அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர்.
ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார்.
இஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்.
இது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு....
"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.
அல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.
நான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன்.
என் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும்?, ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்?
என் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள்.
இப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?"
சிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.
இறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன்.
இஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம்.
தன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது.
இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.
சுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.
குரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன்.
சந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது.
இங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது.
மத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள்.
இருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.
அதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.
இஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம்.
நான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.
இன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....
ஏஞ்சலா கொலின்ஸ்"
சகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....
மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer