ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும் வரைச்சட்டங்களே இந்த ஐந்து தூண்கள்! இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு (மூலம் நலிந்தோர் மீதான அக்கரை), ஜகாத் (மூலம் பொருளாதார தூய்மை), வசதி படைத்தோர் மக்கா மாநகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவையே அந்த வரைச்சட்டங்கள்!
1. இறைநம்பிக்கை
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ்!
அல்லாஹ் (எனும்) ஏக இறைனைத் தவிர
வேறு இறைவன் இல்லை!
முஹம்மத் (ஸல்) அவர்கள்
அவனுடைய (இறுதித்)தூதர் ஆவார்கள்.
இறைநம்பிக்கையின் அடிப்படை அம்சமான இந்த பிரகடனம்“ஷஹாதத்” எனப்படுகின்றது. இறைநம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் பூரண நம்பிக்கையுடன் மொழியும் ஒரு கொள்கைப் பிரமாணமே அது! இந்த கொள்கைப் பிரகடனத்தின் முதல் பகுதியானலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதைக் கவனியுங்கள்.
அரபுமொழியில் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் ‘வேறு இறைவன் (யாரும், எதுவும்) இல்லை, அல்லாஹ் எனும் ஏக இறைவனைத் தவிர!’
விளக்கமாகச் சொன்னால், வேறு எவரோ அல்லது எந்த பொருளோ அல்லது எந்த ஒரு அதிகாரமோ அல்லது எந்த ஒரு செல்வ வளமோ எதுவொன்றுமே இறைவனாக – அல்லாஹ் வாக ஆக முடியாது!
அடுத்து வருவது, இல்லல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர! அதாவது படைப்பினங்கள் அனைத்தின் மூலகர்த்தாவாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை!
இக்கொள்கைப் பிரகடனத்தின் அடுத்த பகுதி முஹம்மத் ரஸூலுல்லாஹ் - முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அதாவது, மனிதகுலம் முழுவதற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு நற்செய்தி நம்மைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக இறைவனிடமிருந்து வந்திருக்கின்றது என்பதே இதன் விளக்கமாகும்!
2. தொழுகை
ஸலாத்! இதன் பொருள் இதுவே:- மேற்குறிப்பிட்ட ஒப்புவமை இல்லாத ஏக இறைவனுக்காக நிறைவேற்றப்படும் வழிபாட்டு முறையே இது! இதனையே நாம் தொழுகை என்கின்றோம். இது ஒவ்வொரு நாளும் ஐவேளைகள் நிறைவேற்றப்படுகின்றது!
வணக்கவாளிக்கும், அந்த வணக்கத்திற்குரியவனான படைத்த ஏக இறைவனுக்கும் இடையிலான நேரடித் தொடர்பே தொழுகை எனும் இந்த வழிபாடு! வழிவழியாய் வருகின்ற புரோகிதர் முறையை இஸ்லாம் எந்நிலையிலும் அனுமதித்தது கிடையாது! அதேபோன்று முற்றும் துறந்த முனிவர்களுக்கும் இம்மார்க்கத்தில் இடமில்லை! திருக்குர்ஆன்ஓதத் தெரிந்த ஒரு சாதாரண முஸ்லிம் கூட இந்தத் தொழுகையை வழிநடத்திச் செல்ல முடியும்.
இந்த ஐவேளைத் தொழுகையும் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழியிலேயே ஓதப்படுகின்றது. எனினும் தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு இறைவனிடம் ஒருவர் இறைஞ்சினால், தாம் அறிந்த மொழியைக் கொண்டே வேண்டலாம்!
இறைக்கட்டளையின்படி நிறைவேற்றப்படும் கடமையான தொழுகைகள் அதிகாலை, மதியம், மாலை, சூரிய அஸ்தமனம் மற்றும் இரவு வேளைகளிலவற்றுக்கே உரிய ஒழுங்குடனும், முறையுடனும் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்படுகின்றன!
ஒரு முஸ்லிம் தான் வசிக்கும் இல்லங்களில், தான் பணியாற்றும் அலுவலகங்கள் – தொழிற்சாலைகள், தான் கல்வி பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் – பல்கலைக் கழகங்களிலென்று பரந்து விரிந்த பூமியின் தூய்மையான எப்பகுதியிலும் தனது தொழுகைகளை நிறைவேற்றிட முடியும். எனினும், வழிபாட்டுக்கென நிர்ணயிக்கப்பட்ட மஸ்ஜிதுகள்எனும் இறையில்லங்களுக்கு சென்று இதர முஸ்லிம் சகோதரர்களுடன் கூட்டாக ஓரணியில் நின்று தொழுவதே சிறப்புடையதும், அதிக நன்மையை ஈட்டித் தரக்கூடியதுமாகும்!
முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்யும் மாற்று மதத்தவர்கள், அவர்களின் தினசரி வாழ்வோடு கலந்து விட்ட இத்தகைய கூட்டு வழிபாட்டு முறையைக் கண்டு வியப்புறுகிறார்கள். இஸ்லாமிய வழிபாடு அவர்களிடையே பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினால், அது மிகையல்ல!
3. ஜகாத்
இஸ்லாம் போற்றும் அடிப்படையான கொள்கைகளில் இதுவும் ஒன்று!
இப்பிரபஞ்சத்தில் வியாபித்து இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே! மனிதனிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தும் இறைவன் அவனிடம் ஒப்படைத்துள்ள அமானிதமே அன்றி வேறில்லை!
ஜகாத் எனும் சொல் தூய்மைப்படுத்தல் மற்றும் வளர்தல் ஆகிய பொருள்களைக் கொண்டது. நமது உடைமைகளில் இருந்து இறைவன் நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி ஒரு குறிப்பிட்ட அளவை தேவையுடையோர்க்குத் தந்து உதவுவது வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமின் கடமை!
முஸ்லிம் ஒருவரின் இத்தகைய செயலால், இறைவன் அவர்களுடைய செல்வங்களைத் தூய்மைப் படுத்துகின்றான். அது மட்டுமல்ல, களை எடுக்கப்பட்ட தாவரங்கள் செழிப்பாக வளர்வது போன்று, தூய்மைப் படுத்தப்பட்ட இந்த செல்வ வளங்கள் ஜகாத் வழங்குவதன் மூலம் மேலும் வளர்கின்றன.
அதுமட்டுமல்ல, செலவு செய்யப்பட்ட இந்த செல்வம் பின்னர், அதிகப்படியான வருவாயாக அவருடைய கணக்கில் எழுதி வைக்கப்படுகின்றது. வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் ஹன்னுடைய செல்வங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஜகாத்தை தாமே வழங்குகின்றார்கள். ரொக்கமாக இருக்கும் பணத்தில் 21.2 சதவீத அளவு ஜகாத்தாக வழங்குவதும் இதில் அடக்கம்! நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக, இறையச்சமுள்ள ஒரு முஸ்லிம் தனது விருப்பப்படி தேவையுடையோருக்கும், வறியோருக்கும் தர்மமாக வழங்குகின்றார். இது ஸதகா எனப்படுகின்றது. இத்தகைய தர்மங்கள் இரகசியமாக நிறைவேற்றப்படுவது சிறப்பு!
இந்த ஸதகா எனும் சொல் விருப்ப தர்மம் எனும் பொருளில் வழங்கப்பட்டாலும், உண்மையில் இச்சொல் மிக விரிவான பொருளைக் கொண்டது.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அருளினார்கள்:-
உன்னுடைய சகோதரனைப் பார்த்து
புன்முறுவல் பூப்பதும் ஒரு தர்மமே!
மேலும் கூறினார்கள்:-
“தர்மம் என்பது ஒவ்வொரு முஸ்லிமும்
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!”
அப்போது வினவப்பட்டது:-
“(ஸதகா) வழங்குவதற்கு ஒருவரிடம்
எதுவும் இல்லையென்றால்……..?
முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:-
“(ஒருவர்) தனது கைகளால் சுயமாக
தானே சம்பாதித்தவற்றில்
தனது தேவைக்கு வைத்துக் கொள்ளட்டும். பிறகு,
அதிலிருந்து சிறிதை தர்மம் செய்யட்டும்!”
மீண்டும் வினவினர்:-
“அவரால் (உழைக்க) – பணிபுரிய
இயலவில்லை என்றால்…….?
மீண்டும் பதிலளித்தார்கள்:-
“அத்தகையோர் ஏழைகளுக்கும் தேவையுடையோர்க்கும் உதவி புரியட்டும்!”
நபித்தோழர்கள் மேலும் வினவினார்கள்:-
“அவரால் அதனையும் செய்ய இயலாவிட்டால்……?
முஹம்மத் (ஸல்) அவர்கள் (அதற்கு) பதிலளிக்கையில், “நன்மை
புரியும்படி பிறரைத் தூண்ட வேண்டும்!” என்றார்கள்.
நபித்தோழர்கள்,
“அதனைச் செய்யவும் அவரால் இயலவில்லையெனில்….? என கேட்டபோது முஹம்மத் (ஸல்) அவர்களின் பதில் இவ்வாறு இருந்தது:-
“தீயவற்றை புரிவதிலிருந்து
அவர் தம்மைத் தடுத்துக் கொள்ளட்டும்.
அதுவும் ஒரு தர்மமே!
4. புனித நோன்பு
வருடந்தோரும் புனித ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நோன்பு நோற்கின்றனர். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் ஆரம்பித்து அந்தி சாயும்வரை கடைப்பிடிக்கப்படும் இத்தகைய நோன்பின் போது, முஸ்லிம்கள் உண்ணுதல், பருகுதல் ஆகியவற்றிலிருந்தும் உடலுறவில் ஈடுபடுவதிலிருந்தும் விலகி நிற்கின்றார்கள்.
எனினும் முதியோர், நோயுற்றோர், பயணத்தில் இருப்போர், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இந்த கடமையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். என்றாலும், அவர்கள் வருடத்தின் பிற நாட்களில் விடுபட்ட இந்த நோன்பினைப் பூர்த்தி செய்ய வேண்டும். உடல்ரீதியாக இதனை நிறைவேற்ற அவர்களால் இயலவில்லையெனில், விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவு வழங்க வேண்டும். வயது வந்த சிறுவர் – சிறுமியரும் நோன்பு நோற்கவும் (தொழுகையை நிறைவேற்றவும்) செய்கின்றனர். எனினும், அவர்களில் பலர் இளவயது முதற்கொண்டே இதனைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
உடலுக்கு நலம்பயக்கின்ற ஒரு சிறந்தே மருந்தே நோன்பு! அது மட்டுமல்ல, தம்மை உளத்தூய்மைக் கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் ஒரு சிறந்த வழிமுறையாகவும் நோன்பு அமைந்திருக்கின்றது.
நோன்பு நோற்கும் ஒரு முஸ்லிம், ஒரு சிறு கால அளவில் உணவு, உடலுறவு ஆகியவற்றிலிருந்து இன்னபிற உலகியல் தேவைகளிலிருந்தும் தன்னை விலக்கி வைத்துக் கொள்கின்றார். இவ்வாறு செய்வதன் மூலம் பசிபட்டினியால் வாடும் வறியோரின் நிலையை தானும் உணர்கின்றார். இவ்வாறு ஒரு நோன்பாளி உணவையும் இன்னபிற ஆகுமான தேவைகளையும் ஒதுக்கி வாழ்ந்தாலும், உண்மையில் அவருடைய ஆன்மிக வாழ்வு முன்னேற்றப் பாதையில் நடபோட ஆரம்பிக்கின்றது!
5. (ஹஜ்) புனிதப் பயணம்
ஸவூதி அரேபியாவின் மக்கா மாநகரில் அமைந்த கஅபா எனும் உலகின் முதல் இறை இல்லத்துக்கு புனிதப் பயணம் செல்வது வசதியும் உடல் நலனும் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. பரந்து விரிந்த பூமியின் நாலாப்புறங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 20 இலட்சம் முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் இந்த இறையில்லத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். வேறுபட்ட பல தேசங்களிலிருந்தும் இன, மொழி, வர்ண மாச்சர்யமின்றி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்த ஹஜ் எனும் சகோதரத்துவ மாநாடு ஏற்படுத்தித் தருவது எத்துணை பெரிய விஷயம்..!
மக்கா மாநகரம் வருடந்தோறும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தாலும், ஹஜ் எனும் புனிதப்பயணக் கடமை ஆரம்பமாவது, இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல்ஹஜ் மாதத்தில் தான்! (இஸ்லாமிய நாட்காட்டி சந்திரனை அடிப்படையாக வைத்து – Lunar Calendar கணிக்கப்பட்டது. இதனால், இந்த துல்ஹஜ் மாதம் கோடையிலும் குளிரிலும் மாறி மாறி வரும்!)
ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வணக்கவாளிகள் அதற்குரிய எளிமையான வெள்ளைச் சீருடையை அணிகின்றார்கள். இதன் மூலம் இறைவன் முன்பாக மக்கள் அனைவரும் சமம், அவர்கல் மத்தியில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும், பண்பாட்டு வேற்றுமையும் பாராட்டப்படக்கூடாது எனும் உணர்வு மேலோங்கச் செய்யப்படுகின்றது.
இந்த ஹஜ் எனும் புனிதப் பயணத்தை நிறைவேற்றும் சடங்கின் தோற்றுவாய் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலகட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. இப்புனிதப் பயணத்தின் முக்கிய கடமைகளில் சில:-
‘கஅபா’ – இறையில்லத்தை ஏழு முறை வலம் வருதல்
இப்ராஹீம் (அலை) அவர்களின் துணைவியரான ஹாஜிரா (அலை) அவர்கள் குடிநீருக்காக ஸஃபா – மர்வா குன்றுகளுக்கிடையே ஓடி அலைந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாக அவ்விரு குன்றுகளுக்கிடையில் ஓடுதல்.
அடுத்து, அரஃபா எனும் பரந்து விரிந்த ஓர் திறந்த வெளியில் ஒன்று கூடுவார்கள். இறைவனிடம் பாவமன்னிப்பைக் கோரி மனம் உருகிப் பிரார்த்திப்பார்கல். இறைவனின் இறுதித் தீர்ப்புக்காக கூடியிருக்கும் மறுமைநாளை நினைவுபடுத்தும் ஒரு முன்னோட்டமாக இந்த ஒன்றுகூடும் நிகழ்ச்சி அமைந்திருப்பது ஒவ்வொருவருடை உணர்வையும் சிலிர்த்திட வைக்கும். கடந்த நூற்றாண்டுகளில் ஹஜ் நிறைவேற்ற பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று மக்கா மாநகர் அமைந்த சவூதி அரேபிய அரசாங்கம் இலட்சோபலட்சம் புனிதப் பயணிகளுக்குத் தேவையான நவீன வசதிகள், குடிநீர், மற்றும் மருத்துவ வசதிகள் என்ற அனைத்தையும் கச்சிதமாக செய்து தருகின்றார்கள்.
ஈதுல் அல்ஹா எனும் தியாகத்திருநாள் கொண்டாட்டத்துடன் இந்த ஹஜ் புனிதக் கடமை நிறைவுக்கு வருகின்றது. அந்நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றியும், அன்பளிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொள்கின்றார்கள்.
இந்தப் பண்டிகை நாளும், புனித ரமலான் மாத நோன்பை நிறைவு செய்து கொண்டாடும் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளும் இஸ்லாமிய நாட்காட்டியில் போற்றப்படும் இருபெரும் பண்டிகைகளாகும்.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer