ஆடை (பர்தா,புர்க்கா ) பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
‘அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சூறையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றில்
முதன்மையாக:- ‘அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்’:-
என பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது.
‘நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்’
(அல்குர்ஆன் 33:33) இந்த உத்திரவின் மூலம், ‘அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்’ என்று கூறியது. இன்றைய கல்லூரி மாணவிகள், வயதுக்கு வந்த இள நங்கைகள், ஏன் குடும்பப் பெண்கள்கூட நாகரீக மோகத்தால் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இரவு பலலெனப் பாராது கடை வீதிகளுக்கும். சினிமாத் தியேட்டர்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைகளையும், அதனால் விளையும் விபரீதங்களையும் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம். எனவே தான். ‘ஒரு பெண் பாதுகாகப்பட வேண்டியவள் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்’ எனக்கூறி சமுதாயத்தின் கண்களான பெண்களைஎச்சசரித்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
இரண்டாவதாக:- பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்:-
‘அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது. பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே‘பார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்’ என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, ‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வை’ என்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்’ என சட்டெனப் பதில்சொன்னார்கள் திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள். மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். ‘நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்)கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும். பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்)அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே!எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!’ எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். ‘சரிதான்,நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது) இந்த உத்தரவின் மூலம் ‘பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும்.
மூன்றாவதாக:- ‘அலங்காரங்களை வெளியே காட்டாதீர்!’ என இஸ்லாம் உத்தரவிடுகிறது:
‘அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளியே காட்டாதுமறைத்துக் கொள்ளவும்.’(அல்குர் ஆன் 24:33) இந்த தொடரில் வரும் ‘அழகைக் காட்ட வேண்டாம்’ என்ற வசனத்திற்கு தப்ஸீர் கலை விற்பன்னர்கள் பின்வருமாறு பொருள் விரிக்கிறார்கள்: 1. முக அழகையும், உடல் அழகையும் காட்டுவது,
2. ஆபரணங்களின் அழகைக் காட்டுவது,
3. நடை உடை பாவனைகளால் பிறரை ஈர்த்து நிற்பது. இவற்றுள் எதையும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவையாவும் ஹராமாக்கப்பட்டவை (தடுக்கப்பட்டவை)ஆகும். ‘ ஒரு பெண்ணின் உடல் முழுவதும் மறைக்கப்பட வேண்டியதாகும். அவள் தன் மேனி எழிலையோ, தலை முடியையோ, கால்கள், கழுத்து, நெஞ்சுப்பகுதியையோ தோள் பகுதியையோ வெளியே காட்டுவது மார்க்கப்படி குற்றமாகும்.’ மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் ‘ஸீனத்’ என்ற சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள் சிந்தனைக்குரியதாகும். இமாம் குர்துபீ(ரஹ்) கூறுகிறார்கள். அழகு என்பது இருவகைப்படும். ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையானது. இயற்கையான அழகு என்பது ஒரு பெண்ணின் எழிலைக் காட்டும் முகமாகும். செயற்கையான அழகு என்பது ஆடை ஆபரணங்களால் மேனியை அலங்கரித்துக் கொள்வதாகும். வேறு சில விரிவுரையாளர்கள்: ‘ஸீனத்’ என்ற சொல்லை உள் அலங்காரம், வெளி அலங்காரம் என இருவகைப்படுத்துகின்றனர். உள் அலங்காரம் என்பது, காதணிகள், கழுத்தணிகள்,கொலுசுகள், தண்டைகள், பாதத்தில் பூசப்படும் மருதாணி போன்ற வர்ணனைகளை குறிக்கின்றன என ஹஜ்ரத் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். வெளி அலங்காரம் என்பது, மோதிரம், கண்ணிலே போடு;ம் சுர்மா போன்ற மைகள் என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும், ‘முகம் இரு முன் கைகள்’ என ஹஜ்ரத் ஹஸன்(ரலி) அவர்களும் பொருள் தருகின்றார்கள். இவற்றை ஆதாரமாகக் கொண்டு ‘வெளியே தெரியும் பகுதியைத் தவிர’ என்ற குர்ஆன் வசனத்திற்கு மேற் கூறப்பட்ட வெளி அலங்காரங்களைத்தவிர உள்ளவைகளை நீங்கள் மறைத்துக் கொள்ளுங்கள் என விளக்கம் தருகிறார்கள்.
நான்கவதாக:- ‘தலையையும் உடலையும் மறைத்துக் கொள்ளுங்கள்’
‘அவர்கள் தங்களின் தலைத்துணிகளால் மார்புகளையும் மறைத்துக் கொள்ளவும்.’ (குர்ஆன் 24:31) என்பது திருமறை மூலம் இஸ்லாம் கூறும் நான்காவது கட்டளையாகும்.
‘இந்த மறை வசனம் அருளப்பட்டதும், முஹாஜிர்களான பெண்கள் தங்களின் ஆடைகளை கிழித்து அவற்றை தலையிலே கட்டிக் கொண்டார்கள்’ என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உம்மு ஸல்மா(ரலி) அவர்கள், பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள்:
‘இந்த வசனம் இறங்கியதும், அன்சாரிப் பெண்கள் தங்களின் தலைகளில் காகங்கள் குடியிருப்பது போன்று கறுப்புத் துணிகளை கட்டியிருந்தார்கள். நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் பெண்களை பெருநாள் தொழுகையில் பங்கேற்பதற்காக வெளியே செல்லலாம் என அனுமதித்த போது சில பெண்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, ‘எங்களில்ஒருத்திக்கு தலைத்துணி இல்லையே! என்ன செய்வது எனக் கேட்டார்கள், அதற்கு நபிகளார்,
‘அவளுடைய சகோதரியின் தலைத் துணியால் மறைத்துக் கொள்ளட்டும்’ என கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸ் மூலம், ‘ஸஹாபாப் பெண்களிடம் தலைத் துணியில்லாமல் செல்வது வழக்கமில்லையென்றும், அவ்வாறு செல்வதை நபிகள் நாயகம் அனுமதிக்கவே இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். ‘பெருமானார்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் (அதிகாலைத்) தொழுகையை நடத்தும்போது முஃமினான பெண்களில் சிலர் தங்களை போர்வையால் மூடிக்கொண்டு தொழுகையில் வந்து கலந்து கொண்டு யாருடைய கண்களிலும் படாமல் அந்த இருளில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.’ நாங்கள் (தற்செயலாக சில பகுதிகள் திறந்திருந்ததை) பார்த்ததை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால், பனீஇஸ்ராயீல்கள் தங்களின் பெண்களைத் தடுத்ததைப் போல பள்ளி வாசலுக்கு வரும் பெண்களை நிச்சயம் தடுத்திருப்பார்கள்.(புகாரி, முஸ்லிம்) குர்ஆனையும் ஹதீஸையும் பக்தியோடு நெறி வழுவாமல் பின்பற்றிய அந்தக் காலத்திலேயே அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அப்படிக் கூறியிருந்ததால், இன்றயை காலத்தில் வெட்கமும் நாணமுமின்றித் தலையை திறந்து கொண்டு அரைகுறை ஆடைகளில் நடமாடும் இஸ்லாமிய நாகரீக நங்கைகளைப் பற்றி எப்படிக் கூறியிருப்பார்கள்?
ஷரீஅத் விழையும் பர்தா உடை எப்படி அமைய வேண்டும். 1. பர்தா (ஹிஜாப்) உடை பெண்களின் முகம், முன் கைகள் தவிர உடலின் ஏனைய பகுதி முழுவதையும் மறைத்திருக்க வேண்டும்.
2. அணியும் ஆடை அடர்த்தியானதாக அமைய வேண்டும், உடலின் வனப்பை வெளிக்காட்டும் மெல்லிய ஆடையாக அமைதல் கூடாது.
3. ஆடை உடலின் வடிவையும் அங்கங்களையும் அளந்து காட்டும்படி இறுக்கமான ஆடையாக இல்லாமல் தொள தொளப்பாக இருக்க வேண்டும்.
4. பிறரை ஈர்த்து நிற்கும் வசீகரமான ஆடையாக அமைதல் கூடாது.
5. பெண் அணியும் ஆடை ஆண்கள் அணியும் ஆடையைப் போல் இருத்தல் கூடாது. அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
‘ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.’ இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும்போது ஷரீஅத் கூறும் இந்த விதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக ”கிழவிகளுக்கும் அனுமதியில்லை”
குர்ஆன் கூறுகிறது
‘விவாக விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள் அழகை காட்டும் நோக்கமின்றி தங்களின் மேல் ஆடைகளை களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. அதனையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மேலானதாகும் .(அல்குர்ஆன் 24:60)
இந்த வசனத்தில் ஆடைகளை களைந்திருப்பபது எனக் கூறப்படுவது நிர்வாணமாகவோ, உடலைத்திறந்திருப்பதோ என்பது பொருளல்ல. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் போது வெளியே தெரியும் பகுதிகளான கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளை திறந்து இருப்பது குற்றமில்லை. சில போது முதுமையின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ, மருத்துவத்தின் காரணமாகவோ அவர்களின் வசதிக்காக உடலின் சில பகுதிகளை திறந்து வைத்திருக்கக்கூடும். அழகைக் காட்டும் நோக்கமில்லையென்றால்தான் இவ்வாறு திறந்திருப்பதை அனுமதிக்கப்படுகிறது. பிறர் தனது அழகைக் கண்டால் ரசிக்கக்கூடும் எனத் தெரிந்தால் கிழவிகளுக்கும் இந்த அனுமதியில்லை. அவர்கள் இதையும் தவிர்த்துக் கொள்வதே சிறந்ததாகும். ஆசையற்ற வயது முதிர்ந்த கிழவிகளுக்கே உடலை மூடி மறைப்பது நன்று எனக் கூறும் போது இன்று, உடல் வனப்பை காட்டித் திரியும் இள மங்கைகளுக்கும், குடும்பப் பெண்களுக்கும் எவ்வாறு தங்களின் அழகைக் காட்டிச் செல்ல அனுமதியிருக்கமுடியும்?
ஆறாவதாக:-‘பெண்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டவர்கள்’
இஸ்லாம் ஒரு பெண்ணைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு என்பதையும் குர்ஆன் மூலம் பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறது. ‘‘பெண்கள் தங்களின்கணவன்மார்கள், தங்களின் தந்தையர்கள், தங்களுடைய கணவனுடைய தந்தைகள்,தங்களின் குமாரர்கள், தங்களின் கணவன்மார்களின் குமாரர்கள், தங்களின் சகோதரர்கள்,தங்களின் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களு(டன் தொடர்பு)டைய பெண்கள், தங்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்)அல்லது பெண்களின் மீது ஆசையற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் அவயவங்களை அறிந்து கொள்ள முடியாத சிறு வயதுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர (மற்றெவருக்கும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரங்களைப் போன்ற) தங்களின் அலங்காரத்தைக் காட்ட வேண்டாம்.’ (அல்குர் ஆன் 24:32)இதிலிருந்து அவர்கள் யார் யார் முன்னிலையில் தோன்றலாம், அவர்களின் அழகைப் பார்க்க யாருக்கு அனுமதி உண்டு என்பது மிகவும் தெளிவாகிறது. இவர்களைத் தவிர பெண்களின் அலங்காரங்களை பார்க்க எவருக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு வரைதயறுத்து மிகத் தெளிவாக இறை மறை கூறிய பிறகு ஒரு பெண் பர்தா இன்றிஎவ்வாறு அந்நிய ஆடவர் முன் தோன்ற முடியும்.?
ஏழாவதாக:- ஓசையுடன் நடக்காதீர்!