அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

அழகிய ஆடை...

உண்மை முஸ்லிம்  ஆடம்பரமோ வீண்விரயமோ இல்லாமல் தனது ஆடைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்; அழகிய வடிவுடன் தூய்மையுடன் தோற்றமளிக்கவேண்டும். அப்போதுதான் அவரைக் காண்பவர்களின் கண்கள் குளிர்ச்சியடையும்; இதயங்கள் அவரை நேசிக்கும். மக்களிடையே வரும்போது இழிந்த தோற்றத்தில் இல்லாமல் தன்னை முறையாக அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக தங்களை அழகுபடுத்திக் கொள்வதைவிட தோழர்களைச் சந்திக்கச் சென்றால் அதிகமாக அழகுபடுத்திக் கொள்வார்கள்.
    (நபியே!) கூறுங்கள். அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்? (அல்குர்அன் 7:32)
    இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கான விரிவுரையில் குறிப்பிடுகிறார்கள்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நபி (ஸல்) அவர்களைக் காண சில தோழர்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரத்தயாரானபோது வீட்டில் நீர் நிரம்பிய குவளையைக் கண்டார்கள். அந்த தண்ணீரில் முகம்பார்த்துக் கொண்டு தனது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் ""நபி (ஸல்) அவர்களே! நீங்களா இதைச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ""ஆம்! ஒரு மனிதர் தன் சகோதரர்களை சந்திக்கச் சென்றால் தன்னை சீர்படுத்திக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகையே நேசிக்கிறான்'' என்று கூறினார்கள்.
    முஸ்லிம் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் நடுநிலையான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொள்வார். நடுநிலையான கொள்கை என்பது வரம்புமீறி அதிகப்படுத்தவும் கூடாது; எல்லை மீறி குறைக்கவும் கூடாது.
    அன்றி அவர்கள் செலவு செய்தால், அளவைக் கடந்துவிட மாட்டார்கள், உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள். (அல்குர்அன் 25:67)
    இஸ்லாம் தனது உறுப்பினர்கள், குறிப்பாக அழைப்புப்பணி செய்பவர்கள் பிறரால் நேசிக்கப்படும் தோற்றத்தில் திகழவேண்டுமென்றும் வெறுப்படையச் செய்யும் தோற்றத்தைக் கொண்டிருக்கக் கூடாது எனவும் விரும்புகிறது. எவரும் பற்றற்றவன், பணிவுடையவன் என்று கூறிக்கொண்டு தன்னை மிக இழிவான அழகற்ற தோற்றத்தில் காட்டிக்கொள்வதை இஸ்லாம் ஏற்பதில்லை.
    ஏனெனில் பற்றற்றவர்கள் மற்றும் பணிவுடையவர்களின் தலைவரான நபி (ஸல்) அவர்கள் அழகிய ஆடைகளை அணிந்தார்கள். தனது தோழர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக தங்களை அழகுபடுத்திக் கொண்டார்கள். இந்த அழகு, அலங்காரம் அல்லாஹ்வின் அருட் கொடைகளை வெளிப்படுத்தும் செயலெனக் கருதினார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நிச்சயமாக அல்லாஹ் தனது அடியானிடம் தனது அருட்கொடையின் அடையாளம் வெளிப்படுவதை விரும்புகிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)
    ஜுன்து இப்னு மகீஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""எதேனும் ஒரு கூட்டத்தினர் தன்னை சந்திக்க வந்தால் நபி (ஸல்) அவர்கள் அழகிய ஆடையை அணிந்து, தனது நெருங்கிய தோழர்களையும் அணிந்து கொள்ள ஏவுவார்கள். கின்தா என்ற கூட்டத்தினரை சந்தித்தபோது நபி (ஸல்) அவர்களை நான் கண்டேன்; அவர்கள் மீது எமன் தேச ஆடை இருந்தது. அதுபோன்ற ஆடையே அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உமர் (ரழி) அவர்கள் மீதும் இருந்தது.'' (தபகாத் இப்னு ஸஃது)
    உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடையை வரவழைத்ததைக் கண்டேன். பின்பு அதை அணிந்து கொண்டார்கள். ஆடை தங்களது கழுத்தை அடைந்தபோது கூறினார்கள்: ""எனது மானத்தை மறைத்து, எனது வாழ்வில் என்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆடையை அணிவித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.'' (அத்தர்ஹீப்)
வரம்பு மீறாத வகையில் அழகு படுத்திக்கொள்ளுமாறு அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடுகிறான்.
    ""ஆதமுடைய மக்களே! தொழும் இடத்திலெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள், பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால்

    நிச்சயமாக அல்லாஹ் அளவுகடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை.''
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவை யென்று) தடுப்பவர் யார்? என்று கேட்டு, ""அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்றும் கூறுவீராக! அறியக்கூடிய ஜனங்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம். (அல்குர்அன் 7:32,33)
    இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""எவனது இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் புகமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் ""ஒருவர் ஆடை, காலணி அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் (அது பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ""நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகாக இருப்பதையே நேசிக்கிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்து, மனிதர்களை இழிவுபடுத்துவதுதான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
    இப்படித்தான் நபித்தோழர்களும் அவர்களை நற்செயல்களால் பின்தொடர்ந்தவர்களும் விளங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் கம்பீரமான தோற்றத்தையும் அழகிய ஆடையையும் நறுமணத்தையும் உடையவர்களாக இருந்தார்கள். ஆடைகள் தூய்மையாக இருப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். தோற்றத்தை சீர்செய்து கொள்ளுமாறு பிறரையும் தூண்டினார்கள்.
    ஒருமுறை தனது சபையில் ஒருவர் கிழிந்த ஆடையை அணிந்திருப்பதைக் கண்டு அவரை தனியாக அழைத்து அவரது தோற்றத்தை சரி செய்துக்கொள்ள ஆயிரம் திர்ஹத்தைக் கொடுத்தார்கள். வாங்க மறுத்த அம்மனிதர் ""நான் செல்வந்தன் எனக்கு இது தேவையில்லை'' என்றார். இமாமவர்கள் அம்மனிதரை கண்டிக்கும் விதமாக ""அல்லாஹ் தனது அடியார்கள் மீது தனது அருட்கொடையின் அடையாளத்தைக் காணவிரும்புகிறான்'' என்ற ஹதீஸ் உன்னை எட்டவில்லையா? எனவே, உனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உன் நண்பர்கள் உன்னைப்பற்றி கவலையற்றிருப்பார்கள் என்று கூறினார்கள்.
    அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர்கள் இத்தகைய அழகிய தோற்றமும் பரிபூரணத் தூய்மையும் பிறரை ஈர்க்கும் தன்மையும் கொண்டிருப்பது அவசியமாகும். அப்போதுதான் அழைப்புப் பணியின் மூலம் பிறரது உள்ளங்களில் உடுருவ முடியும். அழைப்பாளர் எல்லா நிலையிலும் இத்தகைய தன்மைகளை கைக்கொள்ளவேண்டும். அல்லாஹ்வின்பால் அழைப்பவர் தனது  தோற்றப் பொலிவை கவனிக்கவேண்டும். உடல், ஆடை, நகம், தலை மற்றும் தாடிமுடியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேரிய போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஐந்து விஷயங்கள் இயற்கையான பண்புகளாகும். கத்னா (விருத்த சேதனம்) செய்வது, அபத்தின் முடியை சிரைப்பது, அக்குள் முடியைப் பிடுங்குவது, நகங்களை வெட்டுவது மற்றும் மீசையைக் குறைப்பது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    மனிதனுக்குரிய இயற்கைப் பண்புகளைப் பேணுவதன் காரணமாகவே இம்மார்க்கம் நேசிக்கப்படுகிறது. சீரான சிந்தனை உடையவர்கள் இப்பண்புகளைப் பேணுவதில் ஆர்வம் கொள்கின்றனர்.
    முஸ்லிம் தனது தோற்றத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய அதே நேரத்தில் அவர் தன்னை அழகுபடுத்தி, தூய்மைப்படுத்திக் கொள்வதில் இஸ்லாம் அமைத்துள்ள நடுநிலைத் தன்மைக்கு பங்கம் ஏற்படுமளவுக்கு எல்லை மீறிவிடக்கூடாது. பேணுதலான முஸ்லிம், வாழ்வுத்தராசின் ஒரு தட்டு மற்றொரு தட்டைவிடத் தாழ்ந்துவிடாத வகையில் எல்லா நிலைகளிலும் நடுநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
    அழகுபடுத்தி, தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவமளித்து தொழும் இடங்களிலெல்லாம் ஆடைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் அதே சமயம், அலங்காரத்தில் வரம்புமீறி, சதாவும் உலக அலங்காரங்களில் மூழ்கிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறது.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""தீனார், திர்ஹம் மற்றும் ஆடை, அணிகலன்களின் அடிமை நாசமாகட்டும்! அவன் கிடைத்தால் திருப்தியடைவான்; கிடைக்கவில்லையெனில் ஆத்திரமடைவான்.'' (ஸஹீஹுல் புகாரி)
    இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ்லாம் கூறும் நடுநிலையை உறுதியாகப் பின்பற்றுவதாலும் இம்மார்க்கத்தின் நேரிய கொள்கையை கடைபிடிப்பதாலும் இதுபோன்ற வழிகேடுகளிலிருந்தும் தடுமாற்றங்களி லிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்.
    ஆ - அவரது அறிவு
    கல்வி என்பது முஸ்லிமின் சிறப்பும் கட்டாயக் கடமையுமாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் என்பதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்.'' (ஸன்னன் இப்னு மாஜா)

    கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை முஸ்லிம் கல்வியைத் தேடவேண்டும். கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம், அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான், இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.
    நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம். (அல்குர்அன் 35:28)
    பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும். அவர்கள்தான் இப்பிரபஞ்சத்தை படைத்து வாழவைத்து பிறகு (மறுமையில்) உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஆற்றலையும் புரிந்து கொள்ளமுடியும். அல்லாஹ் அந்த அறிஞர்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மைப் படுத்துகிறான்
    (நபியே) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? (இந்த குர்அனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோறெல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குர்அன் 39:9)
    ஸஃப்வான் இப்னு அஸ்ஸப்ல் அல் முராதி (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர் ""இறைத்தூதரே! நான் கல்வியைத் தேடி வந்துள்ளேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ""கல்வியைத் தேடுபவரை நான் வரவேற்கிறேன். கல்வியைத் தேடுபவர்களை மலக்குகள் தங்களது இறக்கைகளால் சூழ்ந்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக வானம்வரை கூடிவிடுகின்றார்கள். வானவர்கள் அவர் தேடும் கல்வியின்மீது கொண்ட அன்பினால் இப்படி சூழ்ந்து கொள்கிறார்கள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், முஸ்தத்ரகுல்ஹாகிம்)
    கல்வியின் மாண்புகள் மற்றும் அதைத்தேடுவதில் ஆர்வமூட்டும் சான்றுகள் பல உள்ளன. உண்மை முஸ்லிம் கற்பவராக அல்லது கற்றுக்கொடுப்பவராக இருப்பார். மூன்றாமவராக இருக்கமாட்டார்.
    மரணிக்கும்வரை கற்பார்
    உயரிய பட்டங்களைப் பெற்று, பொருளாதாரத்தை வளப்படுத்தி, நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதமாக ஆக்கிக் கொண்டு அத்தோடு மட்டுமே விட்டுவிடுவது உண்மையான கல்வியல்ல. மாறாக, ஞானத்தின் பொக்கிஷங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக அய்வுகளைச் செய்துவர வேண்டும். கல்வியை ஆய்வு செய்வதை நிரந்தரமாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்தி கல்வியை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.
    ""என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தைப் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக!. (அல்குர்அன் 20:114)
    நற்பண்புகளுடைய நமது முன்னோர்கள் கல்வியில் உயரிய அந்தஸ்தை அடைந்திருந்தும் தங்களது வாழ்வின் இறுதிவரை கல்வியைத் தேடி ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்கள். அதைத் தொடர்வதன் மூலமே கல்வி உயிர்பெற்று, வளர்ச்சியடையும் என்றும் கல்வியில் ஆய்வு செய்யாமல் புறக்கணிப்பதால் அது ஜீவனற்றுப் போய்விடுமென்றும் கருதினார்கள். கல்வி கற்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர்கள் கொண்டிருந்த முக்கியத்துவமும் அதை செயல்படுத்துவதில் அவர்கள் கொண்டிருந்த ஆவலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.
    இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அபீ கஸ்ஸப்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ""நீ கல்வி கற்கும் காலமெல்லாமல் அறிஞனாக இருப்பாய். தேவையில்லையென நினைத்து ஒதுங்கிவிட்டால் மூடனாகி விடுவாய்.''
    இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ""கல்வி உடையவர் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவது முறையற்ற செயலாகும்.''
    இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் ""எதுவரை கல்வி கற்பீர்கள்?'' என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ""மரணம்வரை'' என்று பதிலளித்து, ""எனக்கு பயனளிக்கும் எதேனும் ஒரு விஷயத்தை இதுவரை நான் எழுதிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறினார்கள்.
    இமாம் அபூ அம்ரு இப்னு அலா (ரஹ்) அவர்களிடம், ""மனிதன் கல்வி கற்றுக்கொள்ள உகந்த காலம் எது?'' என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ""அவன் வாழ்வதற்கு உகந்த காலமனைத்தும்'' என பதிலளித்தார்கள்.
இமாம் ஸன்ஃப்யான் இப்னு ஈயைனா (ரஹ்) அவர்கள் அளித்த பதில் மிகவும் அற்புதமானது. அவர்களிடம் கல்வியைத் தேடுவது யாருக்கு மிக அவசியம்? என்று கேட்டபோது இமாமவர்கள் ""மக்களில் மிக அறிந்தவர்களுக்கு மிக அவசியம்'' என்று கூறினார்கள். ஏன்? (அறிஞர் கல்வியைத் தேடியே ஏகவேண்டும்) என்று கேட்டபோது இமாமவர்கள் ""அறிஞனிடம் தவறு எற்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது'' என்று கூறினார்கள்.
    இமாம் ஃபக்ருத்தீன் ராஜி (ரஹ்) பிரபல குர்ஆன் விரிவுரையாளர் ஆவார்கள். எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்கள். தர்க்கவாதம், தத்துவம் போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அக்கால அறிஞர்களில் தலைசிறந்தவராகத் திகழ்ந்து ஹிஜ்ரி 606ல் மரணமடைந் தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய பிரபலத்தை அளித்திருந்தான். அவர்கள் செல்லும் ஊர்கள், நுழையும் நகரங்கள் அனைத்திலும் அறிஞர்கள் தங்களது கல்வித் தாகத்தைத் தணித்துக்கொள்ள அவர்களை நோக்கி வந்தார்கள். இமாமவர்கள் ஒரு சமயம் "மர்வ' என்னும் நகருக்கு வந்தபோது அறிஞர்களும் மாணவர்களும் திரளாக வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதினர்.
    அங்கு வந்திருந்த மாணவர்கள் கூட்டத்தில், பரம்பரை பற்றிய கல்வியை நன்கறிந்த ஒரு மாணவரும் இருந்தார். அவர் இருபது வயதைத் தாண்டாதவர். இமாமவர்கள் அக்கலையை திறம்பட அறியாதவர்களாக இருந்ததால் அம்மாணவரிடமிருந்து அதை கற்றுக்கொள்ள விரும்பி னார்கள். எவ்விதத் தயக்கமுமின்றி அம்மாணவரிடம் தனக்கு கற்றுத் தருமாறு கோரினார்கள். அவரை ஆசிரியரின் ஸ்தானத்தில் அமர்த்தி அவருக்கு முன் மாணவராக அமர்ந்தார்கள். அக்காலத்தில் சிறந்த இமாமாக இருந்தும் அந்நிகழ்ச்சி அவர்களது அந்தஸ்தை எவ்வகையிலும் குறைத்துவிடவில்லை. மாறாக, இமாமவர்களின் பணிவையும் மாண்பையும் சுட்டிக்காட்டும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகிவிட்டது.
    இந்த அறிஞர்களின் இதயங்கள் கல்வியை எந்தளவு நேசித்திருக்கின்றன! கல்வி அவர்களது பார்வையில் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்கள்! இம்மகத்தான முன்னோர்களைப் பின்பற்றுவது பின்னுள்ளோருக்கு எவ்வளவு அவசியமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
 Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini