அல்லாஹ் நினைவுகூரப்படுகின்ற வீடு உயிருள்ள வீடாகும். அல்லாஹ் நினைவு கூறப்படாத வீடு இறந்த வீடாகும். அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி). ஆதாரம் : முஸ்லிம்
தீனுல் இஸ்லாத்தை இந்தப் பாருலகில் நிலைநாட்டிட வேண்டிய தலையாயப் பொறுப்பைச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள். தீனை நிலைநாட்டும் பணியின் தொடக்க நிலை தனிமனித உள்ளங்களில் உருவாகிறது. அடுத்ததாக அப்பணி வீட்டில் நிலைபெறுகிறது. தொடர்ந்து குடும்பம் ஊர், தேசம், வெளியுலகு என விரிந்து செல்கிறது. நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ், தீன் நிலை நாட்டப்படும் வீட்டையும், தீன்நிலைநாட்டப்படாத வீட்டையும் வேறு பிரித்து விளக்குகிறது.
அல்லாஹ் வீட்டில் நினைகூரப்படுதல் என்பது நாவசைத்து திக்ரின் வாசகங்களை உச்சாடனம்n சய்தல் என்ற அர்தத்தை மட்டும் தொனிப்பதில்லை. மாறாக, அதனை விரிந்த கருத்தில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும், தீனுல் இஸ்லாத்தினதும், அதனது ஷரீஅத் சட்டத்தினதும் ஆளுகைக்கும் செல்வாக்கிற்கும் உட்பட்ட வீடே அல்லாஹ் நினைவு கூறப்படும் வீடாகும்.
இந்த வகையில் ஒரு வீட்டின் குடும்பத் தலைவன், குடும்பத்தலைவி, பிள்ளைகள் ஆகியோரது சிந்தனையை, எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தைகளை, கருத்துக்களை, தீர்மானங்களை தீனுல் இஸ்லாம் ஆள வேண்டும். வீட்டின் ஆதிக்கச் சக்தியாக பெண்ணியமோ, ஆணாதிக்கமோ, மனோ இச்சையயோ, மூதாதைகளின் பழக்க வழக்கங்களோ, பெரும்பான்மை சமூகத்தின் நடத்தைகளோ இருக்கக் கூடாது. தீனுல் இஸ்லாம் மட்டுமே வீட்டில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்க வேண்டும். இதுவே அல்லாஹ் நினைவு கூரப்படும் வீடாகும்.
இதனைத் தொடர்ந்து அவ்வீடு தனிப்பட்ட இபாதத்துக்கள் நிறைவேற்றப்படும் தலமாக இருக்கும். அங்கு ஆரம்பமாக தொழுகை நிலைநிறுத்தப்படும். அதற்காக அங்கு பிரத்யேகமாக அறை இருக்கும் இதனையே அல்குர்ஆன்.
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும், மிஸ்ரிலே (எகிப்து) அவர்களது சமூகத்தாருக்கும் வீடுகளை ஏற்படுத்தி அவ்வீடுகளை மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள் என்றும், அன்றியும் விசுவாசங் கொண்டோருக்கு நன்மாராயம் கூறுமாறும் வஹி அறிவித்தோம். (யூனுஸ் : 87).
தீனின் தூண் தொழுகையாகும். அது நிலைநாட்டப்பட்டால் தான் தீனின் ஏனைய பகுதிகள் உறுதியாக நிலைநிறுத்தப்படும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தீன் நிலைநாட்டப்படும் வீட்டின் இலட்சனத்தை பின்வருமாறு விவரித்தார்கள்.
தனது மனைவியை நித்திரையில் இருந்து விழித்தெழச் செய்தான் ஒரு கணவன். அவள் நித்திரையிலிருந்து விழித்தெழ மறுத்த போது அவன் அவளது முகத்திலே தண்ணீரைத் தெளித்தான். அப்போது அவள் எழுந்து நின்று தொழுதாள். அவனும் தொழுதான். அத்தகைய கணவனுக்கு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக. (அஹ்மத், அபூதாவூத்).
தீன் நிலைநாட்டப்படும் வீட்டின் தலைவன் தனது நேரடி பரிபாலிப்பில் உள்ளவர்களை இபாதத்துக்கள் செய்யுமாறு கட்டளை பிறப்பிப்பான். இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். வித்ரு தொழும் நேரம் வந்து விட்டால்,
ஆயிஷாவே! எழுந்திருங்கள்! வித்ரு தொழுங்கள் என்று கூறுவார்கள்.
என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்ளக். (முஸ்லிம்).
அல்லாஹ்வின் மார்க்கம் ஆதிக்கம் செலுத்தும் வீட்டில் ஐஷத்தானிய ஆதிக்கத்திற்கு இடமிருக்க மாட்டாது. படுமோசமான, ஆபாசமும், அபத்தமும் நிறைந்த ஐஷத்தானிய ஓலம், சினிமாப் படங்களின் சத்தம், தொலைக்காட்சித் தொடர்களின் ஆராவாரம் ஆகியவற்றுக்குப் பகரமாக குர்ஆன் ஓதும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஸுரத்துல் பகரா) பாராயணம் செய்யப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். (முஸ்லிம்).
அஷ்அரீ கோத்திரத்தாரின் இல்லங்களை குர்ஆன் ஓதும் சத்தம் மூலம் இனங் கண்டு கொள்வேன், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அக்கால ஸஹாபா சமுதாயத்தின் வீடுகள் அல்லாஹ்வின் பெயர் ஒலிக்கப்படும் வீடுகளாய் அமைந்து காணப்பட்டன என்பதற்கு இது சான்றாகத் திகழ்கிறது. எமது வீடுகள் இபாதத்துக்கள் நிறைவேற்றப்படாத கபுறுகளாக இருக்கக் கூடாது. அவை கிப்லாக்களாக இருக்க வேண்டும்.
இறைவனின் நாம் சதாவும் உச்சாடனம் செய்யப்படும் வீடுகளே உயிருள்ள வீடுகள். மேலும் வீட்டு விவகாரங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் கருத்து, அவனது தீர்மானம், அவனது ஏவல், அவனது விலக்கல்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் வீடுகளே தீன் நிலைநாட்டப்படும் வீடுகள். அல்லாஹ்வின் பெயரொலிக்கும் வீடுகள், உயிரோட்டமுள்ள வீடுகள்.
தீன் நிலைநாட்டப்படும் உயிருள்ள வீடுகளில் நோன்பு அதிகமாக நோற்கப்படும். அங்கு வாரி வழங்கும் உயர்ந்த கரங்கள் அதிகமாக இருக்கும். குடும்பத் தலைவிகள் தங்களது வீடுளை தான தர்மங்களால் மனங்கமழச் செய்ய வேண்டும் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பெண்களே! நீங்கள் தான தர்மம் செய்யுங்கள். நரகவாதிகளில் அதிகமானோராக உங்களை நான் கண்டேன். (புகாரி)
ஒரு முஸ்லிமுடைய வீட்டின் பண்பாட்டை தீனுல் இஸ்லாம் ஆட்சி செய்ய வேண்டும். ஒரு குடும்பத் தலைவன் அல்லது குடும்பத் தலைவி தனது மனோஇச்சை தீர்மானத்திற்கு வருகின்ற பண்பாட்டையோ அல்லது சினிமாவும், புறச்சூழலும் வகுத்தளிக்கும் பண்பாட்டையோ அமுல்நடத்தாமல் தீனில் வழிகாட்டலின் கீழ் அமைந்த பண்பாட்டை வளர்க்க வேண்டும். இரக்கம், அன்பு, பாசம், நேசம், சகோதரத்துவம், புரிந்துணர்வு, வாய்மை, போன்ற நற்குணங்களின் இருப்பிடமாக அவ்வில்லம் இருக்க வேண்டும். பொய், புறம், கோள், அவதூறு, ஆணவம், பொறாமை முதலான நற்குணங்கள் கத்தரிக்கப்பட்ட வீடுகளே தீனின் ஆளுகைக்குட்பட்ட வீடுகள். அபூஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
எனது வீட்டில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது எனது தாய், இங்கே வா உனக்குத் தின்பண்டம் தருகிறேன்! என அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். நீ கூறிய பிரகாரம் அந்தத் திண்பண்டத்தை நீ கொடுக்கவில்லையாயின் உனது பெயர் பொய்யர்களின் பட்டியலில் இடம்பெறும் என்றார்கள்.
பண்பாட்டுத் துறையில் மார்க்கம் நிலைநாட்டப்பட்ட பாங்கினை இச்சம்பவம் தெளிவுபடுத்துகிறது. தீனின் ஆளுகைக்குட்பட்ட வீட்டின் அங்கத்தினர் பரஸ்பரம் வழங்கிக் கொள்கின்ற சான்றே நற்சான்றாகும். மற்றோர் கொடுக்கின்ற சான்றை விட வீட்டார் கொடுக்கின்ற சான்றே பொருத்தமானதாகும். ஏனெனில் வீட்டிலுள்ளோர் வெளியுலகத்திற்கு தம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ளவே பெரிதும் முயற்சிப்பர். தமது கணவராகிய ரஸுல் (ஸல்) அவர்கள் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் பல் துலக்குவார்கள் என்றார்கள். அண்ணலார் வீட்டில் இருந்தால் என்ன செய்வார்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் தமது மனைவிமாருக்கு உதவியாக வீட்டு வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ரத்தினச் சுரக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களது பண்பாடு குர்ஆனாக இருந்தது, என்ற தனது கணவர் பற்றி சான்று பகர்ந்தார்கள்..
கணவன் - மனைவி பரஸ்பரம் ஆற்ற வேண்டிய கடமைகள், உரிமைகளில் தீன் ஆட்சி செய்ய வேண்டும். மாறாக, பெண்ணியமும், ஆணாதிக்கமும் இவைகளை ஆளக் கூடாது. தீனின் செல்வாக்கினால் பாதிக்கப்டட கணவன் அல்லது மனைவி தமது கடமைகள், உரிமைகள் பற்றி சிந்தனைத் தெளிவை அல்குர்ஆன், அல் ஹதீஸ் வாயிலாகப் பெற்று, அறிந்து, தெளிந்து அதை அமுல் நடத்த வேண்டும். இங்கு இருவரினதும் சுயகௌரவம், தன்மான உணர்ச்சி குடும்ப அந்தஸ்து, மரபுகள் சம்பிரதாயங்கள், அவர்களது உரிமைகள், கடமைகளைத் தீர்மானிக்கக் கூடாது.
முதலில் கணவன் தனது மனைவி பற்றிய புரிதலை மணவாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொளள் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றள். விலா எலும்பில் மிகவும் கோணலான பகுதி மேல் பகுதியாகும். அதை நிமிர்த்த முனைந்தால் நீ அதனை உடைத்து விடுவாய்! உடைந்து விடுமே என்று நிமிர்த்தாது விட்டால் அதன் கோணல் தொடர்ந்திருக்கும். எனவே, பெண்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். (புகாரி, முஸ்லிம்).
எனவே, தனது இயல்பு, சுபாவம், உயர்வு, உயர்ச்சி முதலான விசயங்களில் தன்னைப் போல் தனது மனைவி இருக்க வேண்டும் என ஒரு காணவர் எதிர்பார்க்கலாகாது. அவ்வாறே மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளை அறிந்துணர்ந்து ஆற்றிட வேண்டும்.
முஅவியா இபுனு ஹைதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமை என்ன? என்று கேட்டார். நீ சாப்பிட்டால் அவளுக்கும் உணவளிப்பாயாக! நீ உடை அணிந்தால் அவளுக்கும் உடை அணிவிப்பாயாக! அவளது கன்னத்தில் அறைந்து விடாதே! அவளை வீட்டிலன்றி வேறொரு விடயத்தில் வெறுத்தொதுக்கி வைத்து விடாதே! அல்லாஹ் உன்னை அசிங்கப்படுத்துவானாக என்று சபித்து விடாதே! என்று அண்ணலார் பதிலளித்தார்கள். (அபூதாவூத்).
இந்த வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் ஆணாதிக்கத்திற்கு சிறிதும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
அவ்வாறே மனைவி தனது கணவன் பற்றிய புரிதலோடு வாழ்வைத் துவங்க வேண்டும். அண்ணலார் கணவனின் மகிமை பற்றிஇவ்வாறு குறிப்பிட்டார்கள்.
ஒருவரை இன்னொருவருக்கு சுஜுது செய்து சிரம் தாழ்த்த வேண்டும் என்று ஏவுவதாக இருந்தால், பெண்ணை கணவனுக்குச் சுஜுது செய்யுமாறு நான் ஏவியிருப்பேன். (திர்மிதி)
மனைவிமார் உங்களுக்கு வழங்க வேண்டிய உரிமை என்னவென்றால் நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் படுக்கையில் கால்மிதிக்க அனுமதிக்கக் கூடாது. நீங்கள் விரும்பாத யாரையும் உங்கள் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
இது மனைவி கணவனுக்கு வழங்க வேண்டிய உரிமை, அவள் தனது கற்பையும், கணவனது கற்பையும், கணவனின் சொத்தையும், அவனது உணர்வையும் உணர்ச்சியையும் பாதுகாக்கக் கூடிய குலவிளக்காகத் திகழ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு கணவன் தன் மனைவியை படுக்கையை நோக்கி அழைத்து அவள் மறுத்து அவள் மீது கோபம் கொண்ட நிலையில் அவன் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கின்றளர். (புகாரி, முஸ்லிம்).
இந்தக் ஹதீஸ் கணவனின் உணர்வைக் காப்பாற்றும் பாரிய கடமை மனைவிக்கு உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருமனைவி அவள் அவளது கணவன் அவளைத் திருப்தி கொண்ட நிலையில் மரணித்தால் அவள் சுவனம் நுழைவாள். (திர்மிதி).
ஒரு வீடு விதவையைக் குடும்பத் தலைவியாக் கொண்டிருக்குமென்றால் அவள் மறுமணம் செய்து வைக்கப்படல் வேண்டும். குறிப்பாக இளம் வயதை உடையவளாக இருந்தால் மறுமணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடும். தீன் வீட்டில் நிலை நாட்டப்படாத வீடுகள் மறுமணம் செய்ய இயலாத விதவைகளின் உளக் குமறல்களினால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இவ்வாறே பிள்ளை வளர்ப்பு, திருமணம் செய்து கொள்ள ஆகுமாக்கப்படாதோர் (மஹ்ரமிகள்), ஆகுமாக்கப்பட்டோர் (அஜ்னபிகள்) உறவுகள், சுயஉழைப்பு, உழைப்பில் ஹலால் - ஹராம் பேணுதல், குடும்ப வாழ்க்கையை எளிமையாக அமைத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற எல்லா நிலைகளிலும் தீனில் செல்வாக்கின் கீழ் வந்து விட்ட வீடே தீன் நிலை நாட்டப்பட்ட வீடாகும்.
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer