நற்குணம் பிரியத்தையும் நேசபாசத்தையும் ஏற்படுத்துகின்றது. தீயகுணமோ வெறுப்பையும் பொறாமையையும் தோற்றுவிக்கின்றது. நற்குணமுடையவனிடம் அதன் பிரதிபலன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தெளிவாகவே காண முடியும். அவனிடம் அல்லாஹ் இறையச்சத்தையும் நற்குணங்களையும் ஒரு சேர அமைத்துள்ளான்.
பெரும்பாலும் மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும் நற்குணங்களும் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி- ஹாகிம்)
மலர்ந்த முகம் காட்டுதல், நன்மை செய்தல், யாருக்கும் தொல்லை தராமலிருத்தல் ஆகியவை நற்குணங்களாகும். இத்துடன் கோபத்தை அடக்குவதும் அதை மறைப்பதும் தொல்லைகளை சகித்துக் கொள்வதும் ஒரு முஸ்லிமுக்கு அவசியமாகும்.
நபி (ஸல்) கூறினார்கள் :
நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். (அஹ்மத், பைஹகீ)
அபூஹுரைராவே! நற்குணங்களை மேற்கொள்வீராக! என நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்கு அறிவுரை வழங்கினார்கள். அப்போது அவர், அல்லாஹ்வின் தூதரே! நற்குணங்கள் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ். உனக்கு அநீதம் செய்தவரை நீ மன்னித்து விடு. உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பைஹகீ)
முஸ்லிம் சகோதரனே! இத்தகைய அழகிய குணங்களுக்குக் கிடைக்கக் கூடிய மகத்தான கூலியை, மிகப் பெரும் பலனைப் பார்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவெல்லாம் நின்று வணங்கியும், பகலெல்லாம் நோன்பு நோற்றும் வரக் கூடியவர் அடையும் அந்தஸ்தை ஒருவர் நற்குணங்களால் அடைந்திட முடியும். (அபூதாவூத்)
நற்குணங்களை ஈமானில் பரிபூரணத்துமாகவே நபி (ஸல்) கணித்துள்ளனர். முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! (திர்மிதி).
மக்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவர் பிறருக்கு அதிகம் நன்மை செய்யக் கூடியவரே! செயல்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது ஒரு முஸ்லிமுக்கு நாம் கொடுக்கும் சந்தோஷம் அல்லது அவனது சிரமத்தை நீக்குவது அல்லது அவனது கடனை அடைப்பது அல்லது அவனது பசியைப் போக்குவது ஆகியவையாகும்.
நாம் கூறும் மென்மையான வார்த்தைக்கும் கூலி உண்டு. அதுவும் ஒரு தர்மமே! அழகிய வார்த்தையும் தர்மமாகும் என்பது நபிமொழி. நூல் : (புகாரி, முஸ்லிம்) ஏனெனில் அழகிய வார்த்தைக்கு நல்ல பலணுண்டு. இது உள்ளங்களை நெருக்கி வைக்கும். அவற்றுக்கிடையில் அன்பை ஏற்படுத்தி வெறுப்பை அகற்றும்.
நற்குணங்கள் மேற்கொள்ளும்படியும் தொல்லைகளை சகித்துக் கொள்ளும்படியும் தூண்டுவதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் அதிகமாகவே உள்ளது. அவர்கள் கூறினார்கள் :
நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள். தீமை செய்து விட்டால் தொடர்ந்து ஒரு நன்மை செய்து விடு. அது அத்தீமையை அழித்து விடும். மக்களுடன் அழகிய முறையில் நடந்து கொள். (திர்மிதி).
ஒரு முஸ்லிமுக்கு நற்குணமென்பது எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும் அவசியமாகும். அது அவன் செல்கின்ற ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொரு இடத்திலும் அவனை மக்களிடம் நெருக்கி வைத்து, பிரியத்தைத் தோற்றுவிக்கும். எந்த அளவுக்கெனில் தன் மனைவியின் வாயில் அவன் ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவுக்கும் இஸ்லாத்தில் கூலி தரப்படுகின்றது. (நல்வழியில்) எதைச் செலவு செய்தாலும்; அது தர்மமே! உன்னுடைய மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவு உட்பட என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).
அல்லாஹ்வை இறைவனாக. இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராக, நபியாக ஏற்றுக் கொண்ட எவரையும் அற்பமாக எண்ணுவதை விட்டும் விலகிக் கொள். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். தன் சகோதர முஸ்லிமை அற்பமாகக் கருதுவதே ஒரு மனிதனுக்குத் தீமை நேரப் போதுமானதாகும். (முஸ்லிம்)
முஸ்லிம் சகோதரனே! நற்குணங்கள் மேற்கொள்வது எல்லா நேரத்திலும் இலேசானதும் எளிதான வழிபாடாகும். அபூதர்தா (ரலி) விடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் : வணக்க வழிகாடுகளில் எளிதான, உடலுக்கு இலேசான ஒன்றை உனக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அதற்கு அபூதர்தா (ரலி), தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மௌனத்தையும் நற்குணத்தையும் கடைபிடி. அதுபோன்ற செயலை உன்னால் செய்ய முடியாது.
நற்குணத்தின் அடையாளங்கள்
நற்குணத்தின் அடையாளங்கள் பல்வேறு பண்புகளில் ஒன்று சேர்ந்துள்ளன.
மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக, தொல்லை செய்யாதவனாக, அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப்பவனாக, உண்மையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக, வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள்பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினருடன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.
அவ்வாறே அவன் பொறுமை, நன்றி பாராட்டல், பொருந்திக் கொள்ளல், சாந்தம், மென்மை, கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்பதும் அவசியமாகும்.
ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக, அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக, பொறாமை கொள்பவனாக இருக்கக் கூடாது.
அவனுடைய நேசமும், விருப்பும், வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும். நற்குணமுடைய மனிதனின் மக்களின் தொல்லைகளைச் சிகத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தவறிழைக்கும் போதெல்லாம் எப்போதுமே அதற்கு தக்க காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
அவர்களின் தவறுகளையும் குறைகளையும் துருவித்துருவி ஆராய்வதைத் தவிர்க்க முழு ஆர்வம் காட்ட வேண்டும். எந்த நிலையிலும் ஒரு முஃமின் தீய குணமுடையவனாக இருக்க முடியாது. இருக்கவேக் கூடாது.
நற்குணத்திற்குரிய முக்கியத்துவத்தையும் நற்குணங்களை மேற்கொள்ளக் கூடியவன் அடையக் கூடிய மகத்தான கூலியையும் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு இடங்களில் உறுதிபடக் கூறியுள்ளார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது சில மக்கள் வந்து, அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவர் யார்? என்று கேட்டனர். அதற்கு குணத்தால் சிறந்தவரே! என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். உஸாமா பின் ஷரீக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸல் தபரானியில் உள்ளது.
உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்க அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றதும் உங்களில் நற்குணமுடையவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது ( அஹ்மத்)
நபி (ஸல்) அழகிய குணங்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு மத்தியில், எந்த நற்குணத்தின் பால் மக்களை அழைத்தார்களோ, அந்த நற்குணத்தின் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் தாம் கூறிய ஞானங்கள், அறிவுரைகள் மூலம் தம் தோழர்களிடம் நற்குணங்களை விதைப்பதற்கு முன்னால் அவற்றை தம் நடைமுறை மூலம் அவர்களிடையே விதைத்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் மீது ஆணையாக : நான் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அவர்கள் மீது விளிம்பு பருமனான துண்டு ஒன்று இருந்தத. ஒரு கிராமவாசி வந்து அதைப் பிடித்து பலமாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் தோள் பகுதியில் பார்த்தேன். பலமாக இழுத்ததனால் அதன் அடையாளம் பதிந்திருந்தது. பிறகு அந்த கிராம வாசி, உம்மிடமுள்ள செல்வத்திலிருந்து எனக்குத் தரும்படி உத்தரவிடும் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவருக்கு உதவி வழங்கும்படி கட்டளையிட்டார்கள் (புகாரீ).
நபி (ஸல்) அவர்கள் நம் வீட்டில் என்ன செய்வார்கள்? என அவர்களுடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் தமது மனைவிக்கு உதவி செய்தார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் உளூச் செய்து விட்டு தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள். (முஸ்லிம்)
நபி (ஸல்)அவர்களை விடவும் புன்னகை பூப்பவர் யாரையும் நான் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
நபி (ஸல்) அவர்களின் பிரபல்யமான குணநலன்கள் : அவர்கள் ஈகைக் குணம் கொண்டவர்கள், கிஞ்சிற்றும் கஞ்சத்தனம் செய்ததில்லை. தைரியமிக்கவர்கள், சத்தியத்திலிருந்து ஒரு போதும் பின்வாங்கியதில்லை. நீதி மிக்கவர்கள், தமது தீர்ப்பில் ஒரு போதும் அநீதியிழைத்ததில்லை. தமது வாழ்வு முழுவதும் வாய்மை மிக்கவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவுமே திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் நகைச்சுவை செய்பவர்களாகஇ அவர்களுடன் கலந்திருப்பவர்களாக, அவர்களுடைய குழந்தைகளுடன் விளையாடுபவர்களாக, குழந்தைகளை தமது மடியில் அமர்த்துபவர்களாக, விருந்தழைப்பை ஏற்பவர்களாக, நோயாளிகளை சந்திப்பவர்களாக, தவறிழைத்தவர்கள் கூறும் சமாதானத்தை ஏற்பவர்களாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை அவர்களுக்குப் பிரியமான பெயரைக் கொண்டே அழைப்பார்கள். தம்முடைன் பேசுகின்ற யாருடைய பேச்சையும் துண்டிக்க மாட்டார்கள்.
அபூகததா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக நானும் அல்லாஹ்வுடைய அடிமை தான். ஒரு அடிமை சாப்பிடுவது போல நானும் சாப்பிடுகிறேன் என்று கூறினார்கள். அவர்கள் கழுதையில் பயணம் செய்திருக்கிறார்கள். வறியவர்களை நோய் விசாரிக்கவும், ஏழைகளுடன் அமர்ந்திருக்கவும் செய்திருக்கிறார்கள்.
வாய்மை
திண்ணமாக முஸ்லிம் தன் இறைவனுடன் எல்லா மக்களுடனும் வாய்மையோடு நடந்து கொள்ள வேண்டும். அது போல தன்னுடைய சொல், செயல் மற்றும் எல்லா நிலையிலும் வாய்மையோடு நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (9:119).
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்களுக்கு பொய்யை விட மிக வெறுப்பான குணம் எதுவும் கிடையாது. (அஹ்மத்)
ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம்! என்றனர். ஒரு முஃமின் உலோபியாக இருப்பானா? என்று கேட்டதற்கும் ஆம்! என்றே பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய்யனாக இருப்பானா? என்று கேட்கப்பட்டதற்கு இல்லை என்று கூறினார்கள். (முஅத்தா)
மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும் பொய்யின் வகைகளில் மிகக் கொடியதுமாகும். அதற்குக் கூலி நரகமே!
என் மீது வேண்டுமென்றே எவன் பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி).
நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் நம் குழந்தைகளுடைய உள்ளங்களில் உண்மையை விதைக்கவே நம்மைத் தூண்டுகிறது. அந்த பண்பிலேயே அவர்கள் வளர வேண்டும் என்பதற்காக. யாரேனும் ஒரு குழந்தையிடம் வா! இதோ வாங்கிக் கொள்! என்று கூறி பிறகு அதைக் கொடுக்கவில்லையெனில் அதுவும் பொய்யே ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (அஹ்மத்).
வேடிக்கைக்காக கூட பொய் சொல்வதனின்றும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தை ஏவியிருக்கிறார்கள்.
வேடிக்கைக்காக கூட பொய்யை விட்டு விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (அபூதாவூத்)
வியாபாரி தனது சரக்கை விவரிப்பதில் பொய் சொல்லக் கூடும். அதையும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். சரக்கில் குறை இருப்பதாக அறிந்தும் அதைத் தெரிவிக்காமல் விற்பது எந்த முஸ்லிமுக்கும் ஹலால் இல்லை - ஆகுமானது இல்லை என்று கூறியுள்ளார்கள். (புகாரி).
அமானிதம்
அமானிதங்களை நிறைவேற்றுமாறும், ஒரு மனிதன் தான் செய்யக் கூடிய சிறிய பெரிய எல்லா செயல்களிலும் இறைவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என எண்ணிச் செயல்படுமாறும் இஸ்லாம் அதைப் பின்பற்றக் கூடியவர்களுக்குப் பணிக்கிறது. எனவே முஸ்லிம் தன் மீது அல்லாஹ் கடமையாக்கி இருப்பவற்றை நிறைவேற்றுவதிலும் மக்களுடன் பழகுவதிலும் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் மீது கடமையாக்கப்பட்வற்றை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவதற்கே அமானிதம் எனப்படும்.
அல்லாஹ் கூறுகிறான் : அமானிதங்களை அவற்றுக்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள் எல அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் (4:58) நாணம் இல்லாதவனிடத்தில் ஈமான் இல்லை.. .. என்பது நபிமொழி (முஸ்லிம்).
அமானிதம் என்பது சிலர் விளங்கி வைத்திருப்பது போல நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல. மாறாக, அது விரிந்த பொருள் கொண்டது. அமானிதத்தை நிறைவேற்றுவதென்பது தன்னிடம் நம்பி ஒப்படைக்கின்ற, உலக, மார்க்க சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளிலும் கடமைகளிலும் ஒருவன் நம்பிக்கையோடு நடந்து கொள்வதைக் குறிக்கும்.
பணிவு
ஒரு முஸ்லிம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு போதும் பெருமையுடன் நடந்து கொள்ளக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கையாளர்களில் எவர்கள் உம்மைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும். (26:215)
அல்லாஹ்வுக்காக பணிவுடன் நடந்து கொள்ளம் எவரையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
மேலும் அவர்கள் கூறியதாவது : அதாவது நீங்கள் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள் - ஒருவர் மற்றவரை விட பெருமை பாராட்டாமலும் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்யாமலும் இருப்பதற்காக என அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்துள்ளான். (முஸ்லிம்)
வறியவர்கள் மற்றும் ஏழைகளடன் அமர்வது அவர்களிடம் தன்மை உயர்வாகக் காட்டிக் கொள்ளாமலிருப்பது, மக்களுடன் முகமலர்ச்சியுடன் நடந்து கொள்வது, பிறரை விட தன்னைச் சிறந்தவராக கருதாமலிருப்பது ஆகியவை பணிவின் வெளிப்பாடுகளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இச்சமுதாயத்திற்கு நபியாக இருந்தும் தமது வீட்டைப் பெருக்குபவர்களாகவும், ஆட்டிலிருந்து பால் கறப்பவர்களாகவும், கிழிந்த ஆடையைத் தாமே தைத்துக் கொள்பவர்களாகவும், தமது வேலைக்காரருடன் உணவு உண்பவர்களாகவும், கடைவீதிக்குச்சென்று பொருட்களை வாங்கி வருபவர்களாகவும், முஃமின்களில் பெரியவர், சிறியவர், செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் கைலாகு செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
நாணம்
நாணம் ஈமானின் கிளைகளில் ஒன்றாகும். நாணம் நன்மையே தரும். புகாரி, முஸ்லிமில் ,தற்குச் சான்று உள்ளது. இத்தகைய சிறந்த குணத்திற்கு நபி (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமுக்கு முன்மாதிரியாகும். காரணம் நபி (ஸல்) அவர்க்ள அதிகம் நாணமுறுபவர்களாகவும் இருந்தார்கள். அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் தாம் வெறுக்கம் ஒன்றைக் கண்டால் அதை அவர்களின் முகத்திலிருந்து நாங்கள் அறிந்து கொள்வோம். (புகாரி).
ஒரு முஸ்லிமிடம் இருக்கும் நாணம் அவன் சத்தியத்தைச் சொல்வதற்கும், கல்வியைத் தேடுவதற்கும், நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்கும் தடையாக இருக்காது. இந்த நாணம் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் உண்மையை உரைக்க அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்! ஒரு பெண்ணுக்கு கனவில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளுக்கு குளிப்பு கடமையா? என்று கேட்பதற்குத் தடையாக இருக்கவில்லையே! அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! இந்திரியத்தை அவள் கண்டால் குளிப்பு கடமையாகும் என்று பதிலளித்தார்கள். (புகாரி).
ஆயினும் ஒரு முஸ்லிம் தீய செயல்களைச் செய்வது, தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற பணிகளில் தவறு செய்வது, மக்களின் இரகசியங்களை வெளிப்படுத்துவது, அவர்களுக்குத் தீங்கிழைப்பது ஆகியவற்றுக்கு நாணம் நிச்சயம் தடையாக இருக்கும். அல்லாஹ்வுக்கு நாணமுறுவதே மிகச் சிறந்தது! எனவே முஃமின் தன்னைப் படைத்தவனுக்கு நாணமுற வேண்டும். அவன் தான் அவனை உருவாக்கி, அருட்கொடைகளையும் வழங்கியிருக்கிறான். ஆகையால் அவனுக்கு கட்டுப்படுவதிலும் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதிலும் குறை வைப்பதற்கு அவன் வெட்கப்பட வேண்டும்.
நாணமுறுவதற்கு மக்களை விட அல்லாஹ்வே மிகத் தகுதியானவன்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி.
நற்குணங்களை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள்
பழகிப் போன குணங்களை மாற்றுவது என்பது மனித இயல்புக்கு மிகச் சிரமமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால் இது ஒன்றும் முடியாத கரியமல்ல. மாறாக இதற்கு பல்வேறு வழிமுறைகள், காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் மனிதன் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
1. சரியான கொள்கை :
கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்ற மார்க்கம் அவற்றின் வெளிப்பாடகவே இருக்கும். மட்டுமல்ல கொள்கை தான் நம்பிக்கை - ஈமான் ஆகும். முஃமின்களில் பரிபூரண ஈமானை உடையவர்கள் நற்குணங் கொண்டவர்களே.
கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும். சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை, ஈகை, சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின்பால் தூண்டும். அதுபோல பொய், உலோபித்தனம், அறியாமை போன்ற தீய குணங்களை விட்டும் அவனைத் தடுக்கும்.
2. துஆ
துஆ மிகப் பெரிய வாயிலாகும். அவ்வாயில் ஒரு அடியானுக்குத் திறக்கப்பட்டு விட்டால் அதன் வழியாக நன்மைகள், பரக்கத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். நற்குணங்கைள மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் யார் ஆசைப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். அவன் அவருக்கு நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் யார் ஆசைப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். அவன் அவருக்கு நற்குணங்களை வழங்குவான். தீய குணங்களை விட்டும் அவரைத் தடுத்து விடுவான். ஆகவே இது விஷயத்திலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி துஆ பயனுள்ளதாக இருக்கம்.
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடம் பணிந்து தமக்கு நற்குணங்கைள வழங்குமாறு அதிகம் இறைஞ்சுவார்கள். அவர்கள் தொழுகையின் ஆரம்ப துஆவில் இவ்வாறு கேட்பார்கள் :
இறைவா! நற்குணங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக! நற்குணங்களின்பால் வழிகாட்டுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. தீயகுணங்களை விட்டும் அகற்றுவாயாக! தீய குணங்களை என்னை விட்டும் அகற்றுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)
3. போராடுதல்
போராடுவது இது விஷயத்தில் மிகவும் பலன் தரும். நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவருக்கு அதிக நன்மைகள் வந்து சேரும். அவரைச் சூழ்;திருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.
நற்குணங்கiளில் இயற்கையிலேயே உள்ள நற்குணங்களும் உண்டு. பயிற்சியின் மூலம் தாமே வளர்த்துக் கொள்ளக் கூடிய நற்குணங்களுமுண்டு. போராடுவது என்றால் ஒருவன் தம் மனதோடு ஒரு முறையல்ல பல முறையல்ல சாகும் வரைப் போராடுவதாகும். ஏனெனில் போராடுவதும் ஒரு வணக்கமாகும்.
உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக என அல்லாஹ் கூறுகிறான். (15:99)
4. சுயபரிசோதனை
அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது போன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது என நம் மனதைத் தூண்ட வேண்டும்.
5. நற்குணங்களால் விளையக் கூடிய நன்மைகளை எண்ணிப் பார்த்தல் :
சில விஷயங்களின் பலன்களை அறிந்து கொள்வதும் அவற்றின் நல்ல முடிவுகளை நினைவில் கொள்வதும் அவற்றை எடுத்து நடப்பதற்கும் அதற்காக முயற்சிப்பதற்கும் பெரும் காரணமாக ஆகி விடும்.
6. தீயகுணங்களின் முடிவுகளை எண்ணிப்பார்த்தல் :
அதாவது தீயகுணங்களால் விளையக் கூடிய நிரந்தர கைசேதம், விலகாத கவலை, பேரிழப்பு, துக்கம் மற்றும் மக்களின் உள்ளங்களில் ஏற்படும் வெறுப்பு ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
7. மனதைப் பக்குவப்படுத்துவதை விட்டும் நம்பிக்கை இழந்திடாதிருத்தல் :
நம்பிக்கை இழந்து விடுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. ஒரு போதும் அவனுக்கு அது ஏற்றதுமல்ல. மாறாக அவன் தனது நாட்டத்தைப் பலப்படுத்தி மனதைப் பரிபூரணமாக்குவதற்கும் தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிப்பது அவனுக்கு அவசியமாகும்.
8. மலர்ந்த முகம் காட்டுவதும், முகம் சுளிப்பதைத் தவிர்ப்பதும் :
ஒருவன் தன் சகோதர முஸ்லிமை மலர்ந்த முகத்துடன் பார்ப்பது தர்மமாகும். அதற்குக் கூலி கொடுக்கப்படும். உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் உனக்குத் தர்மமாகும் என்பது நபிமொழி. (திர்மிதி)
உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் உட்பட எந்த நன்மையையும் நீ அற்பமாகக் கருதி விடாதே! எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
9 சகிப்புத் தன்மை
இது குணங்களிலேயே மிகச் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்புத் தன்மை என்பது கோபம் பொங்கியெழும் போது மனதைக் கட்டுப்படுத்துவதாகும். ஆனால் சகிப்புத் தன்மையுடையவர் கோப்பப்படக் கூடாது என்பது இதன் சட்டமல்ல. மாறாக அவருக்குக் கோபம் பொங்கியெழும் போது தனது சகிப்புத் தன்மையால் அதனை அடக்கிக் கொள்வார்.
சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும் போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்து விடும்.
10.. அறிவீனர்களை விட்டும் விலகியிருத்தல் :
யார் அறிவீனர்களை விட்டும் விலகியிருக்கிறாரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக் கொள்வார். மனதுக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக் கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கி விடுவார்.
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (7:199)
11. பொருத்தல், மன்னித்தல், தீமைக்குப் பகரமாக நன்மை செய்தல் :
இவ்வாறு செய்வது அந்தஸ்து உயர்வதற்குக் காரணமாக அமையும். இதில் மனதுக்கு அமைதி ஏற்படும். பழி வாங்கும் எண்ணதிலிருந்து விலகவும் முடியும்.
12.. அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்த்தல் :
இது நற்குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு உதவக் கூடிய காரியங்களில் மிக முக்கியமானதாகும். மேலும் இது பொறுமை, மனதோடு போராடுதல், மக்களின் தொல்லைகளைச் சகித்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் உதவியாக இருக்கும். தான் மேற்கொள்ளும் நற்குணங்களுக்கம் மனதுடன் போரடுவதற்கும் நிச்சயம் அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக நம்பினால் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள அவன் ஆர்வம் காட்டுவான். இதற்காக அவன் சந்திக்கின்ற அனைத்தும் அவனுக்கு இலகுவாகும்.
13.. கோபத்தைத் தவிர்த்தல் :
ஏனெனில் கோபம் உள்ளத்தில் எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோபப்படும் போது தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தன்னுடைய கண்ணியத்தையும் மதிப்பையும் காத்துக் கொள்வான். சாக்குப் போக்குச் சொல்லும் இழிவிலிருந்தும் கைசேதத்திலிருந்தும் விலக முடியும்.
ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபம் கொள்ளாதே! என்றார்கள். அவர் பலமுறை இவ்வாறு கேட்கவும் ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளாதே என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி.
14. அர்த்தமுள்ள அறிவுரைகளையும் உருப்படியான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது :
ஒருவனிடம் குறைகளைச் சுட்டிக் காட்டப்படும் போது அதிலிருந்து விலகுவது அவனுக்கு அவசியமாகும். ஏனெனில் தன்னுடைய குறைகளைத் தெரியாதது போல நடிப்பதன் மூலம் மனதைச் சீர்படுத்த முடியும்.
15.. தவறை ஒப்புக் கொள்ளுதல், அதை நியாயப்படுத்தாதிருத்தல்
இது நற்குணத்தின் அடையாளமாகும். அதுமட்டுமல்ல இதில் பொய்யை விட்டு விலகுதல் இருக்கிறது. தவறை ஒப்புக் கொள்வது சிறந்த பண்பாகும். இவ்வாறு நடப்பவரின் மதிப்பை இது உயர்த்தி விடுகின்றது.
16. தவறு செய்தவரை பழிப்பதை, கடுஞ்சொல் கூறுவதைத் தவிர்ப்பது :
அதிகம் பழிப்பது கோபத்தைத் தூண்டுவதாகவும் பகைமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் அது துன்பம் தரக் கூடியவற்றை செவியேற்கும்படிச் செய்து விடும். எனவே புத்திசால் சிறிய, பெரிய எவ்விதத் தவறுக்காகவும் தனது சகாக்களைப் பழிக்க மாட்டான். மாறாக சமாதானங்களைத் தேடிக் கொள்வான். கண்டித்து தான் ஆக வேண்டும் என்றிருந்தால் மென்மையான முறையில் கண்டிப்பான்.
17 நல்லவர்கள், நற்குணமுடையவர்களுடன் தோழமை கொள்ளுதல் :
இது நற்குணங்களைப் பயிற்றுவிப்பதற்கம் அவற்றை மனதில் இறுத்திக் கொள்வதற்கும் மிகச் சிறந்த வழி முறையாகும்.
18 உரையாடல் மற்றும் சபை ஒழுக்கத்தைப் பேணுதல் :
உரையாடுபவரின் பேச்சை செவி தாழ்த்திக் கேட்பது, பேச்சைத் துண்டிக்காமல் இருப்பது, அவரின் பேச்சைப் பொய்ப்படுத்துவது அல்லது அதை அற்பமாக நினைப்பது, அவர் பேச்சை முடிப்பதற்கு முன்னால் எழுந்து செல்வது ஆகியவை அவசியம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் உள்ளதாகும்.
மேலும் சபைக்குள் நுழையும்போதும் சபையை விட்டு வெளியேறும் போதும் ஸலாம் சொல்வது, சபையில் மற்றவருக்காக இடத்தை விசாலப்படுத்துவது, ஒருவரை எழுப்பி அவரது இடத்தில் அமராமலிருப்பது, இருவருக்கிடையில் அவர்களின் அனுமதியில்லாமல் அமர்வது, மூவர் இருக்கும் போதுஇரண்டு பேர்களிடம் மட்டும் தனியாக - இரகசியமாகப் பேசுவது ஆகியவையும் அவ்வொழுக்கங்களில் உள்ளவையே!
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer