பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக
இஸ்லாம் மேன்மையாக மதிக்கும் திருமண நிகழ்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கைவிட்டு, பிற மதக் கலாச்சாரத்திலிருந்து கடன் வாங்கிய பழக்க வழக்கங்களை நுழைத்து, நபி(ஸல்) அவர்களின் சுன்னாவின்படி அமைய வேண்டிய தங்களின் திருமண வாழ்வின் துவக்கத்தைப் பெரும்பாலான முஸ்லிம்கள் கண்ணை மூடிக் கொண்டு ஜாஹிலிய்யத்திற்குத் தாரை வார்த்து விட்டு ஆரம்பிக்கின்றனர். அவ்வாறெனில் அவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வகையில் இறைவனுக்கு உவப்பான, மறுமை வெற்றிக்கான வழியில் அமையும்? எனச் சிந்திக்க வேண்டியது இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய முஸ்லிம்களுக்குக் கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில், அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வெளி நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் – இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
இந்த வரதட்சனை கொடுமையை வளர விட்டது யார்? ஆண் வீட்டாரா அல்லது பெண் வீட்டாரா?
குனிவதற்கு ஆள் இருந்தால் கொட்டுவதற்கும் ஆள் இருக்கும்! கொட்டுவதற்கு ஆள் இருந்தால் குனிவதற்கும் ஆள் இருக்கனுமா?
கேட்பதற்கு ஆள் இருந்தால் கொடுப்பதற்கும் ஆள் இருக்கனுமா?
ஏற்கனவே பெண் பேசப்பட்டுவிட்ட நிலையிலும் தங்களின் பண ‘பவரை’ வைத்து ரேட்டை ஏற்றி தங்களின் மகளை கரை சேர்க்க நினைக்கும் நபர்களை என்ன சொல்வது? ஆண்டவன் தன ‘பவரை’ காட்டினால், தன அஸ்திவாரம் ஆடிப் போய்விடும் என்பதை மறந்தது ஏனோ?
உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, பிறகு பல கண்டிஷன் போடும் ஆண் வீட்டாரை எந்த வகையில் சேர்ப்பது?
‘கைக்கூலி’ வாங்காவிட்டாலும் தேவை இல்லாத பல செலவுகளையும் பெண் வீட்டார் தலையில் சுமை ஏற்றுவது ஏன்?
வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.
இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூற வேண்டாம். மாறாக, அது இறைவனின் இறை அச்சத்தால் நிச்சயிக்கப்படுகிறது என்று மார்தட்டி சொல்வோம்.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது கஷ்டம்தான். எல்லா தரப்பினரும் இறை அச்சம் கொண்டவர்களாக, அருள்மறை வழி நடந்தால்தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும், இன்ஷாஅல்லாஹ்.
வரதச்சனை என்பதை இன்றைய கால கட்டத்தில் ஒரு தனி நபர் மாத்திரம் நினைத்தால் நடக்கக்கூடிய விசயம் இல்லை? மாறாக குடும்பத்தில் உள்ள நபர்கள், சொந்தம், நண்பர்கள், மேலும் அந்த நபர் சார்ந்திருக்கும் ஜமாஅத். இவர்கள் அத்துனை நபர்களும் சார்ந்த விசயம். இதில் ஜமாஅத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் மேல் குறிப்பிட்டவர்களில் செயல்களை தடுத்து நிறுத்துவதும்.
சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பதும் அவர்களின் கைலதான் இருக்கிறது? மேலும் ஜமாஅத்தும் மேல் கூறிய மட்ற்ற நபர்களும் வரதச்சனை வாங்க நினைக்கும் அந்த நபரோ, சொந்தமோ, குடும்பத்தினரோ இவர்களில் யார் காரணமோ அவர்களை தவிர்த்து மத்தவர்கள் இந்த தவறான காரியத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அவர்களிடம் இருந்து விலகி நிற்க வேண்டும்.
“தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை” (அல்குர்ஆன் 013:011).
“மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்களே அன்றி, மனிதர்களுக்கு ஒருபோதும் அல்லாஹ் அநீதி இழைப்பதில்லை” – (அல்குர்ஆன் 010:044).
பன்றி இறைச்சி உண்பது தீய, பாவச் செயல்” என்ற உணர்வு சமூகத்தில் ஊறிப் போயுள்ள அளவிற்கு, வரதட்சணை வாங்குதலும் பாவச் செயல்” என்ற எண்ணம் உள்ளத்தில் ஊன்றப் படும் வகையில் ஒவ்வொருவரும் செயல்பட ஆரம்பித்தால் இச்சமுதாயம் இறை உவப்புக்குரிய உன்னத சமுதாயமாக நிலைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கு சில ஆலோசனைகள்:
1. வரதட்சணை கொடுத்து என் பெண்ணை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று பெண் வீட்டாரும், வரதட்சணை வாங்கி என் மகனுக்கு திருமணம் செய்யமாட்டேன் என்று ஆண் வீட்டாரும் இறை அச்சத்துடன் ஒரே உறுதியாய் இருக்கணும்,
2. வரதட்சணை வாங்கினால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் ஆணும், வரதட்சணை கொடுத்தால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் பெண்ணும் உறுதியாய் இருக்கணும்,
3. வரதட்சணை வாங்கப்பட்ட கல்யாணத்தை, அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!
அல்லாஹ் நம் சமுதாயத்தை நல் வழியில் செலுத்துவானாக !!
மற்றவரிடம் (வரதச்சனை கேட்டு) கை ஏந்தும் என்னத்தை அல்லாஹ் அறவே மற்றுவானாக !!
மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!
வரதச்சனை வாங்கமாட்டோம் !! கொடுக்க மாட்டோம் !! இன்ஷா அல்லாஹ் !!!
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer