'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)
இறைவனின் கட்டளைகளை மீறி அவனுக்கு மாறுசெய்தோர் விசாரிக்கப்படுவது போல் மனிதர்களுக்கு அநீதி இழைத்தவர்களும் விசாரிக்கப்படுவார்கள். இதன் காரணமாகத்தான் 'யவ்முல் ஃபஸ்ல்' நியாயத்தீர்ப்பு நாள் என்று இங்கே இறைவன் குறிப்பிடுகிறான்.
இறைவனுக்கு செய்யும் கடமைகளில் தவறியது, மனிதனுக்குச் செய்யும் கடமைகளில் மறந்தது ஆகிய இரண்டு குற்றங்களைப் பற்றியும் எவ்வாறு விசாரணை நடைபெறும்? எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படும்? என்று நபி (ஸல்) விளக்கமாகக் கூறியுள்ளனர்.
யாரேனும் தம் சகோதரர்களுக்கு மானம் அல்லது பொருட்கள் சம்பந்தமாக அநீதி இழைத்திருந்தால் தங்கக்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயனளிக்காத நாள் வரும் முன் இன்றே பாதிக்கப்பட்டவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளட்டும். இவரிடம் ஏதேனும் நல்லறம் இருந்தால் இவர் செய்த அநீதியின் அளவுக்கு அந்த நல்லறம் எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். இவரிடம் நன்மைகள் ஏதுமில்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர்மேல் வைக்கப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
(அனைத்தையும்) இழந்தவன் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) கேட்டனர். 'யாரிடம் காசோ ஏனைய சொத்துக்களோ இல்லையோ அவர்தான்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இழந்தவன் யாரெனில்' தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஒருவனைத் திட்டியவனாக இன்னொருவன் மேல் அவதூறு கூறியவனாக மற்றொருவனின் பொருளைச் சாப்பிட்டவனாக வேறொருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, இன்னொருவனை அடித்தவனாக மறுமைநாளில் வருவான். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் இவனது நன்மைகள் வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன்னால் இவனது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவன் மேல் வீசப்படும். பின்னர் நரகத்தில் இவன் வீசப்படுவான்' என்று விளக்கினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
(உங்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு) உரிய கடமைகள் மறுமை நாளில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆடு (முட்டியதற்காக) கணக்குத் தீர்க்கப்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வந்து அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில அடிமைகள் உள்ளனர். அவர்கள் என்னை நம்புவதில்லை. எனக்கு மாறுசெய்கின்றனர். துரோகம் செய்கின்றனர். எனவே அவர்களை நான் அடிக்கிறேன் திட்டுகிறேன். (மறுமையில்) அவர்களுடன் எனது நிலை எவ்வாறு இருக்கும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கியாமத் நாளில் அவர்கள் உனக்குச் செய்த மாறுபாடு, துரோகம் ஆகியவையும் அவர்களைத் தண்டித்ததும் கணக்கிடப்படும். அவர்களின் குற்றங்களின் அளவுக்கு உன் தண்டனை இருந்தால் இரண்டும் சரிக்குச் சரியாகி விடும். உனக்கு லாபமோ நட்டமோ இராது. அவர்கள் செய்த குற்றங்களை விட நீ வழங்கிய தண்டனை குறைவாக இருந்தால் அது உனக்கு உபரியாக (லாபமாக) அமையும். அவர்களின் குற்றங்களை விட உன் தண்டனை அதிகமானதாக இருந்தால் அவர்களுக்காக உனது நல்லறங்கள் எடுக்கப்படும்' என்று விடையளித்தார்கள். அப்போது அந்த மனிதர் அழுது புலம்பியவராக நகரலானார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் 'கியாமத் நாளில் நீதமான தராசுகளை நாம நிறுவுவோம். எந்த ஆத்மாவுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. கடுகளவாக இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்' என்ற இறைவசனத்தை நீர் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் 'அல்லாஹ்வின் தூதரே! எனது அடிமைகளைப் பிரித்து விடுவது தான் எனக்கும் அவர்களுக்கும் நல்லதாக தெரிகின்றது. அவர்கள் அனைவரும் விடுதலை பெற்றார்கள் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என்று அவர் கூறினார். (அறிவிப்பவர்: அயிஷா (ரலி), நூல்: திர்மிதி)
மனிதனுக்கு மனிதன் செய்த கொடுமைகள், தீங்குகள் பற்றி இவ்வளவு கடுமையாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்த மனிதனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவரிடம் இவ்வுலகிலேயே பரிகாரம் செய்ய வேண்டும். அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் செய்த நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போவதுடன் பிறரது தீமைகளையும் சுமக்கும் நிலை ஏற்படும். முஸ்லிம்கள் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் இழைத்த அநீதிகளைப் பற்றி தாட்சண்யமின்றி நீதி வழங்கும் இறைவன் தனக்கு மனிதன் செய்த பாவங்கள் விஷயத்தில் மிகவும் பெருந்தன்மையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்வான். அதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
'யார் துருவி விசாரிக்கப்படுகிறாரோ அவர் அழிந்தார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் 'யார் தமது வலக்கரத்தில் பதிவேடு வழங்கப்படுகிறாரோ அவர் லேசாக விசாரிக்கப்படுவார்' என்று அல்லாஹ் கூறுகிறானே என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அந்த விசாரணை மேலோட்டமாக எடுத்துக் காட்டப்படுவது தான். ஒவ்வொன்றாக விசாரிக்கப்படும் யாரும் அழிந்து போகாதிருப்பதில்லை' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மனிதன் செய்த ஒவ்வொரு செயலாக இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவ்வளவு பெரிய மகான் என்றாலும் வெற்றி பெற முடியாது. ஆனால் இறைவன் அவ்வாறு செய்யாமல் மேலோட்டமாகவே விசாரணை செய்து அடியார்களுக்குக் கருணை காட்டுவான்.
அடியான் முதன் முதலில் தொழுகை பற்றியே விசாரிக்கப்படுவான். அது சரியாக இருந்தால் வெற்றியடைந்து விட்டான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விட்டான். கடமையான தொழுகைகளில் ஏதும் குறைவு இருந்தால், என் அடியானிடம் உபரியான தொழுகை ஏதுமுள்ளதா? என்று கவனியுங்கள் என்று இறைவன் கூறுவான். அந்த உபரியான தொழுகை மூலம் கடமையான தொழுகையில் ஏற்பட்ட குறை நிவர்த்திக்கப்படும். ஏனைய நல்லறங்களும் இவ்வாறே என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதி, நஸயி)
எப்படியாவது அடியானை சொர்க்கத்திற்கு அனுப்ப வழி இருக்கிறதா என்றே வல்ல இறைவன் கவனிக்கிறான் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.
மூமின் இறைவனுக்கு அருகில் கொண்டு செல்லப்படுவார். இறைவன் தனது நிழலை அவன் மேல் போடுவான். மூமின் செய்த குற்றங்களைக் குறிப்பிட்டு இன்னின்ன பாவங்கள் செய்ததை நீ அறிவாயா? என்று இறைவன் கேட்பான். இறைவா! நான் அறிவேன், நான் அறிவேன் என்று மூமின் கூறுவார். அப்போது இறைவன், 'அக்குறைகளை உலகில் நான் மறைத்தேன் இன்று அவற்றை மன்னித்து விட்டேன் எனக் கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் மனிதனை விடுதலை செய்வான். அவனது குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட தொனண்ணுற்றி ஒன்பது ஏடுகள் விரிக்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தொலைவுடையதாக இருக்கும். இவற்றில் எதையேனும் மறுக்கிறாயா? நம்பகமான எனது எழுத்தர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா? என்று இறைவன் கேட்பான். 'இல்லை இறைவா!' என்று அவன் கூறுவான். அக்குற்றங்களுக்கு உன்னிடம் சமாதானம் ஏதும் உள்ளதா? என்று இறைவன் கேட்பான். 'இல்லை இறைவா!' என்று அவன் கூறுவான். அப்போது இறைவன் 'நிச்சயமாக உனக்கு என்னிடத்தில் நல்லதே கிடைக்கும், இன்று எந்த அநீதியும் கிடையாது' என்று கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு ஒன்று வெளிப்படுத்தப்படும். அதில் 'அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு' என்று எழுதப்பட்டிருக்கும். 'உனது எடையைப்பார்' என்று இறைவன் கூறுவான். அதற்கு அம்மனிதன் 'இறைவா! அந்தத் துண்டுச்சீட்டு அந்த ஏடுகளுக்கு எப்படி நிகராகும்?' என்று கேட்பான். உனக்கு எந்த அநியாயமும் செய்யப்படாது என்று இறைவன் கூறுவான். அந்த ஏடுகள் அனைத்தும் ஒரு தட்டிலும் அந்தத் துண்டுச் சீட்டு இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். ஏடுகள் உயர்ந்து துண்டுச்சீட்டு வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு நிகராக ஏதுவும் ஆகாது என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல்: திர்மிதி)
கியாமத் நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்படுவான். இவனது சிறு குற்றங்களை இவனிடம் எடுத்துக் காட்டுங்கள். பெருங்குற்றங்களைக் காட்டாதீர்கள் என்று வானவர்களுக்குக் கூறப்படும். அவ்வாறே அவனது சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்படும். இன்னின்ன நாளில் இன்னின்ன குற்றத்தை நீ செய்தாயா? இன்னின்ன நாளில் இன்னின்ன குற்றத்தை நீ செய்தாயா? என்று கேட்கப்படும். மறுக்க முடியாமல் அவன் 'ஆம்' என்பான். பெரும் பாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டால் என்னவாகும் என்று அஞ்சிக் கொண்டிருப்பான். அப்போது அவனிடம் 'உனது ஒவ்வொரு தீமைக்கு பதிலாக ஒரு நன்மை உனக்கு உண்டு' என்று கூறப்படும். அதற்கு அம்மனிதன் 'இறைவா! இன்னும் எத்தனையோ குற்றங்கள் செய்துள்ளேன் அவற்றை இங்கே நான் காணவில்லையே! என்பான். இதை நபி (ஸல்) கூறிவிட்டு தம் கடவாய் பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் கிபாரி (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
உறுதியான ஏகத்துவ நம்பிக்கை உள்ள ஒருவரை இறைவன் மன்னிக்க நாடினால் எந்த அளவுக்குப் பெருந்தன்மையாக நடந்து கொள்வான் என்பதற்கு இந்த நபிமொழிகளே போதிய சான்றாகும்.
யாரை இறைவன் மன்னிக்க விரும்பவில்லையோ அவரது நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer