால் நின்று தொழுவதானது, அஷ் ஷாஃபிஈ மற்றும் அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோரின் கூற்றுப்படி மக்ரூஹ் - வெறுக்கத்தக்கது, ஏனென்றால் அவர்களது பேச்சு தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பி விடும். (அவ்ன் அல்-மாபூத், 2-388).

தூங்கிக் கொண்டிருப்பவருக்குப் பின்னால் நின்று தொழுவது குறித்து வரும் நபிமொழிகள் பலவீனமானவை என்று ஏராளமான மார்க்க அறிஞர்கள் கருதுகின்றார்கள் (அவைகளில் அபூதாவூத், கிதாப் அஸ் ஸலாத், தஃப்ரீ அப்வாப் அல் வித்ர், பாப் அத் துஆ இன்னும் இப்னு ஹஜர் - னுடைய ஃபத்ஹ் அல் பாரி, ஸர்ஹ் பாப் அஸ் ஸலா ஃகலஃப் அல் நயீம், கிதாப் அஸ் ஸலாத்).

அல் புகாரீ (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கின்றதொரு நபிமொழியை இவ்வாறு பதிவு செய்திருக்கின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களது படுக்கையில் நான் குறுக்கு நெடுக்காகப் படுத்துக் கிடக்கும் நிலையில் (எனக்கு முன்பாக நின்று) தொழுதிருக்கின்றார்கள். (புகாரீ, கிதாப் அஸ் ஸலாத்).

முஜாஹித், தாவூத், மாலிக் ஆகியோர்கள் தூங்கிக் கொண்டிருப்பவரை முன்னோக்கித் தொழுவது மக்ரூஹ் - வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார்கள், தூங்கிக் கொண்டிருப்பவரிடமிருந்து வெளிப்பட்டு விடக் கூடியவை, தொழக் கூடியவரின் கவனத்தைத் திசை திருப்பி விடும் என்பதே காரணமாகும். (ஃபத்ஹ் அல் பாரி)

தூங்கிக் கொண்டிருப்பவருக்கு பின்னால் நின்று தொழும் பொழுது, எதுவும் வெளிப்படுவதற்கான முகாந்திரம் இல்லையெனின், அது மக்ரூஹ் ஆக மாட்டாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

தொழக் கூடியவர் தனக்கு முன்னால் உள்ள இருப்பிடத்தை சுத்தப்படுத்துதல் அல்லது சரி செய்தல்

முஐகீப்(ரலி) அறிவிப்பதவாது : ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ - 1207, ஃபத்ஹுல் பாரி, 3-79)).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழும் பொழுது (தரையைச் சுத்தப்படுத்துவதற்காகத்) மண்ணை விலக்கி விடாதீர்கள், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முற்பட்டீர்களென்றால் ஒருமுறை மட்டும் செய்யவும்.'' (அபூதாவூத், 946, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 7452)

இதன் காரணமென்னவென்றால் உள்ளச்சத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே அதன் காரணமாகும், தொழுகையில் உள்ளசத்தைப் பெற விரும்புவோர்கள் அதில் அதிகமான அசைவைத் தவிர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தொழுகையில் சுஜுது செய்யக் கூடிய இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒருவர், அதனை தொழுகைக்கு முன்பதாகச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னும் தொழுகையின் பொழுது சுஜுது செய்த பின் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணைத் தட்டி விடுதவற்கும் பொருந்தும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தண்ணீரிலும், களிமண்ணிலும் சுஜுது செய்யும் பொழுது, அதன் எச்சங்கள் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும். தொழக் கூடியவர் சுஜுது செய்து விட்டு எழுந்ததும், அதனை அடிக்கடி தட்டி விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், ஏனென்றால் அவர் உள்ளச்சத்துடன் தொழும் பொழுது அதன் லயிப்பில் அதனை அவர் அறிந்து கொள்ள மாட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (புகாரீ, ஃபத்ஹுல் பாரி 3-72)

அபூ அத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அபீ ஷைபா அவர்கள் கூறுகின்றார்கள் : ''எனக்குச் சிவந்த நிற ஒட்டகைகள் கிடைத்தாலும், (தொழுகையில் சுஜுதை நிறைவேற்றியபின்) எனது நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை நான் தட்டி விட மாட்டேன்.'' அயாத் அவர்கள் கூறுகின்றார்கள் : தொழுகையை நிறைவு செய்யும் வரைக்கும், இறையச்சமுடைய அடியார்கள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றைத் தட்டி விட மாட்டார்கள்.'' (அல் ஃபத்ஹ், 3-79).

இதனைப் போலவே தொழுகையாளி தனது தொழுகையை விட்டும் தன்னைப் பாராமுகமாக ஆக்கக் கூடியவற்றினின்றும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும், அதனைப் போலவே பிறரைத் தொந்திரவு செய்வதனின்றும் அவர் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். அவையாவன:
பிறருக்கு இடையூறாக சப்தமாக ஓதாதீர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நீங்கள் அனைவரும் உங்களது இறைவனுடன் உரையாடுபவர்களே, எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு (சப்தமிட்டு ஓதுவதன் மூலம்) இடையூறாக இருக்க வேண்டும், ஓதும் பொழுது உங்களில் ஒருவர் மற்றவரது குரலைக் காட்டிலும் சப்தத்தை உயர்த்த வேண்டாம், அல்லது, ''தொழுகையில்'' என்று அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், 2-83, ஸஹீஹ் ஜாமிஇ 752). இன்னுமொரு நபிமொழியில், ''திருமறையை ஓதும் பொழுது ஒருவர் மற்றவரது குரலை உயர்த்திப் போட்டி போட வேண்டாம்'', என்றார்கள். (இமாம் அஹ்மத், 2-36, ஸஹீஹ் ஜாமிஇ 1951).

தொழுகையில் (அங்குமிங்கும்) திரும்பிப் பார்த்தல் கூடாது

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்னுடைய அடியான் தொழுகையில் இருக்கும் பொழுது அல்லாஹ் அவனை நோக்கிய வண்ணமே இருப்பான், எதுவரையெனில் அவன் தொழுகையை விட்டும் திரும்பாத வரைக்கும், ஆனால் அவன் தொழுகையை விட்டும் திரும்பி விட்டானென்றால், (அல்லாஹ்) அவனை விட்டும் திரும்பி விடுவான். (அபூதாவூத், 909, ஸஹீஹ் அபூதாவூத்)

தொழுகையை விட்டும் ஒருவன் திரும்புவது இரண்டு வகையில் அமையும் :

அல்லாஹ்வின் நினைவினை விட்டும் ஒருவன் தன்னுடைய கவனத்தைத் திசை திருப்புவது

அவனது கண்களைத் திசை திருப்புவது


இரண்டுமே தொழுகையின் பொழுது தடுக்கப்பட்ட செயல்களாகும், இவை தொழுகையாளியினுடைய வெகுமதிகளைக் குறைத்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையின் பொழுது ஒருவன் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்ட பொழுது, ''அது ஷைத்தான் அவனுடைய தொழுகையிலிருந்து (வெகுமதிகளைத்) திருடுவது போன்றதாகும்'' என்றார்கள். (புகாரீ, கிதாப் அல் அதான், பாப் அல் இல்திஃபாத் ஃபில் ஸலாத்)

தொழுகையின் பொழுது ஒருவன் தனது மனதால் அலை பாய்ந்து கொண்டிருப்பவனாக அல்லது கண்களால் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருப்பதனை இவ்வாறு விளக்கலாம், அதாவது ஒரு மனிதனை அவனது ஆட்சியாளன் அழைத்திருக்க, அவன் முன் நின்று கொண்டிருக்கும் குடிமகனைப் பார்த்து அந்த ஆட்சியாளன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னுடைய ஆட்சியாளன் தன்னை நோக்கி என்ன கூறிக் கொண்டிருக்கின்றான் என்பதனைச் செவிமடுக்காமல், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் திரும்பிக் கொண்டிருப்பானேயானால், அந்த ஆட்சியாளன் சொல்ல வந்த விஷயமென்ன என்பதைப் பற்றி இவன் கேட்கவுமில்லை, அவன் சொல்ல வந்ததில் எதனையும் இவன் புரிந்து கொள்ளவும் இல்லை, ஏனென்றால், அவனது உள்ளமும், மனதும் அவனிடமில்லை அது எங்கோ அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது என்பதே காரணமாகும். இத்தகையவனுக்கு அந்த ஆட்சியாளன் என்ன தான் செய்து விட முடியும்? இன்னும் எப்படி அவனுக்கு உதவுவதற்கு மனது வரும்? இந்த மனிதனும் அந்த ஆட்சியாளனிடம் என்ன தான் எதிர்பார்க்க முடியும்?

அந்த ஆட்சியாளனை விட்டும் அவன் அகன்று விட்ட பொழுது, அவன் வெறுக்கப்படக் கூடியவனாகவும் இன்னும் எந்தவிதத்தில் மதிப்பற்றவனாகவும் ஆகி விடுவான். தொழுகையின் பொழுது தன்னுடைய முழுக் கவனத்தையும் இறைவனின் பால் செலுத்தக் கூடியவனும், தொழுகையைப் பராக்காக்கிக் கொண்டவனும் சரி சமமாகி விட முடியாது. இறையச்சமுடையவன் மகத்துவமிக்கவனாகிய வல்ல இறைவனின் முன்பாக நாம் நின்று கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வுடன் அவன் அச்சத்துடனும், அற்பணிப்புடனும் நின்று கொண்டிருப்பான், இன்னும் அத்தகையவன் தன்னுடைய இறைவன் முன் நின்று கொண்டிருக்கும் பொழுது, அல்லாஹ்வின் மீதான கவனத்தை விட்டும் அல்லது தன்னுடைய பார்வையைத் திருப்பி விடுவதற்கு வெட்கப்படக் கூடியவனாக இருப்பான். இறையச்சத்துடன் தொழுபவனுக்கும் இன்னும் தொழுகையில் பாராமுகமாக இருப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஹஸன் இப்னு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ''கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் இரண்டு மனிதர்கள், ஆனால் அவர்களது நற்பேறுகளோ வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தொலைவைப் போன்றது. ஒருவன் தன்னுடைய முழுக்கவனத்தையும் அல்லாஹ்வின்பால் திருப்பியவனாக இருக்கின்றான், அடுத்தவனோ பொடுபோக்குத் தன்மையுடனும், (இறைவனை) மறந்த நிலையிலும் நிற்கின்றான். (அல் வாபில் அல் ஸயிப் - இப்னுல் கைய்யிம், தார் அல் பயான், பக்.36)

ஒருவன் தொழுது கொண்டிருக்கும் நிலையில் நன்னோக்கத்திற்காகத் திரும்பினால், அது ஒன்றும் பிரச்னையில்லை. அபூதாவூத் ல் ஸஹ்ல் இப்னு அல் ஹன்ஸலிய்யா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது : ''நாங்கள் சுபுஹ் தொழுகையை ஆரம்பித்தோம், (அப்பொழுது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சமவெளிப்பகுதியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.'' அபூதாவூத் அவர்கள் அறிவிப்பதாவது : ''சமவெளிப்பகுதியினைப் பாதுகாப்பதற்காக வேண்டி இரவில் ஒரு குதிரை வீரரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.'' இது எதைப் போன்றதென்றால், உமாமா பின்த் அபு அல் ஆஸ் அவர்களைச் சுமந்து கொண்டிருந்த போதும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கதவைத் திறந்து விட்ட போதும், மக்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்காக மிம்பரிலிருந்து கீழிறங்கி வந்த அதேவேளையில் தொழுத பொழுதும், கிரகணத் தொழுகையின் பொழுது ஒரு அடி பின்னோக்கி காலடி எடுத்து வைத்த பொழுதும், தொழுகையின் பொழுது அதனைக் கெடுப்பதற்காக ஷைத்தான் இடையூறு செய்த பொழுது அவனை எட்டிப் பிடித்த பொழுதும் - என்பதனை ஒத்திருக்கின்றது. தொழுகையின் பொழுது குறுக்கிடும் பாம்பு, தேள் போன்றவற்றைக் கொல்லும்படியும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் இன்னும் தொழுது கொண்டிருக்கின்ற நபருக்கு முன்னால் குறுக்கே நடக்கின்றவனைத் தடுத்து நிறுத்துவதற்காக தன்னுடைய தொழுகையை இடைநிறுத்தி விடவும், இன்னும் (அதையும் மீறிச் செல்பவன் எவனோ) அவனிடம் சண்டையிடவும் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இன்னும் (தொழுகையின் பொழுது இமாம் தவறிழைத்து விட்டால்) பெண்கள் தங்கள் கைகளைத் தட்டி ஓசை எழுப்பும்படியும், தொழுது கொண்டிருக்கின்ற வேளையில் உங்களுக்கு ஸலாம் சொல்லக் கூடியவரை நோக்கி கைகளை அசைத்து சைகை செய்து கொள்ளவும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் தேவையின் நிமித்தம் தொழுகையின் பொழுது பல்வேறு அசைவுகளுக்கு அனுமதி இருக்கின்றது, ஆனால் அது தேவையற்ற வகையில், விளையாட்டுத் தனமாக செய்யக் கூடிய அசைவுகள் இறையச்சத்தைப் பாதிக்கும் இன்னும் இவை போன்றவைகள் தொழுகையின் பொழுது அனுமதிக்கப்படவில்லை. (மஜ்மஊ அல் ஃபத்வா, 22-559).
தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது

தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்ப்பதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதோடு, எச்சரிக்கையும் செய்திருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் தொழுது கொண்டிருக்கின்ற எவரும் வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது, பார்க்கக் கூடியவர் தனது பார்வையை இழந்து விடுவார். (அஹ்மத், 5-294, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 762). இன்னுமொரு அறிவிப்பில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''தொழுது கொண்டிருக்கின்ற வேளையில் வானத்தை நோக்கி அன்னாந்து பார்க்கக் கூடியவர்களே, உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?'' என்று கூறினார்கள். இன்னுமொரு அறிவிப்பில், ''தொழுகையின் பொழுது துஆக் கேட்கும் நேரத்தில் அவர்கள் தங்களது முகங்களை வானத்தை நோக்கிப் பார்க்கின்றார்கள்?'' என்று வந்துள்ளது. (முஸ்லிம், 429). இவ்வாறு தொழுகையின் பொழுது வானத்தை நோக்கிப் பார்ப்பதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, ''அதனை அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்'', அல்லது ''அவர்களது பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்'' என்று கூறினார்கள். (இமாம் அஹ்மத், 5-258, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 5574).

தொழுது கொண்டிருப்பவர் தனக்கு முன்னால் (எச்சிலைத்) துப்ப வேண்டாம்

இது இறையச்சத்திற்கு முரணானது, இன்னும் அல்லாஹ்வின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது இது பண்பாடான செயலல்ல. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் தொழுது கொண்டிருப்பவர், அவருக்கு முன்பாக துப்பிக் கொள்ள வேண்டாம், தொழுது கொண்டிருப்பவருக்கும் பொழுது, அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான்.'' (புகாரீ, 397)

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்று விட்டால், அவருக்கு முன்புறமாகத் துப்ப வேண்டாம், ஏனென்றால் அவர் அருட்கொடையாளனும், இன்னும் மகத்துவமிக்கவனுமாகிய - அல்லாஹ்வினிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றார், அவர் தொழுகைக்கான இடத்தில் நின்று கொண்டிருக்கின்ற வரையிலும், இன்னும் அவர் தனது வலப்புறமாகத் துப்ப வேண்டாம், ஏனென்றால் அவருக்கு வலப்புறமாக ஒரு மலக்கு (நியமிக்கப்பட்டு) இருக்கின்றார். அவர் தனக்கு இடப்புறமாகத் துப்பிக் கொள்ளட்டும் அல்லது அவரது பாதத்திற்கு அடியில் துப்பி அதனை மூடி விடட்டும்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ். 416, 1-512).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்று விட்டால், அவர் அகிலங்களின் அதிபதியுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார், இன்னும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அவனுக்கும் கிப்லாவுக்கும் இடையில் இருக்கின்றான், எனவே உங்களில் எவரும் கிப்லாவை முன்னோக்கித் துப்ப வேண்டாம், ஆனால் அவர் தனக்கு இடப்புறமாகவோ அல்லது பாதத்திற்கு கீழாகவோ துப்பிக் கொள்ளட்டும்''. (புகாரீ, அல் ஃபத் அல் பாரீ, 417, 1-513).

இப்பொழுது பள்ளிவாசல்கள் கார்பெட் மற்றும் கோரைப் பாய் அல்லது ஜமுக்காளம் போன்ற தொழுகை விரிப்புகளாக விரிக்கப்பட்டு தொழுவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்பெட்டுக்குக் கீழாகவோ அல்லது பாய் அல்லது ஜமுக்காளத்திற்குக் கீழாகவோ துப்பாமல் கைக்குட்டை மற்றும் காகிதத்தில் துப்பி தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்து, பின்பு வெளியில் சென்றவுடன் குப்பையில் போட்டு விட வேண்டும்.

தொழுகையின் பொழுது கொட்டாவி விட வேண்டாம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால், அவரால் இயன்ற அவரை அவர் அதனை அடக்கிக் கொள்ளட்டும், அவ்வாறில்லா விட்டால் (அவரது தொழுகையில் இடையூறு செய்ய) ஷைத்தான் நுழைந்து விடுவான்.. ..'' (முஸ்லிம், 4-2293). தொழுகையாளியின் தொழுகையில் ஷைத்தான் நுழைந்து விட்டால், அவன் அவனுக்கு அதிக இடையூறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவான், இன்னும் மேலதிகமாக கொட்டாவி விடுபவனைப் பார்த்து அவன் சிரிக்கின்றான் (என்றும் கூறினார்கள்).

தொழுகையின் பொழுது இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தொழ வேண்டாம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''தொழுகையின் பொழுது இடுப்பில் கை வைப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.'' (அபூதாவூத் 947, ஸஹீஹ் புகாரீ, கிதாப் அல் அம்ல் ஃபில் ஸலாஹ், பாப் அல் ஹழர் ஃபில் ஸலாஹ்).

ஸியாத் இப்னு ஸுபைஹ் அல் ஹனஃபி என்பவர் கூறுவதாவது : ''நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று தொழுதேன், (அப்பொழுது) எனது கையை எனது இடுப்பில் போட்டேன், இப்னு உமர் (ரலி) அவர்கள் அதனைத் தட்டி விட்டார்கள். இன்னும் அவர் தொழுகையை முடித்ததன் பின்னால், ''இது தொழுகையில் இடையூறு விளைவிப்பதாகும்'', இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்'', என்றும் கூறினார்கள். (இமாம் அஹ்மத் 2-106 இன்னும் பலர். அல் ஹாபிழ் அல் இராக்கி அவர்கள் தனது தஃக்ரீஜ் அல் இஹ்யா எனும் நூலில் இதனை ஸஹீஹ் என்று கூறியிருக்கின்றார்கள். இன்னும் இல் இர்வா 2-94 ஐயும் பார்க்கவும்).

''(இத்தைகய) செயல்கள் ஒருவரை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள், அல்லாஹ் அவ்வாறான தண்டனையிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக.'' (அபூஹுiரா (ரலி) அவர்கள் வழியாக பைஹகி இதனை அறிவிக்கின்றார்கள். அல் இராகி அவர்கள், இதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருத்துரைத்திருக்கின்றார்கள்).

தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுதல் கூடாது

''தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுவதையும் அல்லது வாயை (ச் சுற்றி துணி போன்றவற்றினைக் கொண்டு) மூடி வைத்திருப்பதும் கூடாது. (அபூதாவூத் 643, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6883, ஹஸன் - ஸஹீஹ்).

'அவ்ன் அல் மாபூத்' (2-347) - ல் அல் கத்தாபி அவர்கள் கூறுவதாவது : 'அல் ஸத்ல்' என்பது வழி நெடுகிலும் ஒருவர் ஆடையைக் (கிரண்டைக் காலுக்கும் கீழாக அணிந்து) தொங்க விட்டபடி செல்வது, என்றார்கள். மர்காத் அல் மஃபாதீஹ் (2-236) ல் குறிப்பிட்டிருப்பதாவது : ''அல் ஸத்ல்' என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது, ஏனென்றால் அது பெருமையடிப்பதாகவும், இன்னும் தொழுகையினை மோசமாகவும் ஆக்கக் கூடியது.'' அந் நிஹாயா - ல் குறிப்பிடப்படுவதாவது : ''ஒருவர் தன்னை ஆடையால் போர்த்திக் கொண்டு, அதனுள் தன்னுடைய கையை நுழைத்துக் கொண்டு, இன்னும் ருகூஉ வையும், சுஜுதையும் செய்வதைக் குறிக்கும்.'' இது யூதர்களின் பழக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்னும் ஸத்ல் என்பது - ஒருவர் தனது தலைக்கு மேலாக துணியைப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும் அல்லது தோள்பட்டையின் மீது, இன்னும் கைலியின் அடிப்பகுதியை முன்பாகத்தில் தவழ விடுவது இன்னும் ஒருவருடைய தோள்பட்டையின் மேலாகப் போட்டுக் கொள்வது, இன்னும் தனது உடைகள் மற்றவைகள் சரி செய்வதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது, இன்னும் இவை போன்ற செயல்கள் ஒருவரது உள்ளச்சத்தைப் பாதிக்கும், இன்னும் உடைகளை சரியானபடி அணிந்திருத்தல் அல்லது பட்டன்கள் சரியானபடி மாட்டியிருத்தல், இவை போன்றவைகள் ஒருவரது தொழுகையைப் பாதிக்காது, அல்லது தொழுகையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பாது. ஆனால் உடைகளைச் சரியான விதத்தில் அணியவில்லை என்றால், அதனைச் சரி செய்வதற்கும் இன்னும் அதனை பராமரிப்பதற்குமே அவர் தொழுகையின் பொழுது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவராக இருப்பார். இது போன்ற தொழுகையைப் பாழடிக்கக் கூடியவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னும் ஒருவர் தொழுகையின் பொழுது ஏன் தனது வாயை மூடிக் கொண்டிருப்பது கூடாது என்றால், அவ்வாறு வாயை இறுக மூடி இருக்கும் பொழுது அவர் திருமறையைத் தெளிவாக ஓத முடியாது என்பதும், இன்னும் சரியான முறையில் சுஜுது செய்வதற்கு அது தடையாக இருக்கும் என்பதினாலாகும். (மர்காத் அல் மஃபாதீஹ், 2-236)
விலங்கினங்களைப் போல இருக்கக் கூடாது

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களது மக்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான், இன்னும் மனித வர்க்கத்தை படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாகப் படைத்துள்ளான், எனவே இவ்வளவு உன்னதத்துடன் படைத்திருக்கக் கூடிய மனிதப் படைப்பு? விலங்கினத்தைப் போலத் தோற்றமளிப்பதோ அல்லது விலங்கினத்தைப் போல ஒப்புவமைப்படுத்திக் கொள்வதோ அழகல்ல, வெட்கரமானது. தொழுகையின் பொழுது - விலங்கினத்தைப் போலத் தோற்றமளிப்பதையோ அல்லது நடித்துக் காட்டுவதையோ அல்லது விலங்கினம் போல நடந்து காட்டுவதையோ இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. ஏனெனில் இவை தொழுகையாளியின் உள்ளச்சத்தைப் பாதிக்கும் அல்லது இது போன்ற நடத்தைகள் அசிங்கமானது இன்னும் இது தொழுகையாளிக்கு ஏற்புடையதுமல்ல. உதாரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது, அவர்கள் மூன்று விஷயங்களைத் தடை செய்திருக்கின்றார்கள் : (அதாவது) காக்கையைப் போலக் கத்துவது, புலால் உண்ணிகள் (புலி, சிங்கம், நாய்) போல முன்னங்கால்களைப் பரப்பிக் கொள்ளுதல், அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் மீதே எப்பொழுதும் தொழுதல், அதாவது ஒட்டகம் தனக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து அதன் மீதே எப்பொழுதும் உட்காருவது போல. (அஹ்மத், 3-428, அல் ஃபத்ஹ் - அல் ரப்பானி, 4-91).

இன்னுமொரு அறிவிப்பின்படி, ''கழுதை போலக் கத்துவதையும், நாயைப் போல அல்லது நரியைப் போல உட்காருவதையும் (இறைத்தூதர் (ஸல்) அவர்கள்) தடை செய்திருக்கின்றார்கள்.'' (இமாம் அஹ்மத், 2-311, ஸஹீஹ் அல் தர்கீப், 556).

மேற்கண்ட அனைத்தும் தொழுகையில் இருந்து கொண்டிருக்கக் கூடியவரின் உள்ளச்சத்தைப் பாதிக்கக் கூடியவைகள், எனவே அவற்றைத் தவிர்ந்து கொள்வதன் மூலமும், இன்னும் கவனத்தைத் திசை திருப்பக் கூடியவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini