அன்புச் சகோதரர்களே! இந்த அளவுக்குச் சகோதரத்துவத்தை இஸ்லாம் வலியறுத்தும்போது அதன் முக்கியத்துவம், சிறப்பு குறித்து பேசும் போது இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டுவது கடமை எனக் கருதுகிறேன்.
இன வாதத்திற்கு எதிரான சகோதரத்துவம்
அதாவது, இத்தகைய சகோதரத்துவ உணர்வு எந்த நிலையிலும் இன வாதமாக மாறிவிடக் கூடாது! அது மிகப் பெரிய தவறாகும். ஏனெனில் இனவாதம் இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு முரணானது., எதிரானது! இவ்வுலகத்திற்கு இறைத்தூதர்கள் வருகை தந்ததும் இறைவேதங்கள் அருளப்பட்டதும் இனவாதத்தைக் கில்லி எறிவதற்காகத்தான். அதன் அடிப்படையிலான குறுகிய சிந்தனையையும் குதர்க்கமான போக்கையும் மாற்றி மனித குலம் முழுவதும் ஒரே குடும்பம்., எல்லா மனிதர்களின் நலனையும் பேணிட வேண்டும்., எல்லா மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்., நீதி எல்லாருக்கும் பொதுவானது., அது விருப்பு வெறுப்பு இன்றி, தயவு தாட்சண்யமின்றி நிலைநாட்டப்பட வேண்டும் எனும் பரந்த நோக்கத்திற்காகவே இவ்வுலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் பாடுபட்டார்கள்.
ஒருமுறை நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உன் சகோதரனுக்கு உதவி செய்திடு., அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார்....!
ஆனால் இஸ்லாம் வருவதற்கு முன்... இனவாதமும் அநீதியும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. மேலே சொன்ன நபிமொழியின் இந்தப் பகுதி அப்பொழுது ஒரு சுலோகமாகவே மாறிவிட்டிருந்தது! யாரேனும் அதனைச் சொன்னால் சரிதான், சரிதான்., நம் சகோதரனுக்கு உதவிட வேண்டும் தான்., அவன் செய்வது நியாயமா? அநியாயமா? சரியா? தவறா? என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவனுக்குக் கை கொடுக்கத்தான் வேண்டும்., அவனைக் காப்பாற்றத்தான் வேண்டும் என்று ஆங்காங்கு ஆமோதிப்பும் ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமும் எழுந்த வண்ணமிருக்கும்!
ஆனால் அத்தகைய இனவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு நீதியின் அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வை நிலை நாட்டி, சீரான அடித்தளத்தின் மீது சமுதாயத்தைக் கட்டியெழுப்பிய பிறகு அதே சுலோகத்தை நபிகளார் கூறியதும் ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார்., என்ன சொன்னார்?
அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!
நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும். அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி ' (நூல்: புகாரி)
இன்றைய காலகட்டத்தில்,மனித குலத்தைச் சீர்திருத்த வந்த முஸ்லிம்களே இன வாதம் பேசினால் ஒரே இறை., ஒரே குலம், ஒரே மறை எனும் உண்மையை எடுத்துரைத்து உலக மக்களை அனைவரையும் இறைமார்க்கத்தின் பக்கம் அழைக்கக் கடமைப்பட்டவர்களே இனவாதத்திற்குப் பலியானால் நிலைமை என்னாவது? தமது இனத்திற்காக மட்டும், அதன் முன்னேற்றத்திற்காக மட்டும் பரிந்து பேசுபவர்கள்., வலிந்து வாதாடுபவர்கள் இவர்கள்., இவர்களது மார்க்கம் நமக்குத் தேவை இல்லை எனக் கருதிக் கொண்டு மக்கள் இஸ்லாத்தை விட்டும் விலகிச் செல்லும் சூழ்நிலைதான் மேலும் மேலும் தொடர்கதையாகின்ற!
இஸ்லாமிய சகோதரத்துவம் இன வாதத்திற்கும் எதிரானது. அவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ள நாசூக்கான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். சரியான கருத்தின் அடிப்படையிலான சகோதரத்துவ உறவை வளர்க்க வேண்டும். வலுப்படுத்த வேண்டும்.
நெறிபிறழாது பயணிக்கச் சில நிபந்தனைகள்
ஒருவன் சகோதரத்துவம் என்ற பெயரில் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு மேலே சொன்ன சகோதரத்துவப் பயன்பாடுகளை எதிர்பார்த்தான் எனில் கானலைப் பார்த்து தண்ணீர் என ஏமாறும் நிலைதான் ஏற்படும். சகோதரத்துவத்திற்கென சிலநெறிமுறைகள் - நிபந்தனைகள் உள்ளன. அவற்றைப் பேணினால் தான் அவற்றின் பயன்களை அடைய முடியும்.
1) அல்லாஹ்வின் உவப்புதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒரு மனிதர் வேறொரு கிராமத்தில் உள்ள தன் சகோதரனைச் சந்திப்பதற்காகச் சென்றார். அந்தப் பாதையில் அவனை எதிர்பார்த்திருக்குமாறு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைத்தான். அங்கு அவர் வந்த போது மலக்கு கேட்டார்: நீ எங்கே செல்கிறாய்? அதற்கு அவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன் என்றார். நீ அவருக்கு ஏதேனும் உபகாரம் செய்து அதற்கு கைமாறு பெற நாடுகிறாயா? என்று மலக்கு கேட்டார். அதற்கு அவர், அப்படி ஒன்றுமில்லை. அல்லாஹ்வுக்காக அவரை நான் நேசிக்கிறேன் என்றார். அப்பொழுது வானவர் சொன்னார்: ஒரு விஷயத்தை அறிவிப்பதற்காக அல்லாஹ்தான் என்னை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளான்;: நீ அவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது போன்று அல்லாஹ் உம்மை நேசிக்கிறான் (நூல்: முஸ்லிம்)
2) இறையச்சத்துடன் சகோதரத்துவம் பேணிட வேண்டும். அதா வது, கடமைகளில் பொடுபோக்கும் தீமை நாடுவதும் தவிர்க்கப் படவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர்' (49 :10). மேலும் இறையச்சத்தின் அடிப்படையில் அமையாத உறவுகள் அனைத்தும் பாழாகப் போய்விடும் என்பதை இவ்வாறு தெளிவுபடுத்துகிறது திருக்குர்ஆன்:
அந்த மறுமை நாளில் ஏனைய நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவர்., இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களைத் தவிர! '(43: 67).
எனவே புகழாசை, அதிகார மோகம், பட்டம் பதவி போன்றவை குறுக்கிட்டால்; சண்டை சச்சரவு தான் வளரும்.
3) பிறர் நலன் நாடுதல் எனும் அடிப்படையில் அமைந்திட வேண்டும். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்;:
'நான் நபியவர்களிடம், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுதல் ஆகியவற்றின் பேரில் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தேன்' (புகாரி)
4) நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் முதன்மை நோக்கமும் இதுவே. இந்நிலை இல்லையெனில் அது, சகோதரத்துவம் வலுவிழந்து வருவதன் அடையாளமாகும்.
5) வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது. அதாவது, இது போன்ற சூழ்நிலைகளில் தம் சகோதரர்களின் நலனுக்காக அர்ப்பணமாகும் நிலை இருக்க வேண்டும்! இந்நிலையை வலியுறுத்தக் கூடிய நபிமொழிகளில் முத்தாய்ப்பாக ஒன்று:
'உங்களில் எவரும் தனக்கு விருப்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் இறை நம்பிக்கையாளராக முடியாது ' (நூல்: முஸ்லிம்)
சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் வழிமுறைகள்
இஸ்லாம் வகுத்துத்தந்துள்ள கூட்டு வழிபாடுகள் யாவும் இந்தச் சகோதரத்துவ உணர்வையும் உறவையும் வலுப்படுத்தக் கூடியவையே! ஜும்ஆ - ஜமாஅத் மற்றும் பெருநாள் தொழுகைகள, ஹஜ் ஆகியவை போன்று. அதிலும் குறிப்பாக பரஸ்பர உதவி ஒத்துழைப்பு, பிறர் நலனில் அக்கரை கொள்ளல் போன்ற உணர்வுகளுக்கு நோன்பு, ஜகாத் வழிபாடுகளில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் சில உரிமைகளையும் ஒழுங்கு முறைகளையும் பேணி வாழும்படி இஸ்லாம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக கல்விப்பணி, நன்மை கொண்டு ஏவுதல், தீமையைத் தடுத்தல் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணி போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் சகோதரர்கள் பரஸ்பரம் இந்த உரிமைகளைப் பேணுவது மிகவும் அவசியமாகும்.
ஒழுங்கு முறைகளைக் காட்டிலும் உரிமைகளைப் பேணுவது கடமையாகும். ஆனாலும் சூழ்நிலையைப் பொறுத்து சில ஒழுங்கு முறையைப் பேணுவதும் கடமை ஆகுவதைக் காணலாம்.
புகாரியில் பதிவாகியுள்ள பராஉ பின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் வந்துள்ளது: 'ஸலாம் எனும் முகமன் கூறுவது, அதற்கு அழகிய முறையில் பதிலளிப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸா அடக்கம் செய்வதில் கலந்து கொள்வது, தும்மியதும் அல்லாஹ்வைப் புகழ்பவருக்குப் பதிலளிப்பது, அநீதிக்கு உள்ளாகியவருக்கு உதவுவது, விருந்து அழைப்பை ஏற்பது, நல்லுரை பகர்வது, பிறர் கூறும் நல்லுரையை ஏற்பது ஆகியவையும் அந்த உரிமைகளில் சேரும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். (வாங்குவதில்லை எனும் நோக்குடன்) பொருள்களின் விலையைக் கூட்டாதீர்கள். ஒருவருக்கொருவர் கோபப்படாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். பிறரின் வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் நல்லடியாளர்களாக, சகோதரர்களாகத் திகழுங்கள்! ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். மோசடி செய்ய மாட்டான். அவனை இழிவாகக் கருத மாட்டான். இறையச்சம் இங்கு உள்ளது என்று நபியவர்கள் தம் நெஞ்சைச் சுட்டிக்காட்டி மூன்று முறை சொன்னார்கள்! ஒரு மனிதன் தீயவன் என்பதற்கு தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருவதுவதே போதுமானதாகும். ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை, தன்மானம் ஆகியவற்றிற்கு பங்கம் விளைவிப்பது எல்லா முஸ்லிம்களுக்கும் ஹராம் - தடுக்கப்பட்டதாகும். (முஸ்லிம்)
தனக்கு விருப்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் யாரும் இறைநம்பிக்கை கொண்டவராக முடி யாது '(நூல்;: புகாரி) என்ற நபிமொழி மேலே சொன்ன உரிமை களின் பிழிவாக அமைந்திருப்பதைக் காணலாம்.
சகோதரத்துவத்தின் ஒழுங்கு முறைகள்
சகோதரத்துவ உறவுக்கு வலுசேர்க்கும் ஒழுங்குமுறைகள் ஏராளம் உள்ளன. அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் ஒரே வார்த்தை 'நற்குணத்துடன் பழகுவீர்' என்பதாகும்.
நற்குணம்தான் அன்பையும் பாசத்தையும் விதைத்து உள்ளங்களை இணைக்கும் பாலம். இணங்கிப்போகும் பண்பு தான் சகோதரத்துவத்தின் யதார்த்த நிலையாகும். இதைத் தான் நற்குணம் வளர்க்கிறது. ஆனால் பிணங்குவதென்பது ஒருவருக்கொருவர் முரண்படுவதென்பது தீய குணத்தின் விளைவாகும். அது உள்ளங்களில் கோபத்தையும் குரோதத்தையும் புறம்பேசும் போக்கையும் தான் உருவாக்கும்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நற்குணத்துடன் மக்களிடம் பழகிடு. எவர், நரகத்திலிருந்து தூரமாக்கப் படவும் சுவனத்தில் புகுத்தப்படவும் விரும்புகிறாரோ அவர், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட நிலையில் மரணத்தைச் சந்திக்கட்டும். மேலும் மக்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோரோ அப்படியே மக்களிடம் அவர் நடந்துகொள்ளட்டும் (நூல்: அஹ்மத்)
சகோதரத்துவத்தின் இலக்கணத்தை விளக்கக் கூடிய ஓர் மகத்தான உண்மையாகும் இது. இதனையே ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் சுருக்கமாக இவ்வாறு கூறுகிறார்கள்:
எந்த முறையில் மக்களுடன் இணைந்து வாழ விரும்புகிறாரோ அவ்வாறு நடந்து கொள். (பிரச்சினை இல்லை!) ஆனால் நீ நடந்து கொள்வது போன்று தான் மக்கள் உன்னிடம் நடந்து கொள்வார்கள் என்பது நினைவிருக்கட்டும்'
1) ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமையை வழங்குவது முக்கியமான ஒழுங்கு முறையாகும். பலதரப்பட்ட தகுதிகளைப் பெற்ற மக்கள் மத்தியில் இது மிகவும் அவசியமாகும். அப்பொழுது தான் ஒருவருக்கொருவர் மனம் கோணாமல் இணைந்து வாழம் ஆரோக்கியமான சூழல் நிலவும்.
2) தவறுகளை மனம்பொறுத்தல்! ஏனெனில் தவறு செய்வதென்பது மனித இயல்பே ஆகும். எனவே சகோதரர்களிடம் காணப்படும் சிறு சிறு குறைகளை மறந்திட மறைத்திட வேண்டும். எதுவும் நடைபெறாதது போன்று நடந்து கொள்ள வேண்டும்.
3) மலர்ந்த முகம், கனிந்த மொழி, பரந்த மனம், மாசற்ற நெஞ்சம். சகோதரர்கள் கூறும் நல்லுரையை ஏற்றல், தனக்கு விரும்புவதையே அவர்களுக்கும் விரும்புவது.
4) நல்லெண்ணம் கொள்வது. பிறரது வார்த்தையை நல்ல பொருளில் எடுத்துக் கொள்வது. அவர்கள் முன்வைக்கும் சாக்குப் போக்குகளை ஏற்றுக்கொள்வது. அவர்களின் மன நிலை புரிந்து கொள்வது.
5) நட்பு முறியாதவாறும் மனச்சோர்வு ஏற்படாதவாறும் நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பராமரிப்பது. தவறு நடந்ததற்கான காரணம் கேட்டு முறையான கால அவகாசம் அளித்து பரிசீலனை செய்வது மிகவும் முக்கியமாகும். பணிவு, பழைய நேசத்தைப் பாதுகாப்பது. இரகசியங்களை மறைப்பது.
6) அபாயகரமான, அச்சத்திற்குரிய விஷயங்கள் நீங்கலாக இதர சாதாரணமான விஷயங்களில் பரஸ்பரம் உடன் பட்டுப்போவது. நட்பு நீடிப்பதற்கு இது மிகவும் அவசியம். எடுத்தற்கெல்லாம் முரண்படுவது கூடாது. அது நட்பைக் குலைத்து விடும்.
7) ஆலோசனைப் பண்பு. சரியான கருத்தை ஏற்றுக் கொள்வது. பிறர் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பது, எதிரிகளால் புழுதி வாரித் தூற்றப்படும்போது சகோதரர்களுக்குத் தற்காப்பு கொடுப்பது, அவர்கள் சார்பாக வாதாடுவது, அவர்களுக்கு உதவி புரிவதில் ஆர்வம் கொள்வது, அவர்களது சுக துக்கங்களில் பங்கேற்பது, அன்பளிப்புகள் மூலம் அவர்களது அன்பைப் பெறுவது, அடிக்கடி அவர்களைச் சந்திப்பது, பொருளுதவி செய்வது, கோபதாபங் களைப் பொறுத்துக் கொள்வது, அவர்களுக்கும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கண்ணியம் அளிப்பது,
8)அவர்கள் கூறும் விஷயங்களைக் காது கொடுத்திக் கேட்பது, அவர்கள் இல்லாத இடத்தில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது, உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்;: ஒருவர் தன் சகோதரருக்கு உரிமைகளை நிறைவேற்றாமல் குறைபாடு செய்து விட்டால் அதைப் பொறுத்துக் கொள்வதும் மன்னித்து விடுவதும் கடமையாகும். அந்தக் குறைபாடு உறவை முறிக்கும் அளவுக்கு வளர்ந்தாலே தவிர! அப்பொழுதும் கூட அந்தக் குறையைத் தனிமையில் கண்டிப்பது உறவை முறிப்பதை விடவும் சிறந்தது. சாடையாகச் சொல்லிக் காட்டுவது தான் வெளிப்படையாகச் சொல்லிக் காட்டுவதை விடச் சிறந்தது. கடிதத்தில் தெரிவிப்பது நேரடியாகச் சொல்வதை விடச் சிறந்தது.
சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் ஆபத்துகள்
இவை எப்பொழுதும் கவனத்தில் இருக்க வேண்டிய விஷயங்களாகும். சகோதரத்துவம் பலவீனப்படாமல் பட்டுப்போகாமல் இருப்பதற்கு இவை மிக முக்கியமாகும்.
1) மேலே சொன்ன சகோதரத்துவ உரிமைகளைப் பேணாமல், ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அதாவது,
பரஸ்பரம் உதவி செய்யாதிருப்பது, உரையாடும் பொழுது ஒழுங்கு முறை கடைப்பிடிக்காதிருப்பது, கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது, அளவின்றி விமர்சனம் செய்வது, வீணாகத் தர்க்கிப்பது, பொறுமையின்றி நடந்து கொள்வது, நான்கு பேருக்கு மத்தியில் புத்திமதி சொல்வது, கோள் மூட்டுபவர்கள் சொல்வதை உண்மையென நம்புவது, ரகசியத்தைப் பரப்புவது, தனிப்பட விவகாரத்தில் தலையிடுவது, சகோதரன் படும் துன்பத்தைக் கண்டு கொள்ளாதிருப்பது, சுய புகழ்பாடுவதுதில் அலாதி இன்பம் காண்பது, அதனூடாக தனது அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வது, தக்க காரணமின்றி வாக்களித்த நேரத்தில் சந்திக்காதிருப்பது, மனக் கவலையை, மனவருத்தத்தை அதிகப்படுத்தும் வகையில் பேசுவது ஆகியவை உறவைக் குலைத்து விடலாம். நோக்கத்தைப் பாழாக்கி விடலாம்.
2) சகோதரனிடம் பூரணமான நிலையை எதிர்பார்ப்பதும் ஓர் ஆபத்தாகும். சகோதரத்துவ உறவு என்பது மனித முயற்சியே தவிர வேறில்லை என்பதையும் பழகும் நிலைகள் களங்கமில்லாமல் இருக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு உட்பட பரஸ்பரம் பேசாதிருக்க ஷரீஅத் அனுமதிருப்பதே இதற்கு ஆதாரமாகும். களங்கமற்ற, முழுக்க முழுக்க நிம்மதியான வாழ்வு என்பது சுவனத்தில்தான் அமைய முடியும்.
3) அளவு கடந்து கண்டிப்பது. எப்பொழுதும் எதிர்மமான விஷயங்களையே பார்ப்பது. சாக்குபோக்கு சொல்வதை ஏற்காதிருப்பது, மனம் பொறுத்துக் கொள்ளும் பண்பை விட்டு விடுவது.
4) கெட்ட எண்ணம் கொள்வது! இது கவலைக்கும் மனக்கஷ்டத்திற்குமே வழி வகுக்கும். ஒரு மனிதன் மீது தவறான எண்ணம் கொண்டு அது பற்றி அவனிடம் கேட்காமலும் பிறரிடம் விசாரக்காமலும் இருந்து, அதன் அடிப்படையிலேயே பல ஆண்டுகளாக அவனைப் பகைத்ததற்குப் பிறகு, அடடா! தவறு செய்த விட்;டோமே., அவன் நல்ல மனிதனாயிற்றே என்று மனம் நொந்து கொண்ட பல நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்.
5) அதிக அளவு சகவாசம் வைப்பதும் குடும்ப அளவில் கூடிக் குலாவுவதும் ஆபத்துதான்! இப்படிப் பழகுவது ஒரு ஜாலிக்காத் தான் என்று சாக்குப்போக்கு வேறு சொல்லப்படுகிறது. ஆனால் சகோதரத்துவத்தின் அசல் நோக்கத்தை விட்டும் திசை திருப்பும் போக்காகும் இது. நேரத்தை வீணாக்குவதுடன் பொறுப்பின்மை ஏற்படவே வழிபிறக்கிறது. அத்துடன் இப்படிப்பட்ட அளவு கடந்த சக வாசத்தினால் வழிச்சறுகல்களும் வரம்பு மீறல்களும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. தப்பெண்ணமும் சந்தேகமும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும் போக்கு தான் வளரும். பழிசுமத்தும் மனப்பான்மைதான் அதிகரிக்கும்.
6) உலகாசை, மக்களின் கைகளிலுள்ள பணத்தில் பேராசை! நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
'உலகில் நீ பற்றற்றவனாகனாக இரு., அல்லாஹ் உன்னை நேசிப்பான். மக்களின் கையிலுள்ள செல்வங்களில் ஆசை கொள்ளாதிரு., மக்கள் உன்னை நேசிப்பார்கள்' (இப்னு மாஜா)
அல்லாஹ்வின் நல்லடியாளர்கள் பற்றி குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு புகழ்கிறது: தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். உண்மை யாதெனில் யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக் கூடியவர்கள் ஆவர்' (59 : 9)
7) வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் அக்கரையின்மையும் இஸ்லாத்திற்கு முரணான செயல்களைச் செய்யும் போக்கும்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சகோதரர்கள் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு வாழும் நிலையில் அவ்விருவரிடையே பிரிவினை ஏற்படுவதற்கு அவர்களில் ஒருவர் செய்யும் பாவமே காரணமாகி விடுகிறது! (புகாரி)
8) சகோதரத்துவக் கடமைகளை வாய்மையுடன் நிறை வேற்றத்தூண்டாத வகையில் பாசம் குன்றிவிடுவது! உணர்வு தளர்ந்து விடுவது! சகோதரத்துவ உணர்வு எந்த அளவு பொங்கியெழ வேண்டுமெனில் அவன் இல்லாத இடத்திலும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய அது தூண்டிக் கொண்டிருக்க வேண்டும். அவனுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளைச் செய்யும்படியும் அவனது அருமை பெருமையையும் உணர்த்திக்கொண்டிருக்க வேண்டும். அவனை இழந்து விட்டால் வாழ்க்கையே சோகம் நிறைந்ததாக உணர்ந்திட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ்வுக்காக பரஸ்பரம் நேசம் கொண்டு வாழும் இருவரில் மிகச் சிறந்தவர் யார் எனில் எவர் தன் சகோதரனை அதிகம் நேசிக்கிறாரோ அவர்தான் ' (அல் அதபுல் முஃப்ரதில் இமாம் புகாரி)
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer