முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!
சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)
எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.
சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -
ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா? அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}
பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்
தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!
இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து, ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்; அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள், அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, கால் வயிறை காலியாக வைப்பார்கள்.நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!
நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.
‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)
ஆகையால், ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். ‘நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.
‘சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ‘தீர்வு’.
சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer