மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4 : 36)
நாம், நன்மை செய்யவேண்டியவர்களின் பட்டியலில் அண்டைவீட்டாரை அல்லாஹ் இணைத்துள்ளான். மேலும் உறவினரான அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அல்லது உறவினரல்லாத அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நன்மை செய்வது முஸ்லிம்களின் கடமை என்பதை மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அவ்வசனத்தின் இறுதியில் " பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்'' என்ற வாசகத்தின் மூலம் அண்டைவீட்டாரை அற்பாக நினைக்கூடாது என்பதையும் அவர்களையும் நம்மை போன்றே எண்ண வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறான்.
மூன்று அண்டைவீட்டார்
அண்டைவீட்டார் அதிகபட்சமாக மூன்று உரிமைகளை பெற்றவராக திகழ்வர். அண்டைவீட்டில் உள்ளவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் இருந்தால் அவர்களுக்கு நாம் மூன்று வகையான உரிமைகளை வழங்க கடமைபட்டுள்ளோம். ஒன்று அண்டைவீட்டாரின்உரிமைகள், இரண்டாவது முஸ்லிம்களின் உரிமைகள், மூன்றாவது உறவினர்களின் உரிமைகள்.
அண்டைவீட்டார் முஸ்லிமாக மட்டும் இருந்தால் அவருக்கு இரண்டு உரிமைகளை வழங்கபடவேண்டும். ஒன்று அண்டைவீட்டாரின் உரிமைகள், இரண்டாவது முஸ்லிம்களின் உரிமைகள்.
அண்டைவீட்டார் முஸ்லிமாக இல்லாமலிருந்தால் அவருக்கு அண்டைவீட்டாரின் உரிமை மட்டும் கிடைக்கும்.
அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்.1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார்.இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். இவருக்கு அண்டைவீட்டார் உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு. 3. மூன்று உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டைவீட்டடார் என்று உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம் :7 பக்கம் :185)
கண்ணிப்படுத்துங்கள்!
நம் வீட்டில் விசேஷங்கள் ஏதும் நிகழ்ந்தால் முதலில் அண்டைவீட்டாருக்கு அழைப்புக் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்தவேண்டும். ஆனால் இன்று சின்ன பிரச்சனைகளால் சண்டையிட்டுக் கொண்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் வரும் போது, ஊர் முழுக்க அழைப்பு கொடுப்பவர்கள் பக்கத்துவீட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. கொடுத்தாலும்கூட மரியாதை கலந்த அழைப்பாக இருப்பதில்லை. நபிகளார் அவர்கள் இது போன்று நடப்பவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறார்கள்.
"அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுýரைரா (ரலி), நூல் : புகாரீ (6019)
இறைவனின் அன்புக்கு அழகிய வழி
அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளட்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி), நூல்கள் : ஷýஅபுல் ஈமான்-பைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம் : 6.
நபிகளாரின் இறுதி அறிவுரை
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது "நான் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறேன்' என்று அதிமாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர்-தப்ரானீ, பாகம் : 8, பக்கம் : 111)
யார் முஸ்லிம்?
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான்.
"உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்னமை செய் நீ முஸ்லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி),நூல் : இப்னுமாஜா (4207)
உதவுங்கள்
அண்டைவீட்டார் சிரமப்படும் போது அவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வது, நோயுற்றால் மருத்தவரிடம் கொண்டு செல்வது, நோயுற்ற நேரத்தில் உணவுகளை சமைத்துக் கொடுப்பது என்று எல்லாவிதமான உதவிகளையும் செய்யவேண்டும். நம் உறவினர்களுக்கு செய்வதைப் போன்று அவர்களுக்கும் நாம் செய்யவேண்டும்.இதை பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.
அண்டைவீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டைவீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ (60014)
குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்
அண்டைவீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்கவேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அவர்களுக்கும் வழங்கவேண்டும்.
அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : முஸ்லிம் (4758)
அற்பமானது என்று கொடுக்காமல் இருந்துவிடாதீர்!
நாம் அண்டைவீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்தாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை, சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்கவேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாக கருதக்கூடாது.
"முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுýரைரா (ரலி), நூல் : புகாரீ (2566)
அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்
ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்யமுடியும், குறைவான பொருட்களே இருக்கிறது என்றால் அண்டைவீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் " இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரீ (2259)
சிறந்ததை தேர்வு செய்யுங்கள்
நம்மிடம் உள்ளதில் எது மட்டமானதோ அல்லது எதை சாப்பிட நாம் விரும்ப மாட்டோமோ அத்தகைய பொருள்களை அண்டைவீட்டாருக்கு வழங்காதீர்கள்! நல்ல தரமான பொருள்களை வழங்குங்கள். நீங்கள் சாப்பிடுவது சாதாரணமான பொருளாக இருந்தால் அதை வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மட்டமான பொருட்களாக தேர்வு செய்து வழங்கக்கூடாது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 267)
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! "தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (65???)
தான் மட்டும் வயிராற சப்பிடமாட்டான்
பக்கது வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் போது, பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறுபுடைக்க சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல! அண்டைவீட்டில் இருப்பவருக்கு வழங்கிவிட்டு சாப்பிடுவதுதான் இறைநம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.
"தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : அஹ்மத் (367)
"முஸனத் அபூயஃலா' என்ற ஹதீஸ் நூலில் அண்டைவீட்டான் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மரப்பலகை அடித்தல்
பக்கத்து வீடு என்று வரும்போது அவர்கள் வீட்டை கட்டும் போது அல்லது வீட்டை புதுப்பிக்கும் போது மரக்கட்டைகள் போன்றவற்றை அண்டைவீட்டாரின் சுவற்றில் பதிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டைவீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. நபிகளார் அவர்கள் இது போன்று நிலைகள் வரும் போது அண்டைவீட்டாருக்கு மரப்பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதை தடுக்கக்கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்கவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு ''என்ன இது உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன் அபூஹுýýரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அஃரஜ், நூல் : புகாரீ (2463)
வீட்டை விற்றல்
நமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் அண்டைவீட்டாரிடம் விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லை என்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்யவேண்டும். இதுவும் அண்டைவீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும்.
நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள்புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து " ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடம்மிருந்து வாங்கிக் கொள்வீராக!'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ரலி) அவர்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்கமாட்டேன். என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் " அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிமாகத் தரமாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. "அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஷரீத், நூல் :புகாரீ (2258)
தொல்லை தருதல்
வீட்டில் ரேடியோ டேப்ரிக்காடர், டி.வி. போன்றவை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டைவீட்டாருக்கு கடும் சப்தத்தை ஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தை கொடுப்பது என்று எந்த வகையிலும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (5187)
அண்டைவீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்கமாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்கிறது.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். "அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் " எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஷுýரைஹ் (ரலி), நூல் : புகாரீ (6016)
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மூன்று தடவை அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று நபிகளார் கூறியது அண்டைவீட்டாருக்கு தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்கிறது. அண்டைவீட்டாருடன் தொடர்ந்து பகைமை போக்கை கடைபிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாக சிந்திக்கட்டும். அண்டைவீட்டாருக்கு தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புகமுடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.
எவனுடைய நாசவேலைகளிலிருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (66???)
நல்லறங்கள் பல புரிந்தும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல் : அஹ்மத் (9298)
ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத் (12575)
மாபெரும் குற்றம்
அண்டைவீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகளில் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக திகழ்வது அவசியமாகும். பக்கத்துவீட்டில் இருக்கிறார், அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நடந்து கொள்ளவேண்டும். அண்டைவீட்டார் வெளியூர் சென்றுவிட்டார் எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். அதற்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் " அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது? '' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், " அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், '' நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு "பிறகு எது?'' என்று கேட்டேன். " உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான், "பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : புகாரீ (4477)
பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம், அடுத்த நம்பியவர்களுக்கு துரோகம் செய்தல் இன்னொரு குற்றம், இந்த இரண்டும் சேர்ந்து பெரும்பாவமாக மாறிவிடுகிறது.
நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்" ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, " அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), நூல் : அஹ்மத் (22734)
அதாவது ஒருவர் பக்கவீட்டு பெண்ணிடம் விபச்சாரம் செய்வது (மற்ற) பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையைவிட மிகக் கடுமையானதாகும்.
ஒருவர் பக்கவீட்டில் திருடுவது (மற்ற) பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக்கடுமையானதாகும்.
மறுமையில் முறையிடுவான்
அண்டைவீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக அவனின் அண்டைவீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.
தன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான், நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமைநாளில் கூறுவான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அதபுல் முஃப்ரத் (111)
நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்
மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டைவீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் அவைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டைவீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்லவேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரிங்களில் கூட்டாக செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவûத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரீ (89)
திருக்குர்ஆன் அறிவுரைகள்,நபிகளாரின் விளக்கங்களை முறைவைத்து கற்று வந்து நபித்தோழர்களைப் போல் அண்டைவீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளை கேட்டறிந்து தம் அண்டைவீட்டாருக்கும் எடுத்துச் சொல்லி நன்மையில் கூட்டாகவேண்டும்.
அல்லாஹ்விடம் சிறந்தவர்
நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : திர்மிதீ (1867)
நல்ல அண்டைவீட்டார்
நல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (14830)
தொல்லையை பொறுத்துக் கொள்ளுங்கள்
அண்டைவீட்டார் என்ற வரும்போது சில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். அதை பெரிய விசயமாக எடுத்துக் கொண்டு வாழ்நாள் பகைவர்களாக மாறிவிடாதீர்கள்! அவர்கள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு அவருக்கு சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.
ஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஹாகிம் 2446)அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்களின் இந்த மேன்மையான வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்து அபூஹுரைரா (ரழி) கூறினார்கள்: "தனது அண்டை வீட்டாரில் அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம், அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார். நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டாரின் மனநிலையைக் கவனித்தார்கள்.
சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்
அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஒர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும். ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர். அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.'' (ஸன்னனுத் திர்மிதி)
சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.'' (முஸ்னத் அஹமத்)
நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருதினார்கள். ஸயீது பின் அஸ் (ரழி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம் "இது இந்த வீட்டின் விலையாகும். ஆனால், ஸயீது (ரழி) அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?'' என்று கேட்டார். இதையறிந்த ஸயீது (ரழி) அந்த வீட்டுக்காரருக்கு ஒர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.
இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்பந்தப்பட்ட அழகிய உபதேசங்களைக் கண்டோம். இதோ இப்போது கெட்ட அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களைக் காண்போம்.
தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்
தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி(ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே அவர் யார்?'' என வினவினர். நபி (ஸல்) அவர்கள் "எவருடைய தீங்குகளிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதி பெறவில்லையோ அவர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.''
இது எவ்வளவு பெரிய பாவம்? தனது அண்டை வீட்டாரிடம் தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரிய அருட்கொடையை இழந்துவிட்டார்? "ஈமான்' என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.
உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப் புரிந்துகொண்டு தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை, சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும்; மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரிய துரதிஷ்டம் என்னவாக இருக்க முடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இயம் திடுக்கிட்டுவிடும்
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer