அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

பெரும் ஏழு பாவங்கள் !!


இறைவனுக்கு இணைவைத்தல் 
சூனியம் செய்தல் 
நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல் 
வட்டியை உண்ணுதல் 
அநாதைகளின் சொத்தை விழுங்குதல் 
போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல் 
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல் 

பாவம்!
ஓர் உயிரினத்தைக் கொலை செய்தல் பாவம்.
ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம்.
ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம்.
உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர்.
பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது.
ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, ''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம்
மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற அனைத்துச் செயல்களும் பாவம் என்பதே இஸ்லாமியத் தீர்வு.
உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை! இன்றுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைக் காண்போருக்கு இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இருப்பதாகத் தோன்றும். உண்மையில் இஸ்லாத்தில் எவ்வித மூட நம்பிக்கையும் இல்லை. இஸ்லாமியச் சட்ட அமைப்பில் அவ்வாறு உள்ளதா என்பதை நன்றாக அறிந்த பின்பு தான் தீர்ப்புக் கூற வேண்டும்.
இன்றைய உலக வாழ் முஸ்லிம்கள் பிற மதக் கலாச்சாரங்களை யும் நடைமுறைகளையும் பார்த்துப் பழகிப் போய் இருக்கின்றனர். அவர்களிடம் இஸ்லாமிய அறிவு சரிவர இல்லாத காரணத்தால் புதிய புதிய சடங்குகளையும், வழிமுறைகளையும் மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் வாழ்க்கை முறை இஸ்லாமிய வாழ்க்கை முறை அல்ல என்றே கூறமுடியும்.
ஏழு பாவங்கள் என்ற தலைப்பிட்டிருப்பதால் பாவங்கள் ஏழு மட்டும்தான் என்பது அர்த்தமல்ல. நாம் குறிப்பிட்டிருக்கும் இவை மட்டும்தான் பாவங்கள் என்று இஸ்லாம் குறிப்பிடவுமில்லை. பாவச் செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் இந்த ஏழு பாவங்கள் மனித குலத்திற்கு அழிவை உண்டாக்கக் கூடியவையாக இருக்கின்றன. இந்த ஏழு பாவங்களில் ஒரு பாவத்தை மனிதன் செய்தாலும், அது அவனை அழித்து விடும் என்றுதான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவேதான் எச்சரிக்கப்பட்ட இந்த ஏழு பாவங்கள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன.
''அழிவை உண்டாக்கக்கூடிய ஏழு பாவங்களை விட்டுத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, (இதைக் கேட்ட நபித்தோழர்கள்) ''இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?'' என வினவினார்கள். அதற்கு,
1. இறைவனுக்கு இணைவைத்தல்
2. சூனியம் செய்தல்
3. அல்லாஹ் எந்த உயிரைக் கொலைச் செய்வதை தடுத்திருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலை செய்தல்
4. வட்டியை உண்ணுதல்
5. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்
6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
7. இறைநம்பிக்கை உள்ள ஒழுக்கமான பெண்கள் மீது அவதூறு கூறுதல் என்று இறைத்தூதர் அவர்கள் பதிலளித் தார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஏழு பாவங்களையும் தெரிந்து மனிதன் செயல்பட வேண்டும். இதோ அந்த ஏழு பாவங்களும் ஏழு பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகின்றன.

இறைவனுக்கு இணைவைத்தல்
இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் எண்ணில் அடங்காத பாவங்கள் செய்கின்றான். இறைவன் நாடினால் அவற்றை எல்லாம் மன்னிக்கலாம்; அல்லது தண்டிக்கலாம். இப்பாவங்களுக்காக இறைவன் மனிதனைத் தண்டித்தாலும் என்றாவது ஒருநாள் தன்னுடைய கருணையின் காரணமாக அவனை மன்னித்து சுவர்க்கத்தில் புகச் செய்யலாம். படைத்த அந்த இறைவனுக்கு இணையாக எதைக் கருதினாலும் அவன் அதை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். இஸ்லாத்தின் அடிப்படையே படைத்த இறைவனுக்கு மனிதன் இணைகற்பித்தல் ஆகாது என்பதுதான். இதை இறைவன் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவாகக் கூறியிருக்கின்றான்.

''அல்லாஹ் தனக்கு இணைவைத்தலை நிச்சயமாக மன்னிக்க மாட்டான். (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் அல்லாஹ்விற்கு இணை வைக்கின்றானோ, உண்மையில் அவன் பெரும் பாவத்தையே கற்பனை செய்து கொண்டான்.'' (அல்குர்ஆன் 4:48)
''ஆதாரம் (எதுவுமே) இல்லாது இருக்கும் போது இறைவனுக்கு இணைவைத்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுதல் மிகப்பெரும் பாவமாகும்.'' (அல்குர்ஆன் 7:33)
தன் தாய் தந்தைக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம்; எனினும் (மனிதனே! ) உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னைப் பணித்தால் அப்போது அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம். உங்கள் அனைவருடைய மீளுதலும் என்னிடமே இருக்கிறது.; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் 29:8)
எவன் இறைவனுக்கு இணைவைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை முற்றிலுமாக விலக்கி விட்டான். அவனுடைய தங்குமிடம் நெருப்பேயாகும். (அல்குர்ஆன் 5:72)
''அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியவராவது; ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்விற்காக நேசிப்பது நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை நிராகரிப்பிற்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது ஆகிய இந்த மூன்று தன்மைகள் எவரிடம் அமைந்து விட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

இறைவனுக்கு நிகராக ஒன்றை ஏற்படுத்தி அதை வணங்கினால் தான் இணைவைப்பதாகும் என்று பலர் எண்ணுவதுண்டு. இறைவனின் தன்மைகள் பிறரிடம் இருப்பதாகச் சிறிதளவு எண்ணினாலும் இறைவனுக்கு இணைவைத்தலாக ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்வதானால் இறைவனுக்கு 99 பண்புகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு பண்பிற்கு இணை கற்பித்து விட்டாலும் இணைவைப்பாக ஆகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள், இறைவனை ஏற்றுக் கொண்டு தான் வாழ்ந்தார்கள்.

அவர்கள் இறைவனை வணங்க மறுத்தது இல்லை. ஆனால் இறைவனுக்குரிய சில பண்புகளை அவர்கள் பிறருக்கும் கொடுத்தார்கள். எனவேதான் அவர்களை அல்லாஹ் 'இறைமறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள்' என்று தீர்ப்பளித்தான் என்பதை நாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடுயாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றி பாதுகாப் பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக மறுத்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:3)
இணைவைத்தலுக்கு மன்னிப்பு உண்டா?
மேற்கண்ட வசனங்களைக் கண்ணுற்ற நமக்கு அப்படி என்றால் இணைவைத்தலுக்கு மன்னிப்பே இல்லையா என்ற சிறு சந்தேகப் பொறி தட்டுகிறது. இதை நினைத்து நம் உள்ளமும் நடுங்குகிறது. நாம் நரகவாசியாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.
இணை வைத்தலுக்கு மன்னிப்பே இல்லை என்று இறைவன் 4:48 ல் கூறியிருப்பது இணைவைத்துக் கொண்டிருப்பவன் பாவ மன்னிப்புக் கோராமல் அதே நிலையில் மரணித்து விட்டால்தான் அவனுக்கு மன்னிப்பே இல்லை என்பதைக் குறிக்கும். இதை இறைவன் மற்றொரு இடத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.
தீமைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ''நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்பு தேடுகிறேன்' என்று இறைமறுப்பாளர் களாகவே எவர்கள் மரிக்கிறார்களோ அவர்களுக்குப் பாவ மன்னிப்பே இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)
அறியாமையால் தீமைகளைச் செய்து விட்டவர்கள் உலக வாழ்க்கையில் இறைவனிடம் மன்னிப்புக் கோரி விட்டால் இறைவன் நிச்சயம் மன்னித்து விடுவான் என்பதை இறைவன் கூறுவதன் மூலம் அறியலாம்.

எவர்கள் அறியாமையினால் தீமை செய்து விட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடிக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான். அல்குர்ஆன் 4:17
மேற்கண்ட இருவசனங்களிலும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைமறுப்பாளன் என்ற நிலையில் மரணிப்பவர்களுக்கு எவ்வாறு மன்னிப்பு இல்லையோ, அதே போன்று மரண தருவாயில் மன்னிப்பு கோரினாலும் இறைவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.

ஏனெனில் மரண தருணத்தில் மன்னிப்புக் கோரும் அவர்கள் உண்மையில் இறைமறுப்பாளர்கள் என்ற நிலையிலேயே தான் மரிக்கின்றனர். ஃபிர்அவ்ன் தன் மரணதருவாயில் இறைவனிடம் மன்னிப்புக் கோரினான், இறைவனையும் இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களையும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தான். ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை என்பதை திருக்குர்ஆனில் தெளிவாக விவரிக்கின்றான்.
இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றிலும் வழிபடுபவர் களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கிறேன் என்று கூறினான்.
இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்?) சற்றுமுன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தாய். (அல்குர்ஆன் 10:90,91) என்று இறைவன் கூறினான். பின்னர் அவனைக் கடலில் மூழ்கடித்து நாசமாக்கினான். உலகமே அறிந்த வரலாற்று உண்மை இது.
எனவே, இணைவைப்பவர்கள் இந்த உலக வாழ்க்கையிலேயே மனம் வருந்தி திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கோர வேண்டும். அப்படி கோரப்படும் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான். தவித்துக் கொண்டிருக்கும் பாவிகளுக்கு மன்னிப்பு அளித்துக் கண்ணியப்படுத்துவான் என்பது உறுதி. இதை இறைவன் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக விளக்கமளித்துப் பாவிகளுக்கு நேர்வழி காட்டுகின்றான்.
என் அடியார்களே! (உஙகளில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்ப வன்; மிக்க கருணையுடையவன்.

சூனியம் செய்தல்
விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சசூனியம்' என்பதும்.
ஒருவன் மற்றொருவனுக்கு சசூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சசூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சசூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்கள் நம்புவது போன்று சசூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சசூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி (இர்ன்ழ்ற்) செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சசூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைåறாக இருப்போரையாவது கொன்று சசூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?
பலர் சசூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.
சசூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சசூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சசூனியம் ஏற்படுத்துவதில்லை.
ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சசூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.
உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சசூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.
சசூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர்.

இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு åதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.
ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.
சசூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சசூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சசூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.
கண்களை ஏமாற்றுவதே சூனியம்
மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சசூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சசூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)
அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.
சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.
சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)
''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)
என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.
நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)

உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.

(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)
மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது

இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)
ஷைத்தான் சசூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.
மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!

எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.
ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.
இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர்.

ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.
ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.
ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் åதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.
1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.
2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.
3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது.
அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.
இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.
வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது åதர்களின் நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சசூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!

நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல்
அல்லாஹ் ஹராமாக்கி (தடுத்து) இருக்கும் உயிரைக் காரணம் இன்றி கொல்வது ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். உயிர் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது மனித உயிர்களைக் குறிக்கிறது. கால்நடை, பறவைகள் உட்பட கொல்வதற்கான, சாப்பிடுவதற்கான உரிமையை இறைவன் அளித்த உயிரினங்கள் இதில் அடங்காது. அவற்றை நம் தேவைக்காகவே இறைவன் படைத்துள்ளான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் அவற்றையும் தக்க காரணமின்றி அடித்துக் கொல்வதற்கோ துன்புறுத்துவதற்கோ அனுமதி இல்லை.
உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7.31)
விஷப் பிராணிகள் மனிதனுக்குத் தீங்கிழைப்பதால் அவற்றைக் கொன்று விடலாம் என இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் நமக்கு அனுமதி அளித்துள்ளார்கள்.
பாம்புகளைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் ஏவியதை நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
உலகில் வாழும் மனிதன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், எந்த மொழி பேசுபவனாக இருப்பினும், எந்த நாட்டைச் சார்ந்தவனாக இருப்பினும் மனிதன் என்ற அடிப்படை யில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுடைய உயிரை நியாயமின்றிப் பறிப்பது மாபெரும் பாவமாகும்.
இன்றைய உலகில் எவ்விதக் காரணமுமின்றி சிறுசிறு காரணங் களுக்காகவும் மனிதர்களிடையே உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அப்பாவி பெண்களும், குழந்தைகளும் கூட இக் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
சாதி, மத, இன, மொழி அடிப்படையில் மனிதர்களின் தலைகளும், கால் கைகளும் வாழை மரம் வெட்டப்படுவது போன்று வெட்டப்படுகின்றன. போடி, தேவாரம், கொடியன்குளம் இன்னும் இராஜபாளையம் போன்ற வட்டாரங்களில் நடந்து முடிந்த ஏராளமான சம்பவங்களும், போஸ்னியா, செச்சன்யா போன்ற நாடுகளில் நடந்து வரும் கொலைகளும் இதற்கு சாட்சி யளிக்கின்றன. ருவாண்டா, உகாண்டா போன்ற நாடுகளில் நடத்தப் பட்ட இந்த வெறியாட்டங்கள் இந்நிலைகளைப் படம் பிடித்தே காண்பிக்கின்றன. இவர்கள் இவ்வாறு அநியாயமான முறையில் செய்த கொலைகளை நியாயப்படுத்தவும் முயல்கின்றனர்.
இதைப்பற்றி இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? அவர்கள் செய்வது நியாயம் தானா என்பதை நன்கு ஆராயும் போது நியாயமின்றி ஓர் உயிரைப் பறித்த எவனாயினும் குற்றவாளி தான் என்று இஸ்லாம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அவன் மரண தண்டனைக்குரியவன் என்பதையும் தெளிவு படுத்துகிறது.
''அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக ஆக்கியுள்ள எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'' (அல்குர்ஆன் 6:151)
''ஒரு மனிதனைக் கொலை செய்த (குற்றத்திற்காக அன்றி) அல்லது பூமியில் குழப்பத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக எவனொருவன் மற்றவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போலாவான்.'' (அல்குர்ஆன் 5:32)
இந்த வசனங்களில் பொதுவாகக் குறிப்பிட்ட சிலருடைய உயிர் என்று குறிப்பிடப்படாமல் எந்த உயிரையும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே முஸ்லிமாக இருக்கும் ஒருவன் தன்னைப் போன்ற முஸ்லிமை மட்டும் தான் கொலை செய்யக்கூடாது, பிறரைக் கொலை செய்தால் பாவம் இல்லை என்று எண்ணலாகாது. எந்த மனிதனைக் கொலை செய்தாலும் அது பெரும் பாவம் என்று தான் இறைவன் குறிப்பிடுகின்றான். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
''(தன் சமுதாயத்தோடு) ஒப்பந்தம் செய்து கொண்டு வாழக்கூடிய ஒருவனை (தகுந்த காரணமின்றி) எவன் கொலை செய்து விடுகிறானோ அவன் சுவர்க்கத்தின் காற்றைக் கூட சுவாசிக்கமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உஸ்மான்(ரலி) நூல்கள்: இப்னுமாஜா, திர்மிதி
இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்பவர்களுக்கு 'திம்மி' என்று சொல்லப்படும் அந்த திம்மியை எவனாவது கொலை செய்துவிட்டால் அவன் ஒரு போதும் சுவர்க்கம் போக மாட்டான் என்பதை நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
மரண தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை திம்மியாக வாழுபவன் செய்துவிட்டாலும் அவனைத் தன் இஷ்டத்திற்கு யாரும் கொலை செய்து விட முடியாது. இஸ்லாமிய நீதிமன்றத்தில் நிறுத்தி நிரூபிக்கப் பட்ட பின்பு தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதையும் இஸ்லாமிய அரசு தான் செய்ய வேண்டும்.
எந்த மனிதனையும் கொலை செய்யக் கூடாது என்று இறைவன் கூறிவிட்டு நியாயமான காரணங்கள் இருப்பின் இஸ்லாமிய அரசு மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறுகின்றான். அந்த நியாயமான காரணங்கள் என்ன என்பதையும் நாம் அறிய வேண்டும்.
1.கொலைக்குப்பழி தீர்க்கும் முகமாக மரண தண்டனை விதித்தல்.
2.குழப்பத்தைப் பூமியில் பரப்புகின்ற காரணத்திற்காக மரண தண்டனை விதித்தல்.ழூ
3. திருமணமானவன் விபச்சாரம் செய்தல், கற்பழிப்புக் குற்றம் புரிந்ததற்காக மரண தண்டனை விதித்தல்.
4. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதித்தல்.
இவற்றைப் பற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள சட்டங்களைச் சற்று அறிதல் அவசியம். ஏனெனில் ஓர் உயிரை மரண தண்டனைக்குள்ளாக்குதல் என்பது சாதாரண விஷயமல்ல.
கொலைக்குப் பழி தீர்ப்பது
''கொலை செய்ததற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம்.'' (அல்குர்ஆன் 5.32)
''அறிவுடையவர்களே கொலைக்குப் பழி தீர்ப்பதில் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. (இவ்வாறு நீங்கள் பழிதீர்ப்பதால் இத்தகைய குற்றங்கள் மேலும் பெருகாமல்) நீங்கள் (தீமைகளிலிருந்து) உங்களைக் காத்துக் கொள்ளலாம்.'' (அல்குர்ஆன் 2.176)
இஸ்லாத்திற்கு எதிராக சசூழ்ச்சி செய்வது, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, இன்னும் கால்நடைகளுடன் இன்பம் கொள்வது போன்ற குற்றங்கள் சமுதாயத்தையே அழிக்கக் கூடியதாக இருப்பதால் இக்குற்றங்களைச் செய்பவனுக்கு மரண தண்டனை கொடுக்குமாறு இஸ்லாம் கூறுகிறது.

''அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்: (அவர்கள்) கொல்லப்படுதல் அல்லது தூக்கில் ஏற்றப் படுதல், அல்லது மாறு கால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல், இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.'' (அல்குர்ஆன் 5.33)
உண்மையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை இறைத்தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிம் ஒருவனை மூன்று காரணங்களுக்காக அன்றி கொலை செய்வது ஆகுமானதல்ல.
1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்
2. ஓர் (மனித) உயிரைக் கொலை செய்தல்
3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல் என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மூன்று காரணங்களுக்காக அன்றி ஒரு முஸ்லிமைக் கொல்வது ஆகுமானதல்ல.
1. திருமணமான பின் விபச்சாரம் செய்பவன் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.
2. திட்டமிட்டு ஒரு மனிதனைக் கொலை செய்தவன் கொலை செய்யப்பட வேண்டும்.
3. இஸ்லாத்தை விட்டும் விலகி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போர் புரிபவன் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்
என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள் நூல்கள்: அபூதா¥த், அந்நஸயீ
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது
(நபியே!) லூத்(அலை) அவர்களையும்(நினைவு கூறுவீராக!) அவர் தம் சமூகத்தாரிடம் நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா என்று கூறினார்.

நீங்கள் பெண்களை விட்டு, மோகங்கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள் (என்றும் கூறினார்)
அதற்கு அவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தவரிடம்) லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரை விட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர் மிகவும் பரிசுத்தமான மனிதர்! என்று (பரிகாசமாக) கூறினார்களே தவிர, வேறு எந்தப் பதிலும் அவர்களிடம் இல்லை.

ஆனால் நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளைத் தீர்மானித்தோம். (அல்குர்ஆன் 27:54-57)
எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்து விட்ட போது, நாம்(அவ்¥ரின்) அதன் மேல் தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல பொழிய வைத்தோம். (அல்குர்ஆன் 11:82)
நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தவர் களில் எத்தனையோ சமுதாயத்தவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அழிக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் லூத்(அலை) அவர்களுடைய சமூகத்தாரை அழித்ததைக் குறிப்பிடு கையில் அவர்கள் செய்த பாவம் ஓரினச் சேர்க்கை என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான். அவ்வாறு அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் முற்றிலுமாக அழித்துவிட்டான். அவர்கள் செய்த அதே கேவலமான செயலை யார் செய்தாலும் அவர்களைக் கொன்று விட வேண்டுமென்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை.
''உங்களில் எவரேனும் லூத்(அலை) அவர்களுடைய சமூகத்தார் செய்த(ஓரினச் சேர்க்கை) செயலைச் செய்யக் கண்டால் செய்பவனையும் (அவனுக்கு இணங்கி) செய்யப்படுபவனையும் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: இப்னுமாஜா, திர்மிதி
ஓரினச் சேர்க்கை மரணதண்டனைக்குரியது என்பதை மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நாம் அறியலாம். இவையல்லாத பிற காரணங்களுக்காகக் கொலை செய்தல் அழிவை உண்டாக்கும் பாவம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

வட்டியை உண்ணுதல்
வட்டி வாங்கி உண்பது அழிவை உண்டாக்கக் கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்று என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பொருளைக் கொடுத்திருப்பவன் தன் பொருளைத் திரும்பப் பெறும் வரையில் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டே இருப்பது அல்லது தன் பொருளைத் திரும்பப் பெறும் போது தான் கொடுத்ததை விட அதிகமாக வாங்குவது அல்லது தவணை முறையில் தான் கொடுத்தவற்றை விட அதிகமாக வாங்குவது வட்டியாகும்.
பொருளைக் கொடுத்திருப்பவர், தான் கொடுத்த அளவு மட்டும் வாங்குதல் கடன் எனப்படும். தான் கொடுத்ததை விட அதிகமாக எவ்வகையில் வாங்கினாலும் அது வட்டியாக ஆகி விடும். சிலர் தாங்கள் வட்டியாக வாங்குவதை நியாயப்படுத்துவதற்காக நாங்கள் வட்டியாக வாங்குவதில்லை, மாறாக எங்களிடம் வாங்குபவர் செய்யும் தொழிலில் நாங்களும் பங்கு பெறுகிறோம். என்று கூறுகிறார்கள். லாபத்தில் மட்டும் பங்கு கொள்வது நியாயமானதல்ல. பங்கு என்றால் அதில் ஏற்படும் நஷ்டத்திலும் இருக்க வேண்டும். லாபத்தில் மட்டும் பங்கு என்பது வட்டி தான் என்பதில் சந்தேகமில்லை.

வட்டியை (வாங்கி) விழுங்குகின்றவர்கள், மறுமை (நாளில் இறைவனால் எழுப்பப்படும் போது) ஷைத்தான் பிடித்த பைத்தியக்காரன் எழும்புவது போலன்றி (வேறுவிதமாக) எழும்ப மாட்டார்கள். வணிகமும் வட்டியைப் போன்றது தான். (எனவே வட்டி வாங்குவதில் தவறில்லை) என இவர்கள் கூறியதுதான் இதற்குக் காரணம்.
ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான். ஆதலால் இறைவனிடமிருந்து வந்த(இந்த) எச்சரிக்கைப் படி(அதை விட்டும் முழுமையாக) விலகிக் கொண்டால் (அதற்கு) முன்பு (அவன் வட்டியாக வாங்கிச்) சென்றது அவனுக்குரியதே. (இதற்கு முன்பு வட்டி வாங்கிய) அவனுடைய விஷயம் அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது.
(அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்தபின் வட்டி வாங்குவதை விட்டு விட்டால் அல்லாஹ் அவனை மன்னித்து விடலாம்) வந்த (இந்த எச்சரிக்கை கிடைத்த) பின்னரும் எவரேனும் வட்டி வாங்க முற்பட்டால் அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் என்றென்றும் அதில் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:275)
மேற்கண்ட வசனத்தில் வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதோடு இக்கடுமையான எச்சரிக்கைக்குப் பின்பும் வட்டி வாங்க முற்படுபவர் நரகவாசி என்றும் அதில் அவர் நிரந்தரமாகத் தங்கி விடுவார் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
மேலும் நாம் இதில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைமறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் ஆகியோரைப் பற்றி நரகவாசிகள் என்று கூறும் போது ''ஹும் ஃபீஹா காலிதூன்'' (அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்) என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கின்றான்.
அதே வாசகத்தைத் தான் வட்டி வாங்குபவர்களை எச்சரிக்கும் போதும் குறிப்பிடுகின்றான். அப்படியானால் வட்டி வாங்குவது எந்த அளவிற்குக் கொடிய பாவம் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.
இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். அப்படி அவன் அதை விட்டும் மீளவில்லை என்றால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன் என்று அதே அத்தியாயத்தில் அடுத்து வரும் வசனங்கள் தெரிவிக்கின்றன.
இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் (உண்மையான) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டு விடுங்கள்.


''இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் யுத்தம் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி மனம் வருந்தி) மீண்டு விட்டால் உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்.(அவ்வாறே நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.'' (அல்குர்ஆன் 2:278-279)
இத்திருவசனங்களை அறிந்த பின்னரும் எவரேனும் வட்டி வாங்கினால் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிடுபவர் என்பதை இதன் மூலம் உணரலாம். எனவே முஸ்லிம்களாகிய நமக்கிடையில் எவ்விதத்தில் வட்டி தலையிட்டாலும், அதன் ஆணிவேரையே வேரோடு அறுத்து விட வேண்டும்.
எவரிடமும் வட்டி வாங்கலாகாது
''(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்களுடைய பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை.'' (அல்குர்ஆன் 30:39)

ஏழைகள் வறுமையின் கொடுமையைப் போக்குவதற்கு வாங்கும் கடனுக்கோ, நோயாளிகள் நோயைப் போக்க வாங்கும் கடனுக்கோ வட்டி வாங்குவது தான் குற்றம். வணிகம், விவசாயம் போன்ற தொழில் ரீதியான கடன்களுக்கு வட்டி வாங்கலாம் என்பது சிலருடைய கருத்தாகவும், முஸ்லிம்களிடத்தில் தான் வட்டி வாங்கக் கூடாது., முஸ்லிமல்லாதவர்களிடம் வட்டி வாங்கலாம் என்பது மற்ற சிலருடைய கருத்தாகவும் இருந்து வருகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஏனெனில் வட்டி வாங்கலாகாது என்று இறைவன் கூறும் போது இன்னாரிடம் வட்டி வாங்காதே என்று இனம் பிரித்துக் கூறாமல் ''அன்னாஸ்'' மனிதர்கள் என்று தான் கூறியுள்ளான். இன்ன மொழிக்காரனிடம், இன்ன இனத்தவனிடம், இன்ன நாட்டுக் காரனிடம், இன்ன நிறத்தவனிடம் என்று கூறாமலிருப்பதால் மனிதனாகப் பிறந்த எவனிடமும் வட்டி வாங்கலாகாது அப்படியே வாங்கினால் அது குற்றம் என்பதை இந்த 30:39 வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
வட்டி வாங்குவதை மட்டும் இஸ்லாம் தடை செய்யவில்லை. அது சம்பந்தமான செயல்பாடுகளில் பங்கு கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது.
''வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்குக் கணக்கு எழுதுபவன், அதற்குச் சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்னும் அவர்கள் (அனைவரும்) குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் நூல்கள்: முஸ்லிம்
வட்டி கொடுப்பவன் கொடுத்தால்தான் அதை வாங்குபவன் வாங்க முடியும். எனவே தான் வட்டி கொடுப்பவனும் குற்றவாளி என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எச்சரிக்கப்பட்ட ஏழு பாவங்களில் வட்டி வாங்குவதும் இருப்பதால் இதை விட்டு முற்றிலுமாக விலகிக் கொள்ளாத வரை நாம் முஸ்லிமாக இருக்கவே முடியாது.

அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்
அநாதைகள் அரவணைப்பு மையங்கள் நிறைய உருவாக்கப் பட்டுள்ள காலம் இது. பலரிடமும் நிதி வசசூல் செய்து இந்த அநாதை மையங்களைச் சிறப்பாக நடத்துவோரும் உள்ளனர். அநாதைகளின் பெயரால் திரட்டப்பட்ட நிதிகளை அவர்களுக்குக் கொண்டு செல்லாமல் விழுங்குவோரும் உள்ளனர்!

இது போன்று அநாதைக் குழந்தைகளையும், அவர்களின் சொத்துக்களையும் பராமரிக்கும் பொறுப்பேற்று அவர்களைத் தனி வீட்டில் வைத்திருப்போர் அவர்களின் சொத்துக்களை அப்படியே தனக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இத்தகையச் செயல் பெரும் பாவச் செயல் என்று இஸ்லாம் அவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறது.
''நிச்சயமாக எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ, அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும் அவர்கள் (மறுமையில்) கொளுந்து விட்டெரியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.'' (அல்குர்ஆன் 4:10)
''நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள். நல்லதற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றிக் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.'' (அல்குர்ஆன் 17:34)
மேற்கண்ட வசனத்தில் வரும்''வயதுக்கு வருதல்'' என்பது பற்றியும் ''நியாயமான முறையிலன்றி அநாதைகளின் சொத்துக்களை நெருங்காதீர்கள்' என்பது பற்றியும் விளக்கமாக குர்ஆனில் கீழ்வரும் வசனத்தில் இறைவன் கூறியிருக்கிறான்.
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள். (அவர்கள் மணப்பருவத்தை அடைந்ததும்) அவர்கள்( தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவைப் பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரயமாகவும் சாப்பிடாதீர்கள்.

இன்னும் (அந்த அநாதைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டால்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். ஆனால் அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும். மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.(உண்மையாக) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4:6)
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னிடம் ஒரு அநாதை இருக்கிறான். அவனுக்குச் சொத்து இருக்கிறது. என்னிடம் சொத்து இல்லை. நான் அவனுடைய சொத்தில் உண்ணலாமா என்று கேட்டதற்கு
''வீண் விரயம் செய்யாது நியாயமான முறையில் உண்பீராக,'' என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) நூல்கள்: அபூதா¥த், நஸயீ
அநாதைகளின் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள் ஏழைகளாக இருப்பின் தன் தேவைக்கேற்ப மட்டும் அச்சொத்திலிருந்து உண்ணலாம் என்பதும் தகுந்த பொருளாதார வசதியுடையவர்கள் ஒருபோதும் அநாதைகளின் சொத்தை நெருங்கலாகாது என்பதும் மேற்கண்ட வசனமும் ஹதீஸும் நமக்குத் தெளிவாக்குகின்றன.
மேலும் அநாதைகளுக்கு இஸ்லாம் பல சலுகைகளையும் வழங்குகின்றது.
''(நபியே! அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், நீர் கூறுவீராக் அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைப்பது மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள்.'' (அல்குர்ஆன் 2:220)
''அநாதைகளுக்கு நன்மை செய்யுங்கள்.'' (அல்குர்ஆன் 2:83)
''(உங்களிடம் உள்ளவற்றிலிருந்து) அநாதைகளுக்குக் கொடுத்தல் புண்ணியமாகும்.'' (அல்குர்ஆன் 2:177)
''அநாதைகளுக்கு உபகாரம் செய்யுங்கள்.'' (அல்குர்ஆன் 4:36)
''நன்மையை நாடி அநாதைகளுக்குச் செலவு செய்யுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக.'' (அல்குர்ஆன் 76:8)
''நீர் அநாதைகளைக் கடிந்து கொள்ளாதீர்.'' (அல்குர்ஆன் 93:9)
''போரில் கிடைத்த பொருட்களில் அநாதைகளுக்கும் உரிமையுண்டு.'' (அல்குர்ஆன் 8:41)
''(நபியே! ) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான்.'' (அல்குர்ஆன் 107:1-2)
இறைவன் அநாதைகளை நடத்தும் விதம் பற்றியும், அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் திருக்குர்ஆனில் பல இடங்களில் இவ்விதம். குறிப்பிட்டுள்ளான்.
எனவே அநாதைகளின் சொத்தை அநீதமான முறையில் விழுங்குவது மாபெரும் குற்றம்! இக்குற்றத்தைப் புரிவோர் முஸ்லிமாக இருக்கவே தகுதியற்றவர்கள்.

போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
பூமியில் குழப்பங்கள் தீர்க்கப்படுவதற்காகவும், இறைவனு டைய மார்க்கம் நிலை நாட்டப்படுவதற்காகவும் முஸ்லிம்கள் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இறைவனும் இறைத்தூதரும் காட்டிய முறைப்படி இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிய அழைக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும். அப்படி அழைக்கப்படும் போது தன் உயிர், தன் பொருளாதாரம் தான் மேலானது,

இந்த அறப்போரில் கலந்து கொண்டால் அவை அழிந்து விடுமோ என்ற அச்சத்தோடு ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ளவில்லையாயின், அவன் செய்யும் அச்செயல் அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
''பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தை களையும், பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் என்ன? (அவர்களோ) எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்¥ரை விட்டும் எங்களை வெளியேற்றுவாயாக் எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக! இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:75)
''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' அல்குர்ஆன் 5:21
அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என்றால் கண்களில் காணும் இறைமறுப்பாளர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துவது என்று அர்த்தமல்ல் இஸ்லாத்தைத் தெளிவாக எடுத்துக் கூறியும் அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காகக் கண்ட இடத்தில் வெட்ட வேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதைத் தடை செய்து குழப்பம் விளைவித்தாலோ அல்லது முஸ்லிம்களின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலோதான் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.
அக்கிரமம் ஒன்றும் நடக்காமல் இருக்கும் போது போரிடுவது குற்றம். அவ்வாறே அக்கிரமம் நடந்து கொண்டிருக்கும் போது போரிடாமல் இருப்பதும் குற்றம். அந்தப் போரையும் இஸ்லாமிய அரசு தான் நடத்த வேண்டுமே தவிர, தன்னிச்சையாக எவரும் செயல்படக் கூடாது. அப்படி எவரேனும் தன்னிச்சையாகச் செயல்பட்டால் அது அறப்போர், ஜிஹாத், புனிதப் போர் என்று ஒரு போதும் அழைக்கப்படாது. மரண தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.
''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 2:190)
எவருடனும் அநியாயமான முறையில் இஸ்லாம் ஒரு போதும் போரிடப் பணிக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கையாகவும், தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையாகவும்தான் இஸ்லாம் போரிடப் பணிக்கிறது. தற்காப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டாம் என்று எந்த ஓர் அறிவாளியும் கூறமாட்டான்.
இறைவன் காட்டித்தந்துள்ள இந்த முறைப்படி போராட அழைக்கும் போது ஒரு முஸ்லிம் அதில் கலந்து கொள்ள மறுத்தால், அவன் மிகவும் இழிவானவன்; நயவஞ்சகன் (முனாஃபிக்) என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.
மூஸா(அலை) அவர்கள் தம் சமூகத்தாரை அல்லாஹ்வின் பாதையில் போரிட அழைத்த போது, அவர்கள் கூறியதையும் அதனால் அவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனையையும் திருக்குர்ஆனில் நாம் தெளிவாகக் காண்கிறோம்.
மூஸாவே! மெய்யாகவே, அந்த இடத்தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின் நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம் என்று கூறினார்கள்.
(இறைவனை) அஞ்சிக் கொண்டிருந்தோர்க்கு மத்தியில் இருந்த அந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடை யைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி) அவர்களை எதிர்த்து வாயில்வரை நுழையுங்கள்; அதுவரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்களாவீர்கள்; நீங்கள் மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள் என்று கூறினார்கள்.
அதற்கவர்கள் ''மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை ஒரு போதும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம் நீரும் உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் புரியுங்கள், நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.'' என்று கூறினார்கள்.
''என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்தச் சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!.'' என்று மூஸா கூறினார்.
(அதற்கு அல்லாஹ்) ''அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாக தடுக்கப்பட்டு விட்டது; (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை) வார்கள்;. ஆகவே நீர் இத்தீயக் கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 5:22-26)
அல்லாஹ்வின் பாதையில் போராட மூஸா(அலை) அவர்கள் அழைத்ததற்குச் செவிமடுக்காததால் அவர்கள் தீயவர்கள் என்று தீர்ப்பு கூறப்பட்டு இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் நின்றும் தடுக்கப்பட்டவர்கள். எவ்வளவுதான் அருளும் வளமும் வாழ்வில் பெற்றிருந்தாலும் கூட நியாயத்தை நிலைநிறுத்தும் வகையில் நடத்தப்படும் அறப்போரை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் அனைத்தும் அழிந்து விடும்; இறுதியில் திக்கற்ற நிலையில் தான் மனிதன் இருப்பான்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்தில் கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள், ஹிலால் இப்னு உமையா(ரலி) அவர்கள் இன்னும் மிராரா இப்னு ரபீஃ அல் ஆமிரி(ரலி) அவர்கள் ஆகிய மூன்று நபித்தோழர்கள் மார்க்கம் அனுமதித்த காரணங்கள் ஏதும் இல்லாமல் போரில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இவ்வாறு செய்த காரணத்தினால் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இருந்தும் கூட இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை மன்னிக்க இயலவில்லை.
யுத்தத்தில் கலந்து கொள்ளாத முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் எல்லாம் பொய்யான காரணத்தைக் கூறி நபி(ஸல்) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் இம்மூன்று நபித்தோழர்களும் பொய்யான காரணங்களைக் கூற விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மூன்று நபித்தோழர்கள் மீதும் இரக்கம் கொண்டார்கள். இருப்பினும் கூட இறைவனுடைய அனுமதி இல்லாமல் தாங்களாக மன்னிப்பு வழங்க முடியவில்லை. முஸ்லிம்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்ததால் யாரும் அவர்களுடன் பேசவுமில்லை.

இவ்வாறாக ஐம்பது நாட்கள் கழிந்து விட்டன. அதற்குப் பின்பு தான் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டதாக வஹீ மூலம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் அழுது கொண்டே இருந்தேன் என்று கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இச்சம்பவம் புகாரி எனும் ஹதீஸ் நூலில் மிகத் தெளிவாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
''(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும்,(அல்லாஹ் மன்னித்து விட்டான்) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வது கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனை விட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ் அவர்களை மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 9:118)


நபித்தோழர்களுக்கே இந்நிலை என்றால் அப்பெரும் பாவத்தைத் பிறர் செய்து விட்டால் அவர்களுடைய நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும், அசத்தியம் அழிய வேண்டும். அதற்காக ஒரு முஸ்லிம் தன் உயிரையே தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

இறையச்சமுள்ள ஒழுக்கமான பெண்கள் மீதுஅவதூறு கூறுதல்
ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு ஒர் ஆணுடன் தன் இச்சை யைப் பூர்த்தி செய்து கொண்டாலோ, அல்லது திருமணமான பெண் தன் கணவனை விடுத்து மற்றொருவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டாலோ அவள் உலகில் அனைவரிடமும் இழிவாகவே கருதப்படுவாள். இது உண்மையில் இழிவான செயல்தான்.
இந்த இழிவான செயலைச் செய்த பெண்கள் பிறருடைய குத்தலான பார்வைக்குட்பட்டுத் தினமும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓர் ஆண் மீது இவ்வாறான களங்கத்தைச் சுமத்தினாலும் அது நாளடைவில் மறைந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு பெண் மீது இக்களங்கம் சுமத்தப்படுமானால் அவள் மண்ணறைக்குச் சென்று விட்டாலும் கூட பேசப்படாமல் இருப்பது இல்லை. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் கெடுக்க நினைப்போர் அவள் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டால் போதுமானது. அன்று முதல் அவள் நிம்மதி அனைத்தும் அடியோடு அழிந்து விடும்.
கிராமப்பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் இன்னும் இதுபோன்ற பல இடங்களிலும் ஒன்று கூடி அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள், அவள் அப்படி இவள் இப்படி என்று பிற பெண்களின் கற்பைக் களங்கப்படுத்தும் விதமாகப் பேசுகின்றனர். பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் கொஞ்சமும் நாணமின்றி ஒருத்தி மற்றொருத்தியின் கற்பைக் களங்கப்படுத்தித் திட்டுவதையும், நாம் காண்கின்றோம். இந்நிலை நகரங்களிலும் காணப்படுவதுண்டு.
இவர்கள் இவ்வாறு பேசுவது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை உணரவில்லை போலும்!
''உங்களுக்கு (திட்டமாக அறிவில்லாத) ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்களா? இன்னும் நீங்கள் இதை இலேசானதாகவும் எண்ணிவிட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ் விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கிறது.'' (அல்குர்ஆன் 24:15)
''கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறியவர்கள் (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.'' (அல்குர்ஆன் 24:4)

அவதூறு கூறி பூமியில் குழப்பங்களை உண்டாக்கி அநியாயம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்காகவும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காகவும் இறைவன் இச்சட்டத்தை மனித சமுதாயத்திற்குப் பெரும் பரிசாகக் கொடுத்துள்ளான்.
இச்சட்டம் கடுமையான சட்டமாக இருப்பதால் இதைச் சற்று விரிவாகவே நாம் காண்போம்!
திருமணமாகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.
''விபச்சாரம் புரிந்த பெண், விபச்சாரம் புரிந்த ஆண் ஆகிய இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.'' (அல்குர்ஆன் 24.2)
திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்பது மார்க்கச் சட்டம்.
நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிம் ஒருவனை மூன்று காரணங்களுக்காக அன்றி, கொலை செய்வது ஆகுமானதல்ல.
1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்
2. ஒரு (மனித) உயிரை கொலை செய்தல்
3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
விபச்சாரத்திற்கு இந்தளவிற்குச் சட்டம் கடுமையாக இருப்பதால் ஒருவன் ஒருவனைக் கொல்ல நினைத்தால் அல்லது ஒரு பெண்ணைக் கொல்லவோ களங்கப்படுத்தவோ நினைத்தால், இப்பழியை அவர்கள் மீது போட்டு இலகுவாக முடித்து விடலாமல்லவா? அவ்வாறு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற் காகவே அவதூறு கூறுபவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; இல்லை என்றால் அவதூறு கூறிய குற்றத்திற்காக அவருக்கு எண்பது கசையடி கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
அவதூறு கூறுபவர்களுக்கு எண்பது கசையடி என்று இறைச்சட்டம் இருப்பதால் பொய் சாட்சி சொல்வதற்கு எவரும் துணிய மாட்டார். அப்படியே துணிந்து நான்கு பேர் பொய் சாட்சி கூறிவிட்டாலும் நிச்சயம் அவர்கள் உலகிலேயே ஒருநாள் பிடிபடுவார்கள்.
எப்படி என்றால், கெட்டவர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கவே முடியாது; என்றாவது ஒருநாள் பிரச்சினை வந்து தான் தீரும். அன்று அவர்கள் பிரிந்து விடுவார்கள். அவர்கள் இவ்வாறு இந்த விஷயத்தில் பொய் சாட்சி கூறியிருந்தால் பிரிந்த பின்பு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் போது உண்மை வெளியாகி விடும்; அன்று அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
அவதூறு கூறியவர்களுடைய சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மற்றொரு சட்டமும் 24:4 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு அவதூறு கூறியவர்களுக்குத் தண்டனை கொடுத்து விட்டால், அதைக் காண்போர் மற்றவர் மீது அவதூறு கூறமாட்டார்கள். அநியாயம் எவ்விதத்திலும் ஏற்படாது.
அன்னியப் பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள், அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். தன் மனைவியின் மீது ஒருவன் களங்கத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது என்பதையும் நாம் காண வேண்டும்.
தன் மனைவி மீது அவதூறு கூறும் ஒருவன், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. அவளுக்குத் தக்க தீர்ப்பை வழங்கி விடலாம். தன் மனைவியைத் தவறான செயலில் கண்ட ஒருவன் சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்கவில்லை என்ற காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டால் அது நியாயமாகாது; அல்லது அவன் கொண்டு வரும் வழக்கைச் சாட்சிகள் இல்லை என்ற காரணத்திற்காக நிராகரித்தாலும் நியாயமில்லை. ஏனெனில் இவ்வாறு நிராகரித்து அவனைத் தன் மனைவியுடன் வாழச் செய்வதால் பல தீய விளைவுகள் உண்டாகும் சாத்தியங்கள் உள்ளன.
தன் மனைவி தனக்குச் செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியாத காரணத்தால் இவன் தன் மனைவியை எந்த நிமிடமும் கொன்று விடலாம். கொன்று விட்டுக் கொலை குற்றத்திற்காக இவன் மரண தண்டனைக்குள்ளாக நேரிடலாம்; அல்லது இவன் அமைதியாக இருந்து விட்டாலும் அவளுக்குத் தான் செய்த துரோகத்தைக் கணவன் பார்த்தது உறுத்திக் கொண்டே இருக்கும். கணவன் தன்னைக் கொன்று விடுவானோ என்ற அச்சத்தில் அவள் தன் கணவனை எந்த நிமிடமும் கொன்று விடலாம். அப்படி அவள் அவனைக் கொன்று விட்டால் அது மிகப் பெரும் அநியாயமாக ஆகிவிடும்.

இப்படி ஒரு செயல் நடந்து விட்டால் அங்கு நியாயம் அழிந்து போகிறது. கணவன் சொன்ன சாட்சி மட்டும் போதும் என்று அவனுடைய மனைவிக்கு தண்டனை கொடுத்தாலும் அநியாயமாகி விடும். ஏனென்றால் தன் மனைவியைப் பிடிக்காத காரணத்திற்காகவோ, அல்லது வேறு ஏதாவது கோபத்தின் காரணமாகவோ கூட அவளைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்ட கணவன் இவ்வழியைக் கையாளலாம்.
இப்படிப்பட்ட இக்கட்டான சசூழ்நிலையிலும் கூட இருவரில் யாருக்கும் அநியாயம் ஏற்படாத வகையில் தீர்ப்பளிக்குமாறு இறைவன் தன் சட்டத்தை விவரித்துள்ளான்.

''எவர்கள் தங்கள் மனைவிமார்கள் மீது அவதூறு கூறி(அதை நிரூபிக்க) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமல் இருந்தால், அவன் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து ஐந்தாவது முறை (இதில்) நான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகட்டும்! என்றும் (அவன் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:6-7)

இவ்வாறு அவன் சத்தியம் செய்து கூறியவுடன் அவன் சொல்வது உண்மை என்று தீர்ப்பளித்து விட முடியாது. அவனுடைய மனைவியிடமும், அவ்வாறே சத்தியம் செய்யக் கட்டளையிட வேண்டும்.

''இன்னும் (அவனுடைய மனைவி) தன் மீதுள்ள தண்டனையை விலக்க அவன் கூறிய குற்றத்தை மறுத்து ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி ஐந்தாவது முறை அவன் உண்மையாளர்களில் உள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:8-9)

இவ்வாறு இருவரும் சத்தியம் செய்த பின்பு, விவாகரத்து(தலாக்) செய்யாமலேயே நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள். இதற்கு லிஆன் என்று சொல்லப்படும்.

அவர்கள் செய்யும் சத்தியம் தாங்களாக வீட்டில் அமர்ந்து கொண்டு செய்து கொள்வதில்லை. மாறாக, இஸ்லாமிய நீதிமன்றத்தில் தான் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவதூறு கூறுதல் இவ்வளவு பெரும் விளைவுகளையெல்லாம் உண்டாக்கி விடுவதால்தான் மனிதனை அழிக்கக் கூடிய ஏழு பாவங்களில் இதுவும் ஒன்று என்று இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் கூறுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பாவங்கள் மட்டுமல்லாமல், எவை எல்லாம் பாவமோ அவை அனைத்தையும் விட்டு அல்லாஹ் மனிதர்களைக் காத்து நேர்வழியில் செலுத்துவானாக. அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அருள்புரிவானாக. 
இன்ஷா அல்லாஹ் !!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini